#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #விருத்தாச்சலம்

April 12, 2023 0 Comments

மூலவர் : விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)
அம்மன் : விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி)
தல விருட்சம் : வன்னிமரம்
புராண பெயர் : திருமுதுகுன்றம்
ஊர் : விருத்தாச்சலம்
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு :
ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை. இக்கோயிலை ஆகமக்கோயில் என்றே அழைப்பார்கள். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கின்றனர். விருத்த என்றால் முதுமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே விருத்தாசலம் என்றால் பழமலை என்பது கருத்தாகிறது. தேவாரப்பாடல்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று பாடப்பட்டுள்ளது. இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மை பயன்களும் மறுமை பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
குருநமசிவாயர் என்ற மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோவிலின் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை கிழத்தி என்ற வார்த்தையை உபயோகித்து துதித்து பாடினார். பெரிய நாயகி முதியவடிவில் எதிரே தோன்றி என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய் கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க குருநமசிவாயர் இளமை நாயகியே என்று பொருளுடன் பாட அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள். பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் பாலாம்பிகை என்ற பெயரில் தனிக்கோயில் உள்ளது.
ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்தார். சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார். தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.
முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும் 660 அடி நீளமும் 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் உள்ளது. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும் பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 நாயன்மார் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்
இக்கோயிலில் எல்லாமே ஐந்துதான்.
•ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.
•இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
•ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.
•இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.
•ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
•ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.
•ஐந்து கொடிமரம்: இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.
•ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.
•ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.
•ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.
•ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.
•தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.
கோயில் சிறப்புகள் :
• இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளைய நாயகி, பெரியநாயகி.
• விருத்தாசலத்தில் வசிப்பவர்களும், விருத்தாசலத்துக்குச் சென்று வந்தவர்களும் காசிக்குச் செல்ல வேண்டியதில்லை என்பது ஐதீகம்.
• தலமரம் வன்னிமரம் 2500 ஆண்டுகள் பழமையானது. இதனை திருச்சியில் உள்ள மத்திய அரசு பாரத மின்பகிர்வு கழகம் ஆராய்சி செய்து வெளியிட்டுள்ளது
• இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம் என்கிறது தலவரலாறு
• இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதியில் 18 படியிறங்கி கீழே சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார்.
• இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் தேவியர்களுக்கு மேலே சக்கரங்கள் அமைந்துள்ளது.
• இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய புடவைத்தலைப்பால் வீசி இளைப்பாற்றி பாவங்களைப் போக்குகிறாள் என்றும் இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தை அருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்குகிறார் என்றும் கந்தபுராணம் சொல்கிறது. ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது என்றும் இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்றும் தலவரலாறு சொல்கிறது.
• காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைத்து சித்தி அடைவர் என்கிறது தலவரலாறு
• ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க சிவபெருமானும் அருள் செய்து தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகள் தோன்றின. பிரம்மா படைத்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முதலில் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.
• தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும் இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
• இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.
• இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.
• இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார் அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது
• அருணகிரிநாதர், குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
• சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.
• சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.
• காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பில் உள்ளது.
• அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்’ என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்’ என்றால் “பழமை’. “அசலம்’ என்றால் “மலை’. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
திருவிழா:
பிரம்மோற்சவம் – மாசி மாதம் – 10நாட்கள் 9 வது நாள் தேர் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும்.
ஆடிப்பூரம் – 10நாட்கள் திருவிழா
வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்,
விருத்தாசலம் – 606 001,
கடலூர் மாவட்டம்.
போன்:
+91- 4143-230 203.
அமைவிடம் :
சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 21 கி.மீ. தூரத்தில் விருத்தாசலம் உள்ளது. விருத்தாச்சலம் நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் சென்று வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =