#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா

May 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா
106.#திருக்கோலக்கா_அருள்மிகு_சப்தபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சப்தபுரீசுவரர்
அம்மன் : ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
தல விருட்சம் : கொன்றை
புராண பெயர் : சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
ஊர் : திருக்கோலக்கா
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்தருளினார் எனவும் எனவே, இத்தலம் “திருக்கோலக்கா’ என அழைக்கப்படுவதாக புராணவரலாறு தெரிவிக்கிறது.
அங்கயற்கண்ணியாம் அகிலாண்டேஸ்வரி ஊட்டிய ஞானப்பாலைப் பருகி, ஊறிய தமிழ்ப் பெருக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் உலகம் வியக்கும் தேவாரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இல்லையா! அன்றிரவு, தோணியப்பரின் நினைவுடன் துயின்ற திருஞானசம்பந்தர்,
மறு நாள் காலை பொழுது புலரத் தொடங்கியதும் திருக்கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை வணங்கினார். இறைவன் அருளால், பக்கத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
திருஞானசம்பந்தர் கோலக்காவுக்கு வந்தார்.
வேதத்தின் விழுப்பொருளாம் விடையேறு நாயகனை தரிசித்தார்; பாடத் தொடங்கினார்.
வெறுமே பாடுவாரா? கைத் தாள மிட்டுக் கொண்டே பாடினார். அன்பும் பக்தியும் இழையோட… சந்தமும் தாளமும் சதிராட… சீர்காழிக் கொழுந்து பாடப் பாட, பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட… தன் அன்புப் பிள்ளையின் பிஞ்சு கரங்கள், தாள வேகத்தில் சிவந்து போவதைப் பொறுப்பாரா பரமேஸ்வரனார்?
அஞ்செழுத்து (நமசிவாய பஞ்சாட்சரம்) எழுதப்பெற்ற ஆடகப் பொன்னால் ஆன தாளம், பிள்ளையின் பிஞ்சுக் கரங்களில் வந்து அமர்ந்தது. தலைமீது தாளத்தை வைத்து வணங்கிய திருஞானசம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார். பரமனார் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஒலியும் ஓசையும் கொடுத்தார் இந்த அதிசயத்தைப் பார்த்து, தும்புரு நாரதர் உள்ளிட்ட தேவ இசை வாணர்களும் முனிவர்களும் பிறரும் மலர் மாரி பொழிந்தனர்.
கோயில் சிறப்புகள் :
•திருக்கோலக்கா. புராணபெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில். மூலவர் சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•அம்பாள் ஓசை கொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள். அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது.
•காவிரி வடகரைத் தலங்களில் 17 ஆவது திருத்தலம். கிழக்கு நோக்கிய திருக்கோயில்; ஒரு திருச்சுற்று! திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சண்டிகேசுவரர், சூரியன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை தேவக்கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகளை கண்டு வழிபடலாம். திருக்கோயில் கட்டடக்கலை அமைப்பில் நகரத்தார் திருப்பணியைக் கண்டு மகிழலாம்.
•கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து தனியே கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் கருணைபொங்கும் முக அழகுடன் அபய கரம் தாங்கி காதுகளில் அழகிய ஸ்ரீ சக்ர தாடகங்களுடன் காட்சி தருவதைக் காணலாம்.
•திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு ஏற்றமிகு வாழ்வு, பாவம் விடுபடுதல், வாழ்வில் துயரமில்லா நிலை மற்றும் வினைகளும் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது.
•மந்தாகினி எனும் பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டுள்ளார். மேலும் இங்குள்ள கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வணங்கியுள்ளார். சிறிது காலத்தில் அந்தச் சிறுவன் பேசத் தொடங்கியிருக்கிறான் என்கிறார்கள் இந்தப் பகுதி பக்தர்கள். தன் மகன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தாய், நன்றிப் பெருக்குடன் இத்தல இறைவனுக்கு 42 கிராம் தங்கத்தில் தாளம் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார்.
•இப்படி வாய் பேச வராதவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளையும், இறைவனையும் தரிசித்துச் சென்றுள்ளனர். அதில் இறைவனின் அருளால் வாய் பேச வந்தவர்கள், கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர். இதன் எண்ணிக்கை 600-யைத் தாண்டிச் செல்கிறது என்பதே, இத்தலத்திற்கு இருக்கும் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது
•அகத்தியர் கண்வர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
•ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் விநாய கரும், முருகரும் துவார பாலகர்களாக இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
•அழகும், அமைதியும் ஒருங்கே நிலவும் அதி அற்புத திருத்தலமான திருக்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது.
•இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததன் பயனாக, மகாவிஷ்ணுவை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. திருமகள் திரு மணக்கோலம் கண்ட திருத்தலம் என்பதால் இது, ‘திருகோலக்கா’ என்று பெயர் பெற்றது.
•நவக்கிரகங்களின் தலைமை பதவியை சூரியனுக்கு, இந்த தலத்தில் தான் ஈசன் வழங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த பேரருளை சூரியன் பெற்ற நாள், கார்த்திகை மாத ஞாயிறு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சூரிய பூஜைசெய்ய, பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி அப்போது காட்சி தருகிறார்கள் இந்த ஆலயத்தின் முன்புறம் உள்ள திருக்குளமே, சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தமாக திகழ்கிறது.
•ஆண்டுதோறும் சித்திரைமாத திருவாதிரை நாளில் காலையில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் சம்பந்தருக்கு அம்பிகை ‘திருமுலைப்பால் வழங்கும் விழா’ நடக்கும். அன்று இரவில் சீர்காழி ஆலயத்தில் உள்ள சம்பந்தர் திருக்கோலக்கா திருத் தலம் வந்து பதிகம் பாடி, ஈசனிடம் ‘பொற்றாளம் பெறும் விழா’ வெகு சிறப்பாக நடைபெறும்.
•வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓர் காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில்,
திருக்கோலக்கா- 609 110,
சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364-274 175.
அமைவிடம் :
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.
#ThirukolakkaShivaTemple #thirukolakka #shivatemple #sapthapureeswarar #thiruthalamudayar #ஓசைநாயகி #temples #Thalapureeswara #தாளபுரீசுவரர் #thirugnanasambandar #Sirkazhi #templehistory #templesofsouthindia #templesofindia #temples #ஸ்தலவரலாறு #தலவரலாறு #திருக்கோலக்கா #வாய்பேசமுடியாதவர்கள் #திருஞானசம்பந்தர் #ஆலயம்அறிவோம் #templehistory #historyoftemples #கோயில்கள்வரலாறு #DrAndalPChockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =