#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவானைக்கா

February 24, 2023 0 Comments

மூலவர் : ஜம்புகேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வெண் நாவல்
புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர் : திருவானைக்கா
மாவட்டம் : திருச்சி
திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள்.
திருவானைக்கா என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இருக்கும் ஜம்புலிங்கம், அன்னை அகிலாண்டேஸ்வரியால் உருவாக்கப்பட்டது.
எம்பெருமானின் கட்டளைக்கிணங்க மானிடப்பெண்ணாக பூலோகத்தில் அவதரித்த பார்வதி தேவி, காவிரி ஆற்றில் நீரில் லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களால் நீர் லிங்கமாக மாறியது. அதை வழிபட்டு பேரானந்தம் அடைந்தாள் அம்பிகை.
ஜம்பு என்னும் முனிவர் எம்பெருமானை வேண்டி இங்கு தவமிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த சிவன் அவருக்கு காட்சி தந்து, நாவல்பழத்தை அளித்தார். சிவன் கொடுத்ததாயிற்றே அதனால் கொட்டையையும் விழுங்கிவிட்டார் ஜம்பு முனிவர். அந்த கொட்டையிலிருந்து விதை முளைத்து செடியாக மாறி மரமாக வளர்ந்தது. சிரசு வெடித்து முக்தி பெற்றார் ஜம்பு முனிவர். நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம், கூரையில்லாமல் வெய்யில் மழையில் கிடந்தது. சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.
யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியும் போராட, கடைசியில் இரண்டும் மடிந்தன.
இவற்றின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி, மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை – “ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம் – (4-வது பாடலில்) தெரிவிக்கிறார்.
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்
காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்துக்கு அருகே அமைந்துள்ளது. திருவானைக்கா, பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்துக்குக் கீழே இருப்பதால், எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிராகாரங்களும் உடையது.
கிழக்கு திசையிலுள்ள கோபுரம் 13 நிலைகளை உடையதாகும். ஆனால், இக்கோபுர வழி உபயோகத்தில் இல்லை. மேற்கிலுள்ள 7 நிலை கோபுர வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே சென்று 2-வது கோபுர வாயிலையும் கடந்து நேரே உள் சென்றால் இறைவன் சந்நிதியை அடையலாம். அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி, நான்காம் பிராகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர், ஐந்தாம் உள்பிராகாரத்தில் அப்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சந்நிதியிலுள்ள 9 துளை சாளரம் வழியே இறைவனை தரிசித்தால், ஒன்பது தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இந்த துவாரங்கள் வழியே இறைவனை தரிசிப்பதுதான் முறையாக கருதப்படுகிறது.
• மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட் பிராகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக (அப்பு என்றால் நீர்) எழுந்தருளியுள்ளார். நாகப்பழ மரத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்று பெயர். இந்த லிங்கம், தரைமட்டத்திற்கு கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
• இவரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
• சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.
• அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.
• அம்பாள் நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதில் அணிந்திருக்கும் தாடகங்கள் பக்தர்களின் பார்வைக்கு நன்றாக தெரியும் அளவுக்கு பெரிதாக இருக்கும். முன்பு அம்பாள் பார்வைக்கு உக்கிரமாக கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் அவளைக் கண்டு அச்சம் கொண்டதால் அப்போது அம்பாளை தரிசிக்க வந்த ஆதி சங்கரர் சிவசக்ரம் என்னும் இந்த காதணிகளை பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாகவும் வரலாறு கூறுகிறது. அதன் பிறகே அம்பாளின் முன்புறம் விநாயரையும், அம்பாளுக்கு பின்பு முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை தணித்ததாகவும் கூறுகிறார்கள்.
• அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம்.
• இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அம்பாளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு அருள்பாலிக்க சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர்.
• சிவன் குருவாகவும், அம்பாள் மாணவியாக இருந்து கற்றரிந்த தலம் இது என்பதால் மாணாக்கர்கள் கல்வியில் மேன்மை வர இத்தலத்துக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள். ஆடிமாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவ மிருந்ததாக ஐதிகம். அதனால் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
• அம்பாள் காலையில் லஷ்மியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள்.
• சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார்.
• ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் குறிப்பிடத்தக்கவர்
• குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.
• முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
• இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.
• மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்’ என்றும், பிரகாரம் “விபூதி பிரகாரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.
• பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.
• இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது.
• சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்வது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக் காப்பிடப்படுகிறது.
ஆடி வெள்ளி(ஐந்து வெள்ளிகள்) ஆடித் தெப்பம்,
நவராத்திரி,
தைத்தெப்பம்,
பங்குனி தேர்த்திருவிழா,
பஞ்சப்பிரகார திருவிழா.
திறக்கும் நேரம்:
காலை 5.30- பகல் 1 மணி,
மாலை 3- இரவு 8.30 மணி.
வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்,
திருவானைக்கோவில்,
திருச்சி – 620 005.
அமைவிடம் :
திருவானைக்காவலுக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =