கடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
சரியான படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டுநர் கூட தினமும் தாங்கள் ஓட்டும் வாகனத்தை முதல் முறையாக எடுக்கும் போது வாகனத்தை முன் நகர்த்தி பின் தாங்கள் போக வேண்டிய திசைக்கேற்ப வாகனத்தை இயக்கி கொண்டு செல்வார்கள். சரியான படிப்பறிவு இல்லாத ஒரு வாகன ஒட்டி கூட தினமும் தன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி தான் ஆரம்பிக்கிறான் என்பது தான் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தியாகும்.
நம்மில் பெரும்பாலானோர் முன்னோக்கியோ, பின்னோக்கியோ என்பதை விட நகர்தல் மட்டுமே முக்கியம் என்று கருதுவோம். நகர்தல் மட்டுமே வாழ்க்கை என்று வாழும் இத்தகைய சராசரி மனிதர்களின் வாழ்வு முறையை ஆராய்ந்து பார்த்து, அவர்கள் செலவிடும் நேரத்தை கூர்ந்து கவனித்தால் அவர்கள் வாழும் சராசரி வாழ்க்கையின் அர்த்தமற்ற போக்கிற்கு காரணம் யார் என்பது / எது தெளிவாகிவிடும்.
மேன்பட்ட ஒரு இயக்கத்தின் ஆராய்ச்சியின்படி இதுபோன்ற மனிதர்கள் சராசரியாக 73 வருடம் வாழ்கிறார்கள் என்று வைத்து கொண்டால், அதில்
தூக்கத்திற்கு என்று – 27 வருடங்களையும்
வேலை செய்யும் காலம் என்று – 11.5 வருடங்களையும்
பயணப்படுவதற்காக என்று – 8.5 வருடங்களையும்
தொலைக்காட்சி / சினிமா / இணையதளம் பார்ப்பதற்காக என்று – 7 வருடங்களையும்
சாப்பிடுவதற்காக என்று – 5.5 வருடங்களையும்
மருத்துவத்திற்காக என்று – 3.0 வருடங்களையும்
பள்ளி படிப்பிற்காக என்று – 2.8 வருடங்களையும்
படிப்பதற்காகவும், கேட்பதற்காகவும் என்று – 2.5 வருடங்களையும்
குளிக்க / சவரம் செய்ய / முடிவெட்ட / அழகுபடுத்த என்று – 1.5 வருடங்களையும்
எதுவும் செய்யாமல் வெட்டியாக பகல்கனவு காண்பதற்கு என்று – 1.5 வருடங்களையும்
கோவில்கள் செல்லவும் மற்றும் விளையாடுவதற்காகவும் என்று – 1.4 வருடங்களையும்
மனைவியுடனான அந்தரங்கத்திற்காக என்று – 0.8 வருடங்களையும்
செலவு செய்து, முடிந்த மட்டும் அடுத்தவர்களின் உயிர் எடுத்து இவர்கள் மட்டும் உயிர் வாழ்ந்து, உயிர் பிரிகிறார்கள் எந்த வித நல்ல சுய பதிவுகள் மற்றும் சிந்தனைகள் எதுவும் இன்றி. சராசரி மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் உண்ண, விளையாட, படிக்க, சம்பாதிக்க, படுத்து உறங்க என எல்லாவற்றிற்கும் நேரம் தெரிந்தோ, தெரியாமலோ ஒதுக்கப்படபட்டு வருகின்றது. தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திப்பவர்களாக இவர்கள் இருப்பதால் இப்படி வாழ்ந்து மறைபவர்கள் யாரும் கெட்டவர்களும் இல்லை. இவர்கள் வாழ்க்கையை பொறுத்தவரை பிறந்தோம், சம்பாதித்தோம், இறந்தோம் என்பது தான் இவர்களின் வாழ்வியல் கோட்பாடாக இருந்து இருக்க முடியும். இவர்கள் எக்காலத்திலும் சாதனையாளராக ஆகவே முடியாது.
இவர்களைப் போன்றவர்களுக்கு 1817 முதல் 1862 வரை வாழ்ந்து மறைந்த உலகின் தலைசிறந்த அமெரிக்க தத்துவ ஞானியான ஹென்றி டேவிட் தொரேயு அவர்கள் சொல்லி விட்டு சென்றதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
“நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்”.
ஆக நம் மனித வாழ்க்கையில் மனிதனையும், மாமனிதனையும் பிரிக்கும் ஒரே ஒரு விஷயம் எதுவென்றால் அது “கொடு” தான்.
கொடுப்பதற்கு என்று நம் வாழ்நாளிலே எவ்வளவு நேரம் செலவு செய்கின்றோமோ, எப்படியெல்லாம் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று யோசனை செய்கிறோமோ, கொடுப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சும்மா “கம்” என்று இருக்காமல் கொடுப்பதற்கான வாய்ப்பை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்ற வெறியை அடிவயிற்றில் வைத்து கொண்டு சுற்ற ஆரம்பிக்கிறோமோ, பிரித்து கொடுப்பதில் காகங்கள் போல் மாறுகின்றோமோ அப்போது தான் மனிதர்கள் எல்லாம் மாமனிதர்களாக மாறி விட்டார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். கொடுத்தவர்களே என்னை பொறுத்த வரை இந்த பூமியின் உண்மையான கடவுள்கள். “இட்டார் பெரியோர்” – கொடுப்பவரே பெரிய மனிதர் என்ற ஒளவையின் கூற்றை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள் எத்தனை கற்றாலும், எவ்வளவு பணம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு கொடுக்க / உதவ முன் வராதவர்கள் கற்கால பிறவிகளே…
“கொடு” என்பதை புரிந்து கொள்வதற்கு உதாரணமாக பணத்தை எடுத்து கொள்வோம் ஒரு சிறிய சமீபத்தில் நடந்த உண்மை கதையுடன் அடுத்த கடிதத்தில்.
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்