#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #தென்திருமுல்லைவாசல்

February 13, 2023 0 Comments

மூலவர் : முல்லைவனநாதர், மாசிலாமணீசர் ,
அம்மன் : அணிகொண்ட கோதையம்மை,(சத்தியானந்தசவுந்தரி)
தலவிருட்சம் : முல்லை
தீர்த்தம் : பிரம்ம, சந்திரதீர்த்தங்கள்
புராணபெயர் : தென் திருமுல்லைவாயில்
ஊர் : திருமுல்லைவாசல்
மாவட்டம் : நாகப்பட்டினம்
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவ ஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவ ஸ்தலம் தென் திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக்கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.
முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும்போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டுரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்துவிட்டோமே என வருந்தியவளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லைவாசல் என்று பெயர் வந்தது.
• இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத் தழும்பை இன்றும் காணலாம்.
• அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி.
• பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லைவாசல் ஆகும்.
• பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்துகொள்ள இங்குள்ள முல்லைவனநாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.
• இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கைவாசம் செய்வதாக ஐதீகம்
• இது, கடற்கரைக் கோவிலாகும்.
• சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது, கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது.
• சோழர்களால் கட்டப்பட்டது. 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
• தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 7வதுதலம்..
• இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
• சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பது ஐதீகம்.
• அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த நோயைப் போக்கிக் கொண்ட தலம்.
• கோயிலுக்கு இராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
• சுசாவி என்பவரின் மூத்த பிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும் போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார்.
• உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்றதலம். இதற்கு திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம்திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
• வடக்கே நந்தகோபால தீர்த்தம் என்ற குளம் இருக்கிறது.
மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லை வனநாதர் திருக்கோவில்,
திருமுல்லைவாசல் – 609 113.
நாகப்பட்டினம்மாவட்டம்.
போன்:
+91-94865 24626
சீர்காழிக்கு கிழக்கே 13-கி.மீ.தூரத்தில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =