கடிதம் – 26 – அனாதையும், ஆண்டாளும்

December 9, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

*     என் அப்பாவின் திடீர் மரணம் ஏற்படுத்தி விட்டு சென்ற வெற்றிடம்

*     ஒத்தை குழந்தையாய் பிறந்து விட்டதால், சிறுவயது சகோதர, சகோதரிகள் எங்காவது தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு கொள்வதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது போல் வாய்ப்பு கிடைக்கவில்லையே என என் மனதில் தோன்றும் ஒருவிதமான வெறுமை உணர்வு

*     இழந்த காதலை ஏதாவது ஒரு தருணத்திலே நினைவுக்கு கொண்டு வந்து விட்டால் கிடைக்க கூடிய மரண வலி

இன்றளவும் நினைத்தாலே எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் மேற்சொன்ன மூன்றும்.

இந்த மூன்று விஷயங்களுக்காக நான் பட்ட / படும் கஷ்டம் வார்த்தைகளில் வடிக்க இயலாது. இந்த பூமியில் எனக்கு இருக்கும் கஷ்டங்கள் தான் கொடுமையின் உச்சகட்டம், கஷ்டத்தின் அடுத்தகட்டம் என்று நான் நினைத்து கொண்டிருந்த போது, சில வருடங்களுக்கு முன் என்னை சந்தித்த பெண் என் கருத்தை, சுக்கு நூறாக்கி சென்று விட்டாள் அவள் கதையை கூறிவிட்டு,

மனித இனம் சந்தித்து இருக்கவே முடியாத அவலங்கள், அசிங்கங்கள், துயரங்கள், துக்கங்கள் என்பதை மட்டுமே தனக்கு சொந்தமாக்கி  வாழ்க்கையை வாழ்ந்த அந்த பெண்மணி, மற்றவர்களுக்காகவும், தன்னை நம்பியவர்களுக்காகவும் சந்தர்ப்ப சூழ்நிலையினால், வேறு வழியில்லாமல் தன்னையே விற்பனைக்கு உள்ளாக்கி தன் உடம்பையே சந்தைக்கு கொடுத்து கூறும் போடப் பட்டு விட்டாள்.

அப்படிபட்ட பெண்மணிக்கு பிடித்த தெய்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்.

வரம்பின்றி, விளிம்பின்றி பெருமாளை நேசித்த ஆண்டாளை எல்லையின்றி நேசித்தவள் தான் என்னை சந்தித்தவள். அது என் பாக்கியம்.

என்னுடன் அவள் உரையாடி சொன்னது:-

உங்கள் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் இந்த நிகழ்ச்சியை எந்த நோக்கத்திற்காக செய்து கொண்டு இருக்கிறீர்கள் என எனக்கு தெரியாது. ஆனால் ஏதேச்சையாக தொலைகாட்சியில் நீங்கள் ஒரு முறை ஆண்டாளை பற்றி சொல்ல கேட்டதன் மூலம் உங்கள் நிகழ்ச்சியின் மேல் எனக்கு பெரிய நாட்டம் ஏற்பட்டது. எவ்வளவு வேலை இருந்தாலும், உங்கள் நிகழ்ச்சியை மட்டும் நான் தொடர்ந்து பார்ப்பேன். இன்று நீங்கள் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் தேவைப்படுகின்றது என்று சொல்ல கேட்டேன். இந்த வார்த்தையை கேட்பதற்காகவே செத்து போன இந்த உடம்பில் உயிர் பிரியாமல் இருக்கின்றது போல் ஐயா என்று சொல்லி விட்டு தன் விரலில் இருந்த மோதிரத்தை கொடுத்து ஐயா, இது என் அம்மா என் திருமணத்திற்கு கொடுத்தது. எந்த தவறும் கலக்காத உழைப்பால் வாங்கிய தங்கம். வாங்கிக் கொள்வீர்களா எனக் கேட்டார். வாங்கி கொண்டேன் நானும் கண்ணீர்மல்க.

