#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி
மூலவர் : கற்பக விநாயகர்
தல விருட்சம் : மருதமரம்
ஊர் : பிள்ளையார்பட்டி
மாவட்டம் : சிவகங்கை
எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது.
பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். இக்கோயில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு உள்ளது. குடைவரைக் கோவிலில் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுக்கு முன்பே பாண்டியர்களால் அமைக்கப்பட்ட கோயில் கி.பி. 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டவர் வசமானது.
இன்று வரை நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கோயில் வழிபாடு நடந்து வருகிறது.
கயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் பிள்ளையார் பட்டியாகும். இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார். கற்பக விநாயகர் தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார். இவரது தும்பிக்கை வழஞ்சுழியாக இருக்கிறது. மற்றொரு சிறப்பு அம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது. விநாயகர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு.
விநாயகர் கோபுரத்துக்கு எதிர்புறத்தில் வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த குடைவரைக் கோயில்.
பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்சவரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத்தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
• இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
• சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
• அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
• வயிறு, ஆசனத்தில் படியாமல் “அர்த்தபத்ம” ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
• இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
• வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
• ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.
• கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி.
• தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்பு தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.
• இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
• தென்னிந்தியாவில் அர்ச்சுன வனத் திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் சைலம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியனயாகும்.
• இங்கு அமையப்பெற்றிருக்கும் விநாயகப் பெருமானின் (பிள்ளையார்) துதிக்கை வலம் சுழித்ததாக இருக்கும். மற்ற இடங்களில் விநாயகருக்கு நான்கு கரங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள பிள்ளையாருக்கு இரண்டு கரங்கள்தான். அங்குச பாசங்கள் கிடையாது. மேலும் வயிறு ஆசனத்தில் படியாமல் அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்து, வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்புரிகிறார்.
• இக்கோயிலின் மற்றொரு சிறப்பு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசிமாவில் ராட்சத கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஓன்பதாம் நாள் விழாவான தேர் வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
• ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.
• திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப் பெருமானும் திருவீதி பவனி வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும்.
• மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
• ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூஜையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்,
பிள்ளையார்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630207
4577 264260
4577 264240
4577 264241
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.