தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர்: விஷ்வ ஹிந்து பரிஷத்
#தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர்: விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற வார்த்தை வருவதால் இந்த கட்டுரை ஒரு மத சம்மந்தமான கட்டுரை அல்லது அரசியல் சம்மந்தமானது என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மறைந்த பத்திரிகையாளரைப் பற்றிய கட்டுரை இது. நேற்றைய தினமலரில் (3-1-23) ஒரு செய்தி கண்ணில் பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் எனும் வி.எச்.பி யின் வட தமிழகத் தலைவராக சென்னையைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் முனைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தான் அது. எனக்கு ஆண்டாள் சொக்கலிங்கத்தைப் பல வருடங்களாகத் தெரியும். அவர் வாஸ்து நிபுணர் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கும் வி.எச்.பிக்கும் உள்ள உறவு பற்றித் தெரியாது. நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலைப் பற்றித்தான் எங்கள் பேச்சு இருக்கும். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ஏன் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், சில புராண பெரிய கோவில்களுக்கு ஏன் கூட்டம் வருவதில்லை என்றெல்லாம் சுவாரசியமாகப் பேசுவார். ஆண்டாள் கோவிலுக்கு பெரிய அளவில் கைங்கரியம் பண்ணியிருக்கிறார். அவருடைய அப்பாவின் தாத்தா ஒரு பத்திரிக்கையாளர் என்று என்னிடம் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமாக அவருடைய அப்பாவின் தாத்தா பத்திரிக்கையாளர் என்று சொன்னாலும் எனக்கு அவருடைய அப்பாவின் தாத்தா டி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை மிகச் சிறந்த பத்திரிகையாளர் என்று தெரியும். அவருடைய அப்பாவின் தாத்தா பற்றி எனக்குத் தெரிந்த (நான் படித்து அறிந்த) செய்திகளைக் கூறத்தான் இந்தக் கட்டுரை. என்னுடைய நண்பர் ஆண்டாள் சொக்கலிங்கத்தின் அப்பாவின் தாத்தா டி.எஸ் சொக்கலிங்கம் பிள்ளை தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர். எழுத்தாளர் மாலன் (இவரும் தினமணி பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார் ) எழுதிய “தினமணியும் இலக்கியமும்: வறளாத வரலாறு” என்ற கட்டுரையில் “தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை தினமணியில் பொறுப்பேற்றதற்கு முன்பாகவே இலக்கிய உலகில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். அவர் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இதழ் என்று வரலாற்றாசிரியர்களாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் வித்து என்று படைப்பாளிகளாலும் கொண்டாடப்படும் மணிக்கொடி இதழை நிறுவியவர்களில் ஒருவர். முன்னோடி இதழாளர் மட்டுமல்ல. ஒரு தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் என்ற உலக இலக்கியங்களில் உன்னதமான படைப்பு ஒன்றை மொழி பெயர்த்துத் தமிழுக்குத் தந்தவர். புதுமைப் பித்தன் என்ற தமிழ் இலக்கியத்தின் “பிரம்ம ராட்சனை” பேணி வளர்த்துக் காத்தவர் சொக்கலிங்கம் பிள்ளை. தான் பணியாற்றிய, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட எல்லாப் பத்திரிகைகளிலும் அவரைத் தன்னோடு அழைத்துச் சென்று இணைத்துக் கொண்டவர். புதுமைப்பித்தனை தினமணிக்குக் கொண்டுவந்தவரும் அவர்தான்” என்கிறார். உலகம் சுற்றிய ஏ.