கடிதம் – 23 – நூறு போடும் சோறு

December 2, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

எறும்புகள் மழையில் நனைந்து நான் பார்த்தது இல்லை. காரணம் எறும்புகள் கூட எப்போதும் முன்னேற்பாடுகளுடன் தான் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது.

ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் ஏக்கத்துடன் மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் செயலுக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும்.

மனித கூட்டத்தில் பிறந்த நானும் அதற்கு விதிவிலக்கல்லவே? இருந்தாலும் நான் எங்கோ, எப்போதோ செய்த ஒரு மிக, மிக சிறிய நல்ல விஷயம் மட்டும் தான் என்னை ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதிக்கச் செய்தது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காரணம் உலகில் எத்தனையோ தெய்வ வழிபாட்டு முறைகள் இருக்கலாம்; எத்தனையோ மதங்கள் இருக்கலாம்; ஏன் இந்து மதத்திலேயே நூற்றுக்கணக்கான தெய்வ வழிபாட்டு முறைகள் இருக்கலாம்; ஆனால் எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு ஆண்டாளுக்கு மட்டும் உண்டு. அவள் சாதனையை முறியடிக்க வேறு எந்த சக்தியும் இல்லை இவ்வுலகில்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்டாள் சாமியாக நமக்கு எதையும் போதிக்கவில்லை. அவள் சாதாரண மனித உருவெடுத்து முடியவே முடியாது என்கின்ற வார்த்தையை முறியடித்து முடியும் என்று சாதனை படைத்து வாழ்த்து காண்பித்து சென்றிருக்கிறாள். எனக்கு தெரிந்த வரை ஒரு இலக்கை அடைய எத்தனையோ வழிகள் / வழிமுறைகள் இருக்க கூடும். அப்படி ஒரு கால் நிறைய வழிமுறைகள் இருந்தாலும், அந்த இலக்கை தெளிவாக அடைய ஆண்டாள் வகுத்து கொடுத்த வழிமுறை மட்டுமே எளிதானது; சரியானது; துல்லியமானது; (இந்த விஷயத்தை பிறகு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறேன்)

அப்படி சிறப்பு வாய்ந்த ஆண்டாள் அவதரித்த பூமியில் என் கால்பட்டது தான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக நான் கருதுகின்றேன். மண்ணோடு மண்ணாக போக இருந்தவனை விண் உயர சாதனை படைக்கும் அளவிற்கு மாற்றியது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மண் தான். அந்த மண்ணை மதித்த புண்ணியமோ என்னவோ களைத்துப்போன மனதோடு போனவனின் மனமானது ஆண்டாள் பிறந்த மண்ணை மிதித்த பிறகு ஆண்டாள் பற்றிய எண்ணங்களுடன் கனத்து திரும்பி வந்தேன். முதன் முதலாக ஆண்டாளை அவள் கர்ப்பகிரகத்தில் வைத்து இயற்கையாக மின்சார உபயம் இல்லாமல் பார்த்த நொடி என்னில் மின்சாரம் பாய்ந்த உணர்வை கொடுத்தது. அது என்னவோ தெரியவில்லை நான் இதுவரை ஆண்டாளை அவள் கர்ப்பகிரகத்தில் வைத்து 1000 தடவை பார்த்திருப்பேன் என்றால் 90௦ தடவை மின்சாரம் இல்லாமல் இயற்கையாகத் தான் பார்த்திருக்கிறேன்.(இதே போன்ற அனுபவத்தை மற்ற கோவில்களிலும் ஆராய்ச்சிக்காக போன போது அனுபவித்து இருக்கின்றேன்). ஆண்டாளை முதல் முதலாக பார்க்கும் போது மின்சாரம் சட்டென்று இல்லாமல் போனது அபசகுனமாக எனக்கு தெரிந்தது. ஆனால் ஆண்டாளை உணரத் தொடங்கிய உடன் பின் நாளில் அதற்குண்டான தெளிவையும் பெற்று விட்டேன்.

ஆண்டாளை தரிசிப்பதற்கு முன் என் வாழ்க்கை

சிதறிய தேங்காய் போல, தூரிகை இல்லாமல் ஓவியம் வரைய முற்பட்டது போல,

மாலுமி இல்லாத கப்பல் போல, தலைவன் இல்லாத போர்ப்படை போல,

நீரில்லா பூமி போல இருந்தது. அதிலும் குறிப்பாக எனக்கென்று எதுவும் இல்லை என்கின்ற வார்த்தை மட்டும் தான் என் உடல் முழுவதும் நிரம்பி இருந்தது.

ஆண்டாளை பட்டினியோடு, வேதனையோடு, கிட்டத்தட்ட அறைகுறை உயிருடன் தரிசித்த பிறகு,

மண்ணாக போக போகிறேன் என்ற எண்ணத்துடன் தரிசித்த பிறகு,

நான் மனதார வணங்கிய நம் ஆண்டாள் என்னை எந்த மண்ணில் நான் மண்ணோடு மண்ணாக போக நினைத்தனோ அதே மண்ணில் மூங்கில் விதையாக்கி அவளை பார்த்த அன்றே புதைத்தும் விட்டாள். விதை புதைக்கப்பட்ட அந்த உணர்வுடன் கோவிலை விட்டு வெளியேறும் முன் என்னையறியாமல் நான் செய்தது: சுய நினைவற்ற நிலையில் என்னிடம் இருந்த பணத்தில் இருந்து கிட்டத்தட்ட பாதியை அவள் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் போடுகிறேன். என்னிடம் அப்போது இருந்தது ரூ.242 என்று நினைவு. அதிலிருந்து ரூ.100 –ஐ நான் உண்டியலில் சேர்த்ததை கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு தான் உணரவே முடிந்தது என்னால். இது கிட்டத்தட்ட படிப்பதற்கு சினிமா கதை போன்று கூட இருக்கலாம். ஆனாலும் இது சத்தியமான உண்மை. ஆண்டாளிடம் அன்று நான் சேர்த்த அந்த நூறு ரூபாய் தான் இன்றளவிற்கும் எனக்கு சோறு போடுகின்றது. ஆண்டாளிடம் அன்று நான் சேர்த்த அந்த நூறு ரூபாய் தான் என்னை இன்று பல கோடி ரூபாய்க்கு சொந்தக்காரனாக்கி இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது குறித்து எத்தனையோ புத்தகங்கள் என்னென்னவோ தத்துவ கோட்பாடுகளை சொல்லி இருக்கின்றது. ஆனால் எனக்கு தெரிந்து எனக்கு பணம் வந்து சேர்ந்ததற்கு / குவிந்ததற்கு / குவிவதற்கு காரணம்

ஜோதிடம் அல்ல;

வாஸ்து அல்ல;

பெயர் மாற்றம் அல்ல;

பரிகார பூஜைகள் அல்ல;

பரிகார ஹோமங்கள் அல்ல;

ஆச்சரியம் ஆனால் உண்மை…

நான் செலவு செய்த அந்த நூறு ரூபாய்தான் இன்றைய என்னுடைய விஸ்வரூபத்திற்கு முழு முதற் காரணம்.

நூறு ரூபாயை செலவு செய்ததால் நான் ஜெயித்தேன் என்பதை நம்ப உங்களுக்கு சிரமமாக இருக்கலாம்.

பார்ப்போம்…….

அடுத்த கடிதத்தில் இதற்குண்டான விளக்கத்தை ஆண்டாள் கற்று கொடுத்த A B C D மூலமாக (?????!!!!!!!)…………….

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twenty =