#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூவரசன்குப்பம்

April 13, 2023 0 Comments

மூலவர் : லட்சுமி நரசிம்மர்
உற்சவர் : பிரகலாத வரதன்
அம்மன் : அமிர்தவல்லி
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
புராண பெயர் : தெட்சிண அகோபிலம்
ஊர் : பூவரசன்குப்பம்
மாவட்டம் : விழுப்புரம்
ஸ்தல வரலாறு :
தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில் இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ம அவதாரம். திருமாலின் மற்ற அவதாரத்தைவிட நரசிம்ம அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால் பக்தனின் குறைதீர்க்கவும் அசுரன் இரண்யனை வதம் செய்யவும் பக்தன் பிரகலாதன் வேண்டியவுடன் நொடிப்பொழுதில் மனித உடலும் சிங்க தலையுடன் அவதரித்து அரக்கன் இரண்யனை அழித்து பிரகலாதனை காத்தவர் நரசிம்மர்.
நரசிம்மரின் இந்த சிறப்பு அவதாரத்திற்கும் ஒரு காரணம் உண்டு, இரண்யன் தனக்கு இறப்பு ஏற்பட கூடாதென்று வேண்டி தவமிருந்து இறைவனிடம் மிகவும் சாமர்த்தியமாக தனக்கு பூமியிலோ, வானத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியிலோ, இரவிலோ, பகலிலோ மரணம் ஏற்படக் கூடாது என்றும், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் மிருகங்கள் போன்ற உயிரினங்களாலும் மற்றும் எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது என்றும் வரங்களைப் பெற்றான். இவ்வாறு வரம் பெற்ற இரண்யன் தனக்கு மரணம் ஏற்படாது என்ற மமதையில் நாட்டில் உள்ள அனைவரும் கடவுளை வழிபடுவதிற்கு பதிலாக தன்னையே வணங்கவேண்டும் என்று உத்தரவிட்டான். மேலும் இறைவனை வழிபடும் அனைவரையும் சித்தரவதை செய்து சிறையில் அடைத்தான்.
இவ்வாறு நாட்டுமக்களை துன்புருத்திய இரண்யன் தன் மகனும் சிறந்த நாராயண பக்தனுமான பிரகலாதனையும் விட்டுவைக்கவில்லை, “நாராயணன் மட்டுமே கடவுள்’ என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக பிரகலாதனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நொடியில் தூணில் நரசிம்மமாக அவதரித்து இரண்யனை வதம் செய்தார். இரண்யனை வதம் செய்தபிறகும் கோபம் தனியாததால் தேவர்கள் பிரகலாதனை வணங்குமாறு வேண்டினர். பக்தன் பிரகலாதன் வணங்கிய பிறகு சற்று சாந்தமடைந்தாலும் நரசிம்மரின் கோபம் முழுமையாக நீங்காததை உணர்ந்த தேவர்கள் லக்ஷ்மி தேவியிடம் முறையிட்டு இறைவனை சாந்தபடுத்துமாறு வேண்டினர். லட்சுமி தேவியை கண்டவுடன் முற்றிலும் உக்கிரம் நீங்கிய நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார்.
சமண ஆதிக்கம் மிகுந்திருந்த ஏழாம் நூற்றாண்டில், முதல் பல்லவ மன்னன், சைவ மற்றும் வைணவ மதங்களை அழிக்க சபதம் பூண்டு பல கோவில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தான். அந்தக் காலகட்டத்தில் அவனது ராஜ்யத்தில் வாழ்ந்த நரஹரி என்ற வைணவ ரிஷியானவர் பல்லவ மன்னனை எதிர்த்துக் குரல் கொடுக்க, அவரைக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தான். இதனால் சினமுற்ற நரஹரி, ‘என்னைக் கொல்லத் துணிந்த உனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும். உன் உடல் முழுவதும் அழுகி சீழ் பிடித்து, புழுக்கள் உண்டாகி நீ துன்பப்படுவாயாக’ என்று சாபமளித்தார்.
நரஹரியின் சாபமும் பலித்தது. இதனால் மனம் வெதும்பி தனது நாட்டை விட்டே வெளியேறிய மன்னன், தென்பெண்ணையாற்றின் வடக்கே ஆற்றங்கரையில் ஒரு பூவரச மரத்தினடியில் வலி மிகுதியால் களைப்புடன் படுத்திருந்தான். அவன் மீது பூவரச இலை ஒன்று விழ, அதை எடுத்தவன், அந்த இலையில் தெரிந்த நரசிம்ம பிரானின் திருமுகத்தினைக் கண்டு மனம் நெகிழ்ந்து, மனமுருகி நின்றான் மன்னன்.
சிங்கப்பிரான் அசரீரியாக தோன்றி பல கோயில்களை இடித்த பாவத்திற்கு பிராயச் சித்தமாக, பூவரச மரத்தினடியிலேயே தனக்கு ஒரு கோயிலை எழுப்ப மன்னனை பணித்தார். அவ்வாறு மன்னன் கோயில் கட்டும் இடமானது, பூவரசமங்கலம் என்று பெயர் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் என்று கூறி மறைந்தார். அசரீரியின் ஆணைப்படி மன்னன் கோயில் கட்ட முனைந்த அந்த நிமிடம் அவனது சாபங்கள் நீங்கி அவனது உடல்நிலை பழைய நிலைக்கு மாறியது. சிங்க முகத்தோனுக்கு பூவரச மங்கலத்தில் கோயில் உண்டானது.
மற்றொரு காலகட்டத்தில், விஜயநகர சாம்ராஜ்ய அரசன் ஒருவன், பகைவரின் சூழ்ச்சியால் ராஜ்ஜியத்தை இழந்து நிர்கதியாக நின்றபோது, பகைவரிடமிருந்து தப்பிக்க எண்ணி இந்த கோயிலுக்குள் தற்செயலாக நுழைந்தான். கோயிலினுள் சிங்கப் பிரானையும், தாயாரையும் கண்டு மனமுருகி அவர்களது திருவடிகளில் விழுந்து வணங்கி தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டினான். மனமிரங்கிய சிங்கப்பிரான், அவனது பகைவரின் சூழ்ச்சிகளை முறியடித்து, ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்ததாக ஓலைச் சுவடிகள் கூறுகின்றன..
கோயில் சிறப்புகள் :
•இத்திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
•தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
•சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
•முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே நரசிம்மர், “”நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்’ என்றார். அதற்கு லட்சுமி,”” “”கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்’ என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். சிறப்பம்சம்: நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார்.
•பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.
•பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.
•இக்கோயிலில் கனகவல்லி தாயார், அமிர்தவல்லி மற்றும் ஆண்டாள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள அமிர்தவல்லி தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். அதனால் தான் ‘அமிர்தவல்லி” என அழைக்கப்படுகிறாள்.
•நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் ‘அகோபிலம்” என்றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன்குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் ‘தென் அகோபிலம்” எனவும் அழைக்கப்படுகிறது.
•பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன் வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.
•பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், பிரகாரத்துக்கு எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
•கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஆதிகாலத்தில் பூவரசன் குப்பத்தில் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள் ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
திருவிழா:
மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்,
பூவரசன்குப்பம் – 605 105.
விழுப்புரம் மாவட்டம்
போன்:
+91-413 269 8191, 94439 59995
அமைவிடம் :
விழுப்புரம் பண்ருட்டி சாலை வழியே வருபவர்கள், கள்ளிப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்தலத்திற்குச் செல்ல நேரடியான பேருந்து வசதிகளும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =