ஆணுக்கு மடி பெண்ணுக்கு தோள் அப்பனுக்கு? – சிறகுகள் 9

November 5, 2021 0 Comments

ஆணுக்கு மடி
பெண்ணுக்கு தோள்
அப்பனுக்கு?
சிறகுகள் 9
அது என்னமோ தெரியல
என்ன மாயமோ புரியலை
நல்ல ஆழ்ந்த தூக்கம் எனக்கு
என் வீட்டில்
எப்போது தேவைப்பட்டாலும்
என் மகளுடைய படுக்கையில் படுத்து அவளுக்கே
அவளுக்கான போர்வையை
மேல் போர்த்தி கொண்டு
கண்ணை சற்று மூடுவது போல்
செய்தாலே போதும்.
தூக்கம்
அதுவும் அசாத்திய தூக்கம்
எங்கிருந்து தான் வரும் என்று இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தூக்கம்,ஆனந்த தூக்கம் வந்துவிடும்
தாயின் நூல் புடவையில்
4 வயது இருந்த போது
ஊஞ்சலாடி கிடைத்த கிறக்கத்துடன் கூடிய
தூக்கம்
மீண்டும் கிடைத்த உணர்வு
மகளுடைய படுக்கையில்
தூங்கி உணர்ந்தவனுக்கு
மட்டும் தான் புரியும்
உலகின் அலாதி போதை என்பேன் இதை.
பக்தியின் உச்சகட்டம் ஆண்டாளுக்கு அரங்கன் என்றால்
தூக்கத்தின் உச்சகட்டம்
இந்தச் சொக்கனுக்கு என் கற்பகத்தின் கட்டில்தான்.
தூக்கம் தொலைத்தவர்கள்
தூக்கம் விரும்புபவர்கள்
துக்கம் தொலைக்க வேண்டியவர்கள்
முயன்றுதான் பாருங்களேன் நான் சொல்வது உண்மையா பொய்யா என்று.
நிரந்தர தூக்கம் நம்மை தழுவும் முன் கிடைக்கின்ற தூக்கத்தை
அதன் உச்சிக்கே சென்று அனுபவித்து பார்த்து விடுங்கள்
அனுபவித்த ஆனந்தத்தில் இதை எழுதுகின்றேன்.
இந்த பரவச நிலையை
தொட எண்ணம் இருந்தால் போதும் எண்ணிய விஷயம் உங்கள் கைகூடும்
ஆணுக்கு ஒரு மடியும் பெண்ணுக்கு ஒரு தோளும் இருந்தால் போதும் எல்லா கவலையும் மறந்து விடும் என்று
நான் படித்ததுண்டு.
அப்பனுக்கு தன் பெண்ணுடைய படுக்கையும் கூட அவனுடைய தாயின் கருவறையை ஒத்த பாதுகாப்பை கொடுக்க கூடியது என்கிற விஷயத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தையாக
இருக்கலாம்
ஆனால்
நான் சொன்ன உச்சக்கட்ட தூக்கத்தை அனுபவிப்பவனுக்கு
இந்த உலகமே பஞ்சு மெத்தையாக மாறிவிடும்
நான் மாற்றிக் கொண்டேன் எனக்கு ஏற்றார் போல் இந்த உலகத்தை.
இந்த உலகை மாற்ற நீங்கள் தயாரா???
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =