கடிதம் – 29 – விதியும், மதியும்

December 17, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

குரு ஒருவரிடம் அவரின் சீடர் ஒருவர் ஒருமுறை விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார்களே? அதுபற்றி கூற முடியுமா என்று கேட்டார்.

குரு உடனே அந்த சீடரிடம், “உன் வலது காலைத் தூக்கு” என்றார். அவரும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றார். “சரி…. இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு” என்று குரு சொன்னார். “அது எப்படி முடியும்?” என்று கேட்டார் அந்த சீடர்.

“ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்துச் செய்தாய் அல்லவா? அது தான் மதி (பகுத்தறிவு). இன்னொரு காலையும் தூக்கச் சொன்னபோது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அது தான் விதி” என்றார். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும்.நம் முன்னோர்கள் நம் வாழ்வின் மேல் விதிக்கப்பட்டிருக்கும் சில உண்மைகளை “விதி” என்று சொல்லி வைத்து இருக்கின்றார்கள். அதை மாற்ற முடியாது. இப்போது சொல் விதியை மதியால் வெல்ல முடியுமா என்று?

இன்னும் சொல்லப் போனால் பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரணம் சர்வ நிச்சயம் என்பது விதி. இந்த இடத்தில் விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து நமக்கு வரும் மரணத்தை சற்று தள்ளி போட வைப்பதே தான் உதாரணமாக சொல்ல முடியும். நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படி விதிக்கும், மதிக்கும் வித்தியாசம் தெரியாமல் வெட்டி பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டு, இந்து மதக் கடவுள் சிலைகளை தெருவில் உடைத்து போட்டு கொண்டிருந்த எனக்கு 1995 – க்கு பிறகு தான் எண்ணத் தெளிவு ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு இருந்த பிரச்சினைகளால் எனக்கு ஜோதிடம் மேல் அபார நம்பிக்கை வந்தது. என் வாழ்க்கையில் அந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் எனக்கு சொன்னது எல்லாம் மிகச் சரியாக நடந்து இருந்தது. அவர் நடக்கும் என்று சொன்ன விஷயங்களும் மிகச் சரியாக நடந்தது உண்மையான ஆச்சரியம். இதில் அதிசயம் என்னவென்றால் அவர் நான் கடவுள் நம்பிக்கை என்கின்ற ஒரு விஷயத்திற்குள் போவதற்கு முன்பாகவே, ஒரு தீவிர நாத்திகனாக இருந்த போதே ஏதேச்சையாக 1994 – ல் அவரை சந்திக்க நேரிட்ட போது மிக முக்கியமான இரண்டு விஷயங்களை என் முகத்தை பார்த்த உடனே கூறினார். சொன்னவர் இன்றும் நலமாக இருக்கின்றார். அவர் பெயர் நாராயண ஐய்யங்கார். அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்:

  1. நீ நூற்றுக்கணக்கான கோவில்கள் கட்டுவாய் / புனரமைப்பாய்.
  2. உன் திருமணம் 1999, மே மாதம் 30 – ம் தேதிக்குள் திருச்செந்தூர் கோவிலுக்குள் வைத்து நடைபெறும்.

இந்த ஆருடைத்தை கேட்ட உடனே, ஐயரே, உன் நெத்தியில் போட்டிருக்கும் நாமத்தை எனக்கும் போட பாக்கிறாயா? என்று அவரை கிண்டல் செய்து விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள், அந்த ஜோதிடர் சொன்ன விஷயங்களோடு நூறு சதவீதம் ஒத்து போனதால் எனக்கு அவர் மேல் மிகப்பெரிய நம்பிக்கை வராமல் போனால் தானே ஆச்சரியப்படுவதற்கு!!

அவர் சொன்னது போல என் திருமணம் திருச்செந்தூரில் மே 30, 1999 – க்குள் (அதாவது 1999, ஏப்ரல் மாதம் 5 – ந்தேதி) நடைபெற்றது. ஆனால் 1996 – ல் இருந்து 1999 வரை, மே 30, 1999  என்கின்ற நாள் என்னுள் பசுமரத்தாணி போல் நன்கு பதிந்து போய் இருந்தது. அதன் காரணமோ என்னவோ, எனக்கு திருமணம் ஜோதிடர் சொன்னது போல் மே 30, 1999 – க்கு முன்னதாகவே முடிந்துவிட்டாலும் மே 30, 1999 தேதிக்குள் எனக்கு திருமணம் நடைபெறும் என்று அவர் எப்படி தீர்மானித்தார்? மே 30, 1999 – ன் மர்மம் என்ன என்பது என் திருமணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து என் மூளையை பிசைந்த கேள்வியாக என்னை தூங்கவிடாமல் செய்து வந்தது..

விதிக்கும், மதிக்கும் வித்தியாசம் தெரியாத எனக்கு எப்படி தெரியும் மே 30, 1999 – பிறப்பதற்கு முன் அதன் சூட்சுமத்தை.

மே 30, 1999 என்ன நடந்தது என்பதையும், கொடுத்தால் கிடைக்கும் பலமடங்காக என்பது தெரியாமல் கொடுத்ததால் கிடைத்தது என்ன – எனக்கு என்பதையும் அடுத்தடுத்த கடிதங்களில் பார்ப்போமா!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =