#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கன்னியாகுமரி

March 17, 2023 0 Comments

மூலவர் : தேவிகன்னியாகுமரி – பகவதி அம்மன்
உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம் : பாபநாசதீர்த்தம்
புராண பெயர் : குமரிகண்டம்
ஊர் : கன்னியாகுமரி
மாவட்டம் : கன்னியாகுமரி
ஸ்தல வரலாறு :
குமரி அம்மன் என்ற தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள குமரி அம்மன் ‘ஸ்ரீபகவதி அம்மன்’, ‘துர்காதேவி’ எனவும் பெயர்கள் பெற்றுள்ளாள். இங்கு அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ள கோயில் இது. பரசுராமரால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த தலமாகக் கருதப்படுகிறது. இங்கு அம்பிகை தவக்கோலத்தில் இருப்பதால் தவம், தியானம் மேற்கொள்ள ஏற்ற சக்தி பீடமாகும்.
புராணங்களில் இப்பகுதியை பாணாசுரன் என்ற அசுரன் ஆட்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவன் தவமிருந்து பிரம்மாவிடம், தனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால் இவ்வுலகத்தில் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே மரணம் நேர வேண்டும், என வரம் பெற்றான்.
இதனால் கர்வம் கொண்டு இந்திரனையும், தேவர்களையும் விரட்டியடித்தான். இந்திரன் இல்லாததால் பஞ்சபூதங்களை சமன்படுத்த முடியாமல் பூலோகம் தடுமாறியது. அப்போது தேவர்களின் வேண்டுதலால், அவர்களைக் காக்கும் கருணையோடு பகவதி அம்மன் இவ்வூரில் சிறு பெண்ணாக அவதரித்தாள். இந்த பகவதி அம்மனை மணமுடிக்க, சுசீந்திரத்தில் அருள் பெருக்கும் சிவ-விஷ்ணு-பிரம்ம சொரூபியான தாணுமாலயன் விருப்பம் கொண்டார். அம்பிகையை மணமுடிப்பதானால், காம்பில்லாத வெற்றிலை மற்றும் கண்ணில்லாத தேங்காயுடன் விடியற்காலைக்குள் வந்து மணமுடிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதைவிட, தாணுமாலயன் அம்மனை மணந்துகொண்டால் பாணாசுர வதம் நடக்காது என உணர்ந்து கொண்ட நாரதர், சேவல் வடிவம் கொண்டு கூவினார். அதைக் கேட்டு சூரியன் உதயமாகிவிட்டதால், நல்ல நேரம் முடிந்துவிட்டதாக நினைத்து தாணுமாலயன் திரும்பி விட்டார்.
அதனால் திருமணம் நின்றுவிட, பகவதி பாணாசுரனை அழித்து கன்னியாகுமரியாக இங்கு நிலை கொண்டாள். தாணுமாலயனுடனான தன் திருமணம் நின்று போனதால், கோபம் கொண்ட பகவதி சமைத்த சாதம் மணலாகப் போகும்படி சபித்ததாக ஐதீகம். எனவே அரிசி, நொய், தவிடு போன்ற வடிவங்களிலும் ஏழு நிறங்களிலும் இக்கடற்கரை மணல் காணப்படுகிறது. இந்தக் கோயில் இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சில்லென வீசும் கடற்காற்றை எப்போதும் ஆலயத்தில் அனுபவித்து மகிழலாம். குமரியம்மன் தினமும் ஆலய உலா வருகிறாள். அம்பிகையின் அபிஷேகத்திற்கு தினமும் 2ஆம் பிராகாரத்திலுள்ள பாதாள கங்கை எனும் கிணற்றிலிருந்தும், விழாக்கால அபிஷேகத்திற்கு ஸ்ரீசக்ரத்திற்கு அருகே உள்ள பால் கிணற்றிலிருந்தும், வெள்ளிக் குடங்களில் நீர் எடுத்து யானை மீது ஏற்றிச் செல்வது நடைமுறையில் உள்ளது.
குமரி பகவதியின் தோழிகள் இருவரில் ஒருத்தி கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவள் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் அருள்கிறார்கள். பகவதியின் காவல் தெய்வம், பைரவர். சக்தி பீடங்களில் முதலில் பைரவரை வழிபட்டு பிறகுதான் சக்தியை தரிசிப்பது மரபு. பகவதி விக்ரகத்தின் மேற்பகுதி சொரசொரப்பாகக் காணப்படுகிறது. இதனை ருத்ராட்ச விக்ரக அமைப்பு என்பர். பகவதி வலக்கையில் ருத்ராட்ச மாலையுடனும், இடது கையை தொடைமீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் அருள்கிறாள். தலை கிரீடத்தில் பிறைச்சந்திரனும், மூக்கில் பேரொளி வீசும் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன. வீராசுரனைக் கடிக்க வந்த ராஜநாகம் விஷத்திற்கு பதில் நாகரத்தினத்தைக் கக்க, அவன் அந்த ரத்தினத்தை மன்னன் வீரமார்த்தாண்டவனிடம் தர, அவன் அந்த அபூர்வமான ரத்தினக் கல்லை திருவிதாங்கூர் மன்னனிடம் தர, மன்னன் அதை மூக்குத்தியாக்கி பகவதிக்கு 18ம் நூற்றாண்டில் சமர்ப்பித்தார்.
