#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி

May 22, 2023 0 Comments

 

மூலவர் : பாலுகந்தநாதர்
அம்மன் : பெரியநாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி
ஊர் : திருவாய்பாடி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு :
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் விசாரசர்மர் விளையாடிக்கெண்டு இருந்தார். அப்போது ஒருபசு தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. இடையன் தன் கையிலுள்ள அப்பசுவை அடித்தான். விசாரசர்மரை அவனைக் கண்டித்து அவ்வூர் வேதியர்களின் அனுமதியுடன் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். விசாரசர்மரால் அன்பாக மேய்க்கப்பட்ட ஆநிரைகள் அதிகமான பாலைச் சொரிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர்.
இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப் பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் ஆ (பசு) மேய்த்த தலமாதலால் ஆப்பாடி ஆனது. 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
ஆப்பாடியில் இருந்த இடையர் குலத்தை சேர்ந்த ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வழியில் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பால்குடம் கவிழ்ந்தது. தினந்தோறும் இது போல் நடப்பதால் கோபம் கொண்ட இடையன் கையிலிருந்த அந்த இடத்தை அரிவாளால் வெட்டினான். அந்த இடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதி படிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தத்தை தணித்த இறைவன் இன்னருள் புரிந்தார். இந்த இடத்திலே இருந்து வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு கோவில் எழுப்பப்பட்டது.
கோயில் சிறப்புகள் :
•திருவாய்ப்பாடி. புராண பெயர் வீராக்கண் திருஆப்பாடி. மூலவர் பாலுகந்தநாதர் பாலுகந்த ஈஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பிருகந்நாயகி பெரியநாயகி.
•கோவிலில் கொடிமரம் இல்லை. கோவிலுக்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது.
•முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஷப வாகனத்தில் இறைவனும் இறைவியும் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும் முருகரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
•தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார்.
•கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர் முருகர் மகாலட்சுமி விநாயகர் சுப்ரமணியர் சனீஸ்வரர் பைரவர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
•கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடும் முறையில் தனிக் கோயிலில் உள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருக்கிறது..
•மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.
•.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 40 வது தேவாரத்தலம் ஆகும்.
•சிவாலயங்களில் நடைபெறும் அர்த்தசாம பூஜையின்போது இறுதியாக சண்டிகேஸ்வரருக்கும், பைரவருக்கும் தீபாராதனை காட்டி முடித்த பின்னரே ஆலயத்தை மூடும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
•சிவபெருமானுக்குப் படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளுக்கு அதிபதியான இவர், சதாநேரமும் தியானத்தில் இருப்பவர். சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் இவர் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக ஐதீகம். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்ற கருத்தின் அடிப்படையில், சிவாலய வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வருவோர், ஆலயத்திலிருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவர் திருச்சன்னிதி முன் நின்று இருகரங்களையும் விரித்துக் காட்டி பின் ஒன்றோடொன்றாய் தேய்த்து வெறுங்கையாகச் செல்கிறோம் என்பதாக உணர்த்திவிட்டு வணங்கிச் செல்வது வழக்கம். இதுவே நாளைடைவில் கைதட்டலாகவும், சொடுக்குப் போடுவதாகவும் உருமாறியது.
திருவிழா:
சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்
திருவாய்ப்பாடி – 612 504.
திருப்பனந்தாள் போஸ்ட்.
திருவிடைமருதூர் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 94421 67104
அமைவிடம் :
கும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களிலிருந்து திருவாய்ப்பாடிக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து சேத்தியாதோப்பு மார்க்கமாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருவாய்ப்பாடி வழியாகவேச் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =