#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உவரி

மூலவர் : சுயம்புநாதர்
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : தெப்பகுளம்
புராண பெயர் : வீரைவளநாடு
ஊர் : உவரி
மாவட்டம் : திருநெல்வேலி
திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த… உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவபெருமான்
ஸ்தல வரலாறு :
முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார். ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.
உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.
சுயம்புலிங்க சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பாள் பிரம்ம சக்தியாகத் தனி ஆலயம் கொண்டு விளங்குகிறாள். சக்திக்கு ஆலயம் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒரு சுமங்கலிப் பெண் திடீரென்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள் நான் பிரம்ம சக்தி. இதோ, இந்த இடத்தைத் தோண்டுங்கள். இங்கு நான் பல்லாண்டுகளாக தவம் செய்து வருகிறேன். என்னை வெளியில் கொணர்ந்து, கோயில் எடுத்து வழிபடுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு, மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள். குறிப்பிட்ட அந்த இடத்தைத் தோண்டியபோது சக்தியின் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அது பழைய பிரம்ம சக்தி என்னும் பெயரில் வழிபடப்படுகிறது. அருகிலேயே புதிய பிரம்ம சக்தி விக்கிரகமும் உண்டு. காலப்போக்கில் இசக்கியம்மன், பேச்சியம்மன், மாடசாமி, கணபதி, சாஸ்தா போன்ற சந்நிதிகளும் தனித்தனியே எழுப்பப்பட்டன.
கோயில் சிறப்புகள் :
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
• இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக உள்ளார்.
• கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.
• சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே தனி அழகு என்று சொல்லலாம். மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான்.
• பக்தர்கள் கடலில் இருந்து மணலை எடுத்து வந்து, கரையில் குவியலாக்கிவிட்டு, சிவனாரை வணங்குகின்றனர் (தங்கள் வேண்டுதலுக்கேற்ப 11 முறை 108 முறை என மணல் பெட்டி சுமக்கின்றனர்). வேண்டுதல் நிறைவேறியதும், சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
• இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக கிராம தேவதை ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக்கிறாள்.
• வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
• கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
• ஸ்தல விருட்சம் கடம்ப மரம். தமிழ் மாதத்தின் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையன்றும் சுயம்புலிங்க நாதருக்கு விழா எடுக்கிறார்கள். அன்று அபிஷேகம், சப்பர உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. சப்பரத்தில் உற்சவ மூர்த்தியாக முருகன், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
• சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனப் பிரசாதம் தரப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் விலகும் என்பது நம்பிக்கை.
• வீட்டில் எவரேனும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, ‘உன் புள்ளையை நீதாம்பா காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை ‘பிடிபணம்’ செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் ‘பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர், அந்தக் காலத்தில் நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப்பாறுவார்கள். ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமையாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், ‘எங்க சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர். சுயம்புலிங்க ஸ்வாமியின் அருட்கடாட்சத்தை எண்ணி நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங்கினாராம். அன்று முதல், ‘பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாகச் சொல்வர்.
திருவிழா:
• வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல்
• தைப்பூசம் – 1 நாள்.
• ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெள்ளமாக கூடுவர். தவிர வைகாசி விசாகம், தைபூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்து விழாக்களாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்,
உவரி – 628 658,
திருநெல்வேலி மாவட்டம்
போன்:
+91 99625 69495, 93847 28151, 94437 22885
அமைவிடம் :
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
