#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

மூலவர் : சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தல விருட்சம் : பட்டரி மரம்
தீர்த்தம் : வஜ்ஜிர தீர்த்தம்
ஊர் : வல்லக்கோட்டை
மாவட்டம் : காஞ்சிபுரம்
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பிவைத்தான்.
இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான்.
பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்கு சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங்கினார்.
“துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்” என்று ஆசி கூறி அனுப்பினார். பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல் வழி காட்டுமாறு வேண்டி நின்றான்.
துர்வாச முனிவர், பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார். அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான், பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே, வல்லக்கோட்டை முருகப்பெருமான் திருக்கோயில்.
வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபயகரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது. பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள், வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
7 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை.
வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இந்தப் பகுதி இருந்தது. அந்த அசுரன், தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதையடுத்து தேவர்கள், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருப்பெருமானும் தேவர்களின் துயரைத் துடைக்க எண்ணினார். அதன்படி அசுரனை அழித்து அவனுக்கு முக்தி அளித்தார். மேலும் அசுரனின் வேண்டுகோள்படி, இந்த ஊர் ‘வல்லன் கோட்டை’ என்று சிறப்பு பெறும் என்றும் அருளினார். அந்த வல்லன்கோட்டையே, தற்போது வல்லக்கோட்டை என்று மருவி உள்ளதாக பெயர் காரணம் சொல்லப்படுகிறது.
• 1000+ ஆண்டுகள் பழமையான கோவில்.
• இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் முருகன் சிலையும், உடன் வள்ளி தெய்வானை சிலைகளும் உள்ளன.
• முருகனுக்கு எதிரே இரட்டை மயில்
• கோயிலின் கருவறை எந்த நாகரிக அலங்காரமும் இல்லாமல், விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகனை காணும் படி இருப்பது அழகைக் கூட்டுகிறது.
• இந்திரன் தமது குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுவதற்கு ஒரு சிறந்த இடத்தை உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவரும் பூலோகத்தில் வல்லக்கோட்டை என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டு நலம் பெறுவாய் என அருள்பாலித்தார்.
• இந்திரன் இத்தலம் வந்து தனது வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது இஷ்ட சித்திகளை பெற்று சென்றான். எனவே இத்தல தீர்த்தம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
• அருணகிரிநாதர் தலயாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு, மறுநாள் திருத்தணி செல்லலாம் என நினைத்து கொண்டே இரவில் அங்கு தங்கினார். இவரது கனவில் கோடைநகர் குமரன் தோன்றி, “”என்ன அருணகிரியாரே! வல்லக்கோட்டையினை மறந்தனையே,” என்று கூறி மறைந்தார். கண்விழித்த அருணகிரிநாதரும் திருத்தணி செல்லும் முன் வல்லக்கோட்டை முருகனை தரிசித்து திருப்புகழ் பாமாலை (8பாடல்) பாடி மகிழ்ந்தார்.
• எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்துக்கு சென்றபோது அந்த ஆலயத்தின் தலவிருட்சம் – பட்டரி என்ற மரத்தின் அடியில்தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார்.
• பல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து , அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன்படுத்தவில்லை.
• ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.
• அன்னதானம் இக்கோவிலின் சிறப்பாகக் கூறப்படுகிறது. 50, 100 என்று நபர்களுக்கு அன்னதானம் வழங்க வழிமுறைகளைத் திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா:
அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
வல்லக்கோட்டை – 602 105
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2717 2225.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது. இங்கே இருந்து 17 கிமீ தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 7 =