#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

February 20, 2023 0 Comments

மூலவர் : யோக நரசிம்மர்
தாயார் : நரசிங்கவல்லி தாயார்
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
ஊர் : யானைமலை ஒத்தக்கடை
மாவட்டம் : மதுரை
நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம். இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று. இந்த அவதாரம் ஒரு தூய்மையான விஷ்ணு பக்தனுக்காக நொடி பொழுதில் எடுக்கப்பட்ட அவதாரமாகும். ஸ்ரீவிஷ்ணு மீது அளவு கடந்த பக்தி இருந்தால் நம்மில் உள்ள ஜீவாத்மாவை விஷ்ணு தன்னிடம் சேர்த்து முக்தி அளிப்பார் என்பது ஐதீகம்.
ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள் உலகைக் காக்கும் அந்த தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார். ரோமச முனிவருக்கு புத்திர பாக்கியத்தையும் வழங்கி அருளினார்.
நரசிம்மமூர்த்தி இங்கே எழுந்தருளியதற்கு மற்றொரு புராண காரணமும் கூறப்படுகிறது, விக்கிரமப் பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து வந்த காலம். விக்கிரம பாண்டியன் வேதநெறியில் மாறாப் பற்றுக் கொண்டவனாக விளங்கியதால், பாண்டிய நாட்டில் வேதம் செழிக்க பல நடவடிக்கைகள் எடுத்தான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், கள்ளழகர் கோயிலிலும், கூடலழகர் கோயிலிலும் வழிபாடுகள் சரியான முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்தான். பாண்டிய நாட்டில் வாழ்ந்த சில போலி சமண துறவிகளுக்கு விக்கிரம பாண்டியனை பிடிக்கவில்லை. அவர்கள் விக்கிரம பாண்டியனைப் பழிவாங்க என்ன வழி எனச் சிந்தித்தார்கள். காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னனுக்கும், விக்கிரம பாண்டியனுக்கும் தீராத பகையுண்டு போரில் பாண்டியனை வெல்ல முடியாத பல்லவன், தந்திரம் செய்து அவனை வெல்ல நினைத்தான்.
அதனால் விக்கிரமன் மேல் அதிருப்தியில் இருக்கும் அந்த போலித் துறவிகளைக் காஞ்சிக்கு வரவழைத்தான். பாண்டியனோடு சேர்த்து பாண்டிய நாட்டையே அழிக்கும் விதமாக ஒரு யாகம் செய்யச்சொன்னான். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். வேப்பெண்ணெயைத் தீயில் ஊற்றி, எட்டி குச்சிகளை போட்டு குரூரமான ஒரு வேள்வியை அந்தத் துறவிகள் காஞ்சியில் செய்தார்கள். இரும்பு உலக்கையைத் துதிக்கையில் ஏந்திக் கொண்டு ஒரு பெரிய யானை வேள்வித் தீயிலிருந்து வந்தது. “போ! பாண்டிய நாட்டை அழித்து விட்டு வா!” என்றார்கள் அந்தத் துறவிகள். அதுவும் காஞ்சியிலிருந்து மதுரையை நோக்கி விரைந்தோடியது.
யானை வருவதைக் கண்டு அஞ்சிய மக்கள் விக்கிரம பாண்டியனிடம் வந்து முறையிட்டார்கள். யானை, குதிரை, தேர், காலாட் படைகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு விரைந்த விக்கிரமன், “சிவபெருமானே! நீங்கள் தான் இந்நாட்டை காக்க வேண்டும்!” எனப் வேண்டினான்.. கருவறையிலிருந்து புறப்பட்டார் சுந்தரேஸ்வரர். மேரு மலையையே வில்லாகப் பிடித்தார். வாசுகி எனும் பாம்பையே அதில் நாணாக கட்டினார். அந்த யானையை அழிப்பதற்கேற்ற அம்பை கூடலழகர் கோயிலில் உள்ள திருமாலிடம் தனக்கு நல்ல அம்பை தந்தருளுமாறு கோரினார். “நரசிம்ம வடிவில் நானே வந்து உன் வில்லில் கணையாக அமருகிறேன்!” என்றார் திருமால். மதுரையின் வட எல்லைக்குச் சென்ற சிவன், தனது வில்லில் நரசிம்ம பெருமாளையே அம்பாக்கி, நகரை நெருங்கிக் கொண்டிருந்த யானையின் மேல் எய்தார். அடுத்த நொடியே அந்த யானை அப்படியே உறைந்து மலையாக உருவெடுத்து விட்டது. அம்பாக புறப்பட்டுச் சென்ற நரசிம்மர் அந்த யானைமலைக்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
இன்றும் ஆனைமலையில் சிவனுடைய வில்லிலிருந்து அம்பாக வந்து யானையை அழித்துவிட்டு மலைக்குகையில் அமர்ந்திருக்கும் நரசிம்மரைத் தரிசிக்கலாம். இவ்வரலாற்றைத் திருவிளையாடல் புராணத்தின் “யானை எய்த படலத்தில்” பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார். யானை ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றம் தரும் இந்த மலை வெகு அழகு. இதன் அடிவாரத்தில் அமைந்த குடைவரைக் கோயிலில் அருட்பாலிக்கிறார்கள் ஸ்ரீயோக நரசிம்மரும் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரும்! கோயிலுக்குள் நுழைந்ததும் தெற்கு பார்த்தபடி சுகாசனத்தில்…
• மிகவும் புராதனமான கோவில் இந்த யானைமலை ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயில். குடைவரை கோயில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோயிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
• இத்திருக்கோயில் தோற்றம் குறித்து திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம், மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவறை கோயிலாகும்.
• நரசிம்மர் கோயில்களிலேயே மிகப்பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.
• பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். ஆனால் தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோயிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன.
• மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும் நரசிங்கவல்லி தாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனென்றால், கொடி மரம் என்பது கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவை பொறுத்தே அமையும். இத்தலத்தில் கருவறைக்கும் மேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
• அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார். கருட மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம். கடந்து உள்ளே செல்ல… சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக நரசிம்மர். பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ… முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்! வேண்டியதை வேண்டிய முன்னே தரும் தெய்வம் இந்த நரசிம்மர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
• இந்த மலையில் அமைந்திருக்கும் மற்றுமொரு குடைவரை லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலம் ஆதலால் இம்முருகன் அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.
• இந்த லாடன் கோயில் கருவறையில் தெய்வானை மட்டுமே உடனிருக்க, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான திருக்கோலம் இது என்கிறார்கள் அடியவர்கள். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில்
யானைமலை ஒத்தக்கடை
மதுரை மாவட்டம் – 625 107
+91 – 98420 24866
மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =