#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திரு இந்தளூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திரு இந்தளூர்
மூலவர் : பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர்
தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி
தீர்த்தம் : இந்து புஷ்கரிணி
புராண பெயர் : திருஇந்தளூர்
ஊர் : திரு இந்தளூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் ஏகாதசி விரதம். அம்பரீசன் ஏகாதசியில் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி சரியான நேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம். நூறாவது ஏகாதசி விரத நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தேவலோகத்தில் அனைவரும் கலக்கத்துடன் இருந்தனர்.
நூறாவது ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு தேவலோகப் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மானிடனுக்கு அப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் தேவர்கள் உறுதியாக இருந்தனர். தேவர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர்.
துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தைத் தடுக்கும் பொருட்டு பூலோகத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் முழுப் பயன் அவனுக்குக் கிடைக்கும். அம்பரீசன் உணவு உண்ணத் தயாராக இருந்த சமயத்தில், துர்வாச முனிவர் உள்ளே நுழைந்தார். முனிவர் வந்ததால் அவரையும் உணவருந்த அழைத்தான் அம்பரீசன். முனிவரும் அதற்கு சம்மதித்து, நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரம் முனிவர் வராததை நினைத்து கவலை அடைந்தான் அம்பரீசன். குறித்த நேரத்தில் (துவாதசி நேரம் முடிவடைவதற்குள்) உணவு அருந்த வேண்டுமே என்று வேதியர்களிடமும் அந்தணர்களிடம் கலந்தாலோசிக்கலானான். நீராடிவிட்டு காலம் தாழ்த்தி வந்தால், அதற்குள் துவாதசி நேரம் முடிந்துவிடும், அம்பரீசனின் ஏகாதசி விரதம் தடைபட்டு விடும் என்ற எண்ணத்தில் இருந்தார் துர்வாச முனிவர். துவாதசி முடிய இன்னும் சில மணித் துளிகளே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசி விரதத்தின் முழுப் பயனும் கிடைத்துவிடும் என்று தலைமைப் பண்டிதரின் ஆலோசனையின் பேரில், அவ்வாறு செய்து, தன் விரதத்தை பூர்த்தி செய்து, முனிவருடன் உணவருந்தக் காத்திருந்தான் அம்பரீசன்.
இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாச முனிவர் மிகவும் கோபம் அடைந்தார். ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன் இச்செயலுக்கு அஞ்சி, பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். அனைத்து சம்பவங்களையும் அறிந்த துர்வாச முனிவர் பெருமாளிடம் மன்னித்து அருள வேண்ட, பெருமாளும் மன்னித்தருளினார். பின்பு, நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த அம்பரீசனிடம், “வேண்டியதைக் கேள்” என்றார் பெருமாள். அம்பரீசனும், “தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிய வேண்டும்” என்று வேண்ட, பெருமாளும் அவ்வண்ணமே இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
கோயில் சிறப்புகள் :
•தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த் திருநாட்டில் கங்கையை போல் புனிதமாகிய காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவைகள் முறையே திருவரங்க பட்டணம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பன திருஇந்தளுர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்
•ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயிலான இத்தலத்தின் வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. சந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
•பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் தலை அருகே காவிரித் தாயாரும், திருவடி அருகே கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும் அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.
•மூலவர் பரிமள ரங்கநாத பெருமாள், வீர சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ‘வேத சக்ர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.
•தனிசந்நிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.
•திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
•சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி அவனுடைய பிராயச்சித்தத்தை ஏற்று சாபம் தீர்ந்ததால் இந்து + ஊர் – இந்தளூர் ஆயிற்று. தனது பெயராலேயே இவ்வூர் வழங்கப்பட வேண்டும் என்று சந்திரன் பெருமாளிடம் வேண்டிக்கொண்டதால் இந்தளூர் என்று ஆனதாகக் கூறுவர்.
•பிரம்மனின் வேண்டுதலை ஏற்று, மது- கைடப அரக்கர்களை அழித்து, அவர்கள் அபகரித்துச் சென்ற வேதங்களை மீட்டு அவற்றுக்கு பரிமளம் (புனிதம்) அளித்ததால், ஸ்ரீபரமளரங்கநாதர் என்று பெருமாளுக்கு பெயர்.
•முற்காலத்தில் நறுமணம் வீசும் புஷ்பக்காடாக திகழ்ந்த இடத்தில் எழுந்தருளியதால் பெருமாளுக்கு ஸ்ரீசுகந்தவன நாதர் என்ற பெயரும் உண்டு.
•திருமங்கை ஆழ்வார் வந்த போது, சந்நிதியின் கதவுகள் திறக்கவில்லை. இதில் வேதனையுற்ற ஆழ்வார் ‘அடியாருக்காகத்தானே நீ கோயில் கொண்டிருக்கிறாய். அப்படியிருக்க… காட்சி தராமல் இருப்பது தகுமா? நீயே உனது அழகைக் கண்டு வாழ்த்திக் கொள்’ என்று பாடினார் (இதனை நிந்தா ஸ்துதி என்பர்). இதன் பின்னரே பெருமாள் காட்சி கொடுத்தாராம்!
•பெருமாள், தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரும் சாம்பிராணித் தைலத்தை ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தின்போது சாத்துவது வழக்கமாம்
திருவிழா :
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,
திருஇந்தளூர் – 609 003
மயிலாடுதுறை மாவட்டம்
அமைவிடம்:
மயிலாடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருஇந்தளூர் அமைந்துள்ளது.