கே. செட்டியார் “ஆசிரியர் சொக்கலிங்கம்” என்ற தலைப்பில் (01-11-1943) சக்தி இதழில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். தென்காசியில் பலசரக்குகடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மிகச் சிறந்த பத்திரிகையாளராக பரிமளித்ததை அழகாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கிறார். “பாரதியாருடன் நட்பாக இருந்த சொக்கலிங்கம் பிள்ளையின் சகோதரர் ஆஷ் துரை கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். அந்தக் காலத்திலேயே சொக்கலிங்கம் பிள்ளை “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையின் சந்தாதாரர். அவர் எழுதிய முதல் கட்டுரை 1916ல் “ஆனந்த போதினி”யில் வெளியானது. அந்தக் காலக் கட்டத்தில் சுதேசமித்திரன், தேசபக்தன், தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தென்காசி காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியோடு இருந்திருக்கிறார். அப்போது காந்தியின் புதல்வர் தேவதாஸ் காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார். டாக்டர் வரதராஜூலுவின் “தமிழ்நாடு” பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி ஜில்லாவில் காங்கிரஸ் பிரதிநிதியாக வெற்றி பெற்றார். தினமணி ஆசிரியராக சேர்ந்த பிறகு “தினமணி சொக்கலிங்கம், சொக்கலிங்கமே தினமணி என்ற நிலை ஏற்பட்டது” என்று ஏகப்பட்ட செய்திகளை சுவாரஸ்சியமாக கட்டுரை விவரிக்கிறது. மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் கட்டுரை டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளையை“ஆசிரியப்பெருந்தகை” என்று புகழ்கிறது. அந்த புகழ்ச்சிக்கு என்ன காரணங்கள் என்று உதாரணங்களை அடுக்குகிறார் அழகிரிசாமி. “ ஒரு சமயத்தில் டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளை, வ ரா, ஸ்டாலின் ஶ்ரீநிவாசன் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள். அவர்கள் தோற்றுவித்த மறுமலர்ச்சி தான் பாரதி தோற்றுவித்த மறுமலர்ச்சி கருகி விடாமல் உயிர் பிழைத்திருக்க வைத்தது. எனவே இம் மூவரும் பாரதியை காப்பாற்றினார்கள் தமிழையும் காப்பாற்றினார்கள்” என்கிறார். மேலும் சொல்லுகையில் “ ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருப்பதைவிட ஆசிரியர் சொக்கலிங்கம் பிள்ளையின் கீழ் உதவியாசிரியராக இருப்பதில் சந்தோஷமும் சுதந்திரமும் அதிகம். யாரையும் நம்புவதற்கு பயப்படமாட்டார் ஏனென்றால் எப்பேர்ப்பட்ட நம்பிக்கைத் துரோகங்களும் தன்னை அசைத்துவிட முடியாது என்ற உறுதியான நெஞ்சம் படைத்தவர் ஆசிரியர் சொக்கலிங்கம் பிள்ளை “ என்கிறார். குற்றால அருவியில் வெள்ளைக்காரர்கள் காலை எட்டு மணிக்கு முன் குளிக்க வேண்டும் என்றிருந்த கட்டுப்பாட்டை போராடி உடைத்தெறிந்தவர் ஆசிரியர் சொக்கலிங்கம் பிள்ளை. தமிழுக்கு சில சுவாரசியமான சொற்களைக் கொடுத்திருக்கிறார். “ பற்றாக்குறை”, மேலிடம் (high command) அட்டூழியம் (atrocity), மின்னல் தாக்குதல், கிடுக்கி வியூகம் போன்ற புதிய சொற்களை தமிழுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதும் அழகிரிசாமியின் கருத்து. ஏ. என். சிவராமன், காநாசு, சிட்டி, சிதம்பர சுப்ரமணியம், ரகுநாதன் என்று எண்ணற்றோர் இவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். பா.மதிவாணன் என்பவர் இவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதெமி இவரை இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வைத்து அழகு பார்த்திருக்கிறது. ஒரு அயல் நாட்டு பெண்மணி இவரை ஒரு நாள் பார்த்துவிட்டு வந்தவுடன் தன் டைரியில் “இன்று ஒரு கனவானை சந்தித்தேன்” என்று எழுதினாராம். ஆமாம் அதுதான் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளையை வர்ணிக்க சரியான சொல் என்று எனக்குப் படுகிறது. பின் குறிப்பு: என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. “வ ரா, ஸ்டாலின் ஶ்ரீநிவாசன், கு. அழகிரிசாமி, ஏ.கே. செட்டியார், ஏ. என். சிவராமன், காநாசு, சிட்டி, சிதம்பர சுப்ரமணியம், ரகுநாதன் என்று ஏகப்பட்ட பெயர்கள் இந்தக் கட்டுரையில் வருகிறது. அவர்கள் யார் என்பது இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குத் தெரியுமா?
நன்றி கிருஷ்ணன்