#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவான்மியூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவான்மியூர்
120.#அருள்மிகு_மருந்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : மருந்தீஸ்வரர்
உற்சவர் : தியாகராஜர்
அம்மன் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் : வன்னி
புராண பெயர் : திருவான்மீகியூர், திருவான்மியூர்
ஊர் : திருவான்மியூர்
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு :
ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க திருவான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும் என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ணநாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும் அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்துள்ளார். வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டுள்ளார். அகத்திய முனிவருக்காக ஒரு முறையும் வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.
கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியர் வந்த போது திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும் அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடனுடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர் அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு தனக்கு விமோசனம் கேட்க இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால் இங்குள்ள இறைவன் பால்வண்ணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம் அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் காணப்படுகின்றன.
மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதியும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளது. தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி கோஷ்ட மூர்த்தங்களாக காட்சி தருகின்றனர்.
கோயில் சிறப்புகள் :
•இத்தலத்தில் இறைவன் தீண்டாத் திருமேனியாய் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம் அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன.
•கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி திருந்தி தனது பாவங்கள் போக இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை அவர் சிவனை தரிசிக்க வந்தபோது அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட சுவாமியின் தலையிலும் மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.
•தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். வால்மீகி இறைவனை தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார். அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருக்கிறது.
•அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் “மருந்தீஸ்வரர்’ எனப்படுகிறார்.
•உயிரினங்களுக்கு ஏற்படும் 4448 வகை நோய்களின் தன்மைகள், அவற்றைப் போக்கும் மூலிகைகளின் வகைகள் மற்றும் அவற்றை உபயோகிக்கும் முறைகளைப் பற்றி அகத்திய முனிவருக்கு இறைவன் உபதேசித்ததால் இத்தலத்து இறைவனுக்கு ‘மருந்தீசர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
•பிரகாரத்தில் அகத்தியருக்கும் வால்மீகிக்கும் சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
•அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், “சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?’ என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
•தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.
•அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்களுக்கு, முசுகுந்த சக்கரவர்த்தி உதவி செய்ததால் இந்திரனிடம் இருந்து பத்து தியாகராஜர் திருவுருவங்களைப் பெற்றார். அவற்றில் ஏழு திருவுருவங்களைத் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நிறுவினார். அவை ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று திருவுருவங்களை தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியாகராஜரை ‘ஆடும் தியாகர்’ என்று அழைப்பர். இவர்தான் வன்னி மரத்தடியில் வான்மீக முனிவருக்கு நடனக் காட்சி தந்தருளியவர். இன்றும் விசேஷ நாட்களிலும், திருவிழாவின் முக்கிய நாளிலும் தியாகராஜப் பெருமானின் பதினெட்டு நடனக் காட்சி நிகழ்கிறது.
•இக்கோயிலுக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் பாம்பன் சுவாமிகள் சமாதிக் கோயில் உள்ளது. கிழக்கு மாட வீதி வழியாக நடந்து சென்றால் அரை கி.மீ. தொலைவில் உள்ளது.
•அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
•திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
•இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
•வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.
திருவிழா:
பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை.
திறக்கும் நேரம்:
காலை 6மணி முதல் மணி 12வரை,
மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர்,
சென்னை-600 041.
போன்:
+91 – 44 – 2441 0477.
அமைவிடம் :
சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது.
#Thiruvanmiyur #marunthiswarar #templesofsouthindia #templesoftamilnadu #sivantemple #templehistory #historyoftemples #templesinchennai #chennaitemples #templesofsivan #திருவான்மியூர் #மருந்தீஸ்வரர் #தியாகராஜர் #templesinthiruvanmiyur #ஸ்தலவரலாறு #ஆலயம்அறிவோம் #சிவன்கோயில்கள் #Maruntheeswarar #சென்னைகோயில்கள் #கோவில் #SriAandalVastu #DrAndalPChockalingam #kovilvastu