#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு
59.#அருள்மிகு_அர்த்தநாரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
அம்மன் : பாகம்பிரியாள்
தல விருட்சம் : இலுப்பை
தீர்த்தம் : தேவதீர்த்தம்
புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர்
ஊர் : திருச்செங்கோடு
மாவட்டம் : நாமக்கல்
ஸ்தல வரலாறு :
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியைத் தளர்த்த வேண்டினார்கள். ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.
இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.
மரகத லிங்கத்தின் வரலாறு
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது). அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.
கோயில் சிறப்புகள் :
• அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்துள்ளது.
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன.
• சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்… அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.
• அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார். இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும்.
• இங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது.
•சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது
•திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் முருகப்பெருமான் கோபமுற்று கயிலையில் அம்மையப்பனை விட்டு பிரிந்து காடு, மலை, வனம், வனாந்திரங்களை கடந்து திருவாவினன்குடி குன்றின் மேல் நின்றார் (பழனி) அங்கிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரிந்ததால் அங்கிருந்து புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரியாததால் இந்த இடமே தான் தங்குவவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில் செங்கோட்டுவேலவராக செங்கோட்டுவேலவராக கோயில் கொண்டார் முருகப்பெருமான் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.
•இத்தலத்தில் முருகப்பெருமான் செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் வலதுகரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அணைத்தபடி கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த அரிய காட்சியுடன் முருபெருமானை உலகிலேயே இங்கு மட்டுமே காணமுடியும் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும்..
•ஆதிகேசவபெருமாள் ஆலயம் கிழக்கு திசை வாயிலை உடையது. கற்சிலையால் வடிக்கப்பட்ட மூலவர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிகேசவபெருமாள் நீளாதேவி, பூதேவி என்ற தன் இரு சக்திகளையும் வடமும், இடமும் பெற்றுள்ளது. கண்கொள்ளாகாட்சியாகும். மூர்த்திக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் இருக்கிறது.
•சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சி ஆவணி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கி புரட்டாசி கிருஷ்ணபட்ச தேய்பிறையில் சதுர்த்தியில் கேதார கெளரி விரத விழாவாக இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர்.
•அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது
•இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் ‘திரு’ என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது.
•சிலப்பதிகாரத்தில் முருகன் வழிபாடு நடைபெற்ற இடங்களில் ஒன்றாக திருச்செங்கோடு குறிப்பிடப் படுகிறது.
•அரியும், அரணும் ஒன்றே என்ற உண்மையை சமயத்திற்கு உணர்த்திய இத்திருத்தலமானது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ், கும்பி போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.
•அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்த இத்திருத்தலம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.
•வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படுகிறது.
•திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்!
•பல அற்புதங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. கொங்கு நாட்டுப்பகுதிக்கு வந்த ஞானசம்பந்தர், முதலில் இங்கு வழிபட்டு, பின்னர்தான் பிற தலங்களுக்குச் சென்றார். மீண்டும் இங்கு வந்தபோது, தன்னுடைய பரிவாரங்களையும் பிறரையும் நளிர்சுரம் (குளிர்சுரம்) தாக்கி இருப்பதைக் கண்டார். இறையனாரை வணங்கி, ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று தொடங்கி, ‘தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று ஆணையிட்டுப் பாடினார். அடியார்களைப் பற்றியிருந்த நளிர்சுரம், அவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், இந்தப் பகுதியை விட்டே ஓடி விட்டது. இந்தப் பதிகம் ‘திரு நீலகண்டப் பதிகம்’ எனப்படுகிறது
திருவிழா:
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு- 637211.
கொடிமாடச் செங்குன்றூர்,
நாமக்கல் மாவட்டம்.
போன்:
+91-4288-255 925, 93642 29181
அமைவிடம் :
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருசெங்கோடு திருத்தலம். நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு 37 km தொலைவிலும், ராசிபுரத்தில் இருந்து 36 km தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 km தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 22 km தொலைவிலும், கரூரில் இருந்து 61 km தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 130 km தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − nine =