வாங்கிய நான் மேலும் வாயடைத்து போனேன் அவரின் அடுத்த வார்த்தைகளை அவரிடம் இருந்து கேட்ட பின். நான் முதல் முறையாக Jaya Plus தொலைகாட்சியில் தங்கம் தேவை ஆண்டாளுக்கு என்று இரவு 7:49 க்கு சொன்ன உடனே அந்த நேரலை நிகழ்ச்சியிலேயே இரவு 7:50 க்கு 1 பவுன் தங்கம் நான் தருகிறேன் என்று முதன் முதலாக சொன்னது கோவையை சேர்ந்த திருமதி.மைலாத்தாள் அவர்கள். இரவு 8 மணிக்கு நேரலை நிகழ்ச்சியை முடித்து விட்டு 8:20 க்கு நான் அலுவலகம் வந்து சேரும் முன்பே அங்கு வந்து எனக்காக காத்திருந்து தங்கத்தை கொடுத்து விட்டு அவர் சொன்ன அந்த வார்த்தைகள்:- ஐயா! நான் ரொம்ப நாள் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் சாதனை படைப்பீர்கள். ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி உங்களாலே நிறைவுறும் 10 கிலோ தங்கம் அல்ல 100 கிலோ தங்கம் தேவை ஆண்டாளுக்கு என்றாலும் அதை நீங்கள் முன்னின்று கொடுத்து முடிப்பீர்கள். பார்க்க என் சார்பாக நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு தன் பெயர், இடம் சொல்ல மறுத்து என்னிடம் இருந்து உத்தரவு வாங்கி கொள்கின்றேன் என்று சொல்லி என்னை பிரிந்து சென்றார்கள்.

நான் நல்லவனா, கெட்டவனா என்று இந்த பெண்ணிற்கு தெரியாது. அப்படி இருக்க நான் தொலைகாட்சியில் சொன்னேன் என்பதற்காக என்னிடம் மோதிரத்தை கழட்டி கொடுத்து விட்டு பேர் கூட சொல்லாமல் செல்கிறாரே என்ற எண்ணத்துடன் இந்த தங்க மோதிரத்தை கோவிலில் ஒப்படைத்த பின் கோவலில் தங்க மோதிரத்தை ஒப்படைத்ததற்கு ஆதாரமாக கொடுக்கும் ரசீதை எங்கே அனுப்புவது அம்மா என்று நான் கேட்ட உடனே, நான் அதை உங்களிடம் கேட்டேனா? நானே ஒரு அனாதை. அனாதைக்கு எதற்கு ஆதாரம் என்று என்னையே கேள்வி கேட்டு விட்டு ஒரு வித மந்தகாச புன்னகை என்று சொல்வார்களே அது போல் சிரித்து விட்டு, நான் தொலைகாட்சியில் சொல்லும் ஆண்டாளின் மங்களாசனத்தை சொல்லியவாறே படிகட்டில் வேகமாக இறங்கி சென்று விட்டார்கள்.

வந்தார். வந்தவர் என்னை வென்றார். வென்று சென்றார் என்னுடைய வெற்றிடத்தை நிரப்பிவிட்டு.

*     நீங்கள் கொடுக்கும் பொருள், குறிப்பாக பணம் அடுத்தவர்களுக்கு கொடுக்கப்படும் போது, அதிலும் குறிப்பாக உதவியாக கொடுக்கும் போது இப்படி தான் கொடுக்க வேண்டும். வாங்குபவரின் நோக்கம் ஆயிரம் மடங்கு வேகமாக, அதிகமாக நிறைவேற வேண்டும். கொடுக்கும் நம்மை முன்னிலைபடுத்த கூடாது. வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்கு தெரியவே கூடாது. உதவியை யோசிக்காமல் செய்ய வேண்டும். உதவி செய்யவே நாம் பிறப்பெடுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும்.

மோதிரம் கொடுத்து எனக்கு பாடம் நடத்தி சென்றவள் ஆண்டாளின் பக்தையாக இருக்க முடியாது காரணம் அவருடைய பேச்சும், செயலும் ஒரு பக்தைக்குரிய குணங்களுக்குள் அடங்காது. வந்து சென்றவளின் செய்கைகள்  அத்தனையுமே ஆண்டாளுக்குரிய குணங்கள். வந்தவள் ஆண்டாளா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக, உறுதியாக என்னால் சொல்ல முடியும் “கொடு” என்கின்ற வார்த்தைக்கு சம கால வாழ்வு முறையில் என்னால் சொல்லக் கூடிய உதாரணத்திலேயே தலை சிறந்த உதாரணம் இதுவாகத்தான் இருக்கும்.

எதையும் எதிபாராமல் கொடுத்தவளின் அனுபவத்தை பார்த்த நாம் கொடுத்ததை புரிந்து கொடுத்ததால் இன்று 6600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளந்து நிற்பவரை பற்றி அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 20 =