இந்த மூக்குத்தியின் மிகப் பிரகாசமான ஒளியை கலங்கரை விளக்க ஒளியென நினைத்த அந்நிய நாட்டுக் கப்பல் ஒன்று திசை தவறி ஒரு பாறையில் மோதி விபத்துக்குள்ளானதால், அது ஒளிபரப்பிய கிழக்கு வாசல் கதவு, வருடத்தில் ஐந்து நாட்கள் (ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி, இரண்டு அமாவாசை நாட்கள்) மட்டுமே திறக்கப்படுகிறது. பகவதியம்மன் ஆலயத்தையொட்டிய வடக்கு வீதியில் வீற்றிருக்கும் பத்ரகாளிக்கு வழிபாடு நடந்த பிறகே பகவதிக்கான எந்த விழாவையும் தொடங்குவது வழக்கம். ஒரு காலத்தில் மிருகபலி கொடுக்கப்பட்ட இத்தலத்தில் தற்போது மஞ்சள் நீரில் சுண்ணாம்பு கலந்து குருதி பூஜை செய்யப்படுகிறது. இங்கு ஆடிகளப பூஜை புகழ்பெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட, தங்கக் குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை நிரப்பி கலசபிறையில் வைத்து அந்த தங்கக்குடத்தை பஞ்ச வாத்தியம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்துகிறார்கள்.
நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குமரி பகவதி போர்க்கோலம் கொண்டு அருகிலுள்ள மகாதானபுரம் என்ற ஊருக்குச் செல்வாள். அங்கு பாணாசுரன் போர்க்கோலத்துடன் நிற்பான். இருவருக்கும் போர் நடக்கும். கடைசியில் வெற்றி பெற்ற அன்னை கடலிலே நீராடிவிட்டு பிரசித்திபெற்ற கிழக்கு வாயில் வழியே ஆலயத்திற்கு எழுந்தருள்வாள்.
கோயில் சிறப்புகள் :
• மகிமை மிக்க தீர்த்தக்கட்டம் என கன்னியாகுமரியை வால்மீகி ராமாயணமும் வியாசபாரதமும் சிறப்பிக்கின்றன.
• ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன் கன்னியாகுமரியை வணங்கியதாக சேது புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடம் ஆதிசேது என அழைக்கப்படுகிறது.
• பௌர்ணமி அன்று சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் ஒருசேரத் தோன்றுவது மிக அபூர்வமான காட்சி.
• சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் பகவதி அம்மன் கோயிலை பராமரித்துள்ளனர்.
• பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலைபெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக ஐதீகம்.
• தேவி உபாசனை கூறும் பாலாமந்திரத்தின் முதல் பகுதி கன்னியாகுமரியையும், இரண்டாம் பகுதி குருவாயூரப்பனையும் குறிக்கும் என்பது சான்றோர்கள் வாக்கு. பாலா எனில் குழந்தை என்று பொருள். குழந்தையே குமரியாக அருளும் திருத்தலம் இது.
• குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
• 1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
• பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.
• கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்
• இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலேக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் எழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
• வேதகாலம் முதலே தேவி வழிபாடு இருந்து வந்துள்ளது. மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.
• தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன் ஆகிய பெயர்களைத் தாங்கி மூலவராக வீற்றிருக்கும் அன்னை, தியாக சவுந்தரி, பால சவுந்தரி ஆகிய பெயர்களுடன் உற்சவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
• பகவதி இன்றும் ஈசனை வேண்டி, உலகம் உய்ய தவம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே தேவியிடம் வேண்டும் அனைத்தும், ஈசனிடம் கொண்டு சேர்க்கப்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
• தாயே! இரவின் இருளிலிருந்து தண்ணென்ற சந்திரனின் கிரணங்கள் ஒளி கொடுத்துக் காப்பதைப்போல், ஆதித் தம்பதியரான உங்கள் ஜீவ ஒளி, எங்கள் இதயத்து இருளை அகற்றுகிறது’ என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
திருவிழா:
புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாள்
வைகாசி விசாகம் – 10 நாள் – தேரோட்டம், தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்,
கன்னியாகுமரி – 629702,
கன்னியாகுமரி மாவட்டம்.
போன்:
+91- 4652 – 246223
அமைவிடம் :
சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறையபஸ் வசதி உள்ளது நாகர்கோவிலிலிருந்து -25 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து -91 கி.மீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + four =