#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்போரூர்

February 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்போரூர்
33.#திருப்போரூர்_கந்தசாமி_கோயில்_வரலாறு
மூலவர் : கந்தசுவாமி
அம்மன். : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : வன்னி மரம்.
ஊர் : திருப்போரூர்
மாவட்டம் : செங்கல்பட்டு
பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி.
ஸ்தல வரலாறு :
முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம் ஆகாயம் கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கி வெற்றி பெற்றார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று போரிட்டு திருப்போரூரில் வெற்றி கொண்டார். முருகன் யுத்தம் புரிந்த இடம் ஆகையால் யுத்தபுரி என்று அக்காலத்தில் பெயர் பெற்றது. சமராபுரி போரிநகர் என்ற வேறு பெயர்களும் இந்த இடத்திற்கு உண்டு. அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர் புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும் பைரவரின் துணையோடும் கண்டறிந்த முருகப்பெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
மறைந்திருந்த அசுரர்கள் முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலை நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. பல யுகங்களுக்கு முன்னால் நடந்த பிரளயத்தால் ஆறு முறை இங்கு உள்ள முருகன் கோவில் அழிவைச் சந்தித்து இருக்கிறது என்று கோவில் புராண வரலாறு உள்ளது. தற்போது ஏழாவது முறையாக மீனாட்சி அம்மனின் அருளாலும் முருகனின் அருளாலும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிதம்பர சுவாமிகள் சாந்தலிங்க அடிகளின் மாணவர். இவர் மதுரையில் தியானத்தில் இருந்த போது அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது தியானத்தில் மீனாட்சி அம்மன் தோன்றி மதுரைக்கு வடக்கே காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து அழகிய திருக்கோயில் நிர்மாணித்து முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவருகின்றனர் . அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து தற்போது திருப்போரூர் என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு இருந்த பனை மரக்காட்டிற்குள் ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் இருந்தது. அதன் அருகில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார்.
ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து சிவாயநம என்று ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும் அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் இங்கே கோவில் கட்ட வேண்டும் இது இறைவன் ஆணை என்பதை உணர்ந்தவர் மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
திருப்போரூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். முருகன் அருளால் தனது மனத்திரையில் தோன்றியபடியே அழகிய திருக்கோயிலை கட்டி முடித்தார் சிதம்பர சுவாமிகள். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும். கோவிலின் அருகில் இருந்த ஒடையை குளமாக மாற்றினார். இக்குளத்தில் இருக்கும் நீரானது இது வரை வற்றியது இல்லை. பனை மரத்தடியில் முருகன் இருந்த பனை பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.
கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. பிரதான பூஜைகள் அனைத்தும் ஆமை வடிவத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியர் யந்திரத்திற்கே நடைபெறுகிறது. இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கும். பிரம்மாவைப் போல் அவருக்குரிய அட்சர மாலை மற்றும் கண்டிகையும் சிவனைப் போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த முத்திரையும் பெருமாளைப் போல் இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த முத்திரையும் என மும்மூர்த்திகளின் அம்சமாக கந்தசாமி முருகன் அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. இந்த கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். கோவிலின் தெற்கே உள்ள குளத்தின் பெயர் வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கை ஆகும்.
கோவிலில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திருவடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். கோயில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் உள்ளார். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது. வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில் பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. கையில் வில்லேந்தி மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது. கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சிவலிங்க சன்னதி உள்ளது. இவருக்கு துணைவியான அம்பாள் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான புண்ணிய காரணியம்மன் என்று பெயர். ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில் சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால் முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.
முருகனைப் போற்றி சிதம்பர சுவாமிகள் 726 பாடல்கள் பாடினார். தனது குருவான சாந்தலிங்க அடிகளின் நூல்களுக்கு உரைகள் எழுதி உள்ளார். உபதேச உண்மை உபதேசக் கட்டளை திருப்போரூர் சந்நிதி முறை தோத்திர மாலை திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மீது கிளிப்பாட்டு குயில்பாட்டு தாலாட்டு திருப்பள்ளிஎழுச்சி ஊசல்தூது என பல பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு கோயிலுக்குள் சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் நடக்கும். கோயிலின் சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோயிலை வடிவமைத்த சிதம்பர சுவாமிகள் அந்த கோயிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்தார்.
கோயில் சிறப்புகள் :
• கோயிலில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார்
• அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடல் பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேதஉச்சியாக சுவாமி என்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள்.
• கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன் பானுகோபன் சிங்கமுகன் சூரபத்மன் அஜமுகி தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார்.
• மாசி பிரம்மோற்ஸவத்தின் போது முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன் வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு விநாயகர் நந்தி பிரம்மா இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர்கள்.
• அசுரர்களை எதிர்த்து திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருச்செந்தூர் ஆகிய மூன்று தலங்களில் முருகப்பெருமான் போரிட்டார். இவற்றில் அசுரர்களின் கன்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு முருகப்பெருமான் திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் ஆகும்.
• சிவாலயங்களில் அம்பாளுக்கும் பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் நவராத்திரி விழா சிறப்புற நடைபெறும். உமையவளின் மருமகள்களான வள்ளி தெய்வானைக்கும் நவராத்திரி விழா இங்கே கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும்.
• சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுகின்றனர் பக்தர்கள். பிரணவ மந்திரப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகவே தினந்தோறும் காட்சி தருகிறார்.
• திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக்கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
• எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..
• ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.
• தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் இல்லை. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
• இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300&க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.
• சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் எனப்படுகிறாள்.
திருவிழா:
கந்தசஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
திருப்போரூர்-603 110,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91 44- 2744 6226, 90031 27288
அமைவிடம் :
சென்னையிலிருந்து 40 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ., தூரம். அடையாறிலிருந்து 30 கி.மீ.தூரம் பழைய மகாபலிபுரம் செல்லும் வழியில் திருப்போரூர் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் வழியாகவும் (30 கி.மீ)செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =