#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

மூலவர் : மகரநெடுங் குழைக்காதர்
உற்சவர் : நிகரில் முகில் வண்ணன்
தாயார் : குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் : சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்
புராண பெயர் : திருப்பேரை
ஊர் : தென்திருப்பேரை
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி பொழிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்ப பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமைய பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு எழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.
வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
கோயில் சிறப்புகள் :
• 108 வைணவ தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அருகில் திருப்பேரை ஏற்ற தலம் ஒன்று உள்ளது ஆகவே இந்த தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர்.
• கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார் மகரநெடுங்குழைக்காத பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும், தன் காதுகளில் மீன் போன்ற அமைப்பை உடைய மகரகுண்டலங்கள் அணிந்து புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார்.
• பெருமாள் சன்னதிக்கு தென்புறம் தனி சன்னதியில் குழைக்காதவல்லி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் அலைமகளின் அம்சமாக விளங்குகிறாள்.
• பெருமாள் சன்னதிக்கு வட புறம் தனி சன்னதியில் திருப்பேரை நாச்சியார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் பூமகளின் அம்சமாக விளங்குகிறாள்
• இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு நிகரில்முகில்வண்ணன் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.
• வருணனும், நவகிரகங்களில் சுக்கிரனும் இங்குத் தவம் புரிந்த காரணத்தினால் இது வருண சேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
• மகர நெடுங்குழைக்காதரை வழங்கினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் எனப் பக்தர்கள் நம்புகின்றனர்.
• இந்த கோயிலில் கருடனின் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி இடது புறமாக அமைந்துள்ளது.
• இந்த கோயிலில் நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
• மணவாள மாமுனிகளும் இந்த தலத்தினை பாடி உள்ளனர்.
• இறைவன் மகரநெடுங்குழைக்காதர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த கோயில் தீர்த்தமாகச் சுக்கிர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியவை அமைந்துள்ளது.
• இத்தலத்தில் மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்
• இப்பகுதியை சுந்தர பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் நித்தமும் இத்தல பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய விரும்பி காவிரி பாயும் சோழ வள நாட்டில் இருந்து நூற்றியெட்டு அந்தணர்களை அழைத்து வர ஆணையிட்டான். அவனது ஆணைப்படி சோழ நாட்டிற்கு சென்ற வீரர்கள் 107 அந்தணர்கள் மட்டுமே கிடைக்க, அவர்களை முதலில் மன்னனின் ஆணைப்படி இங்கு அழைத்து வருகிறார்கள். வந்திருந்த அந்தணர்களோ நூற்றியெழு பேர் தான், ஆனால் மன்னன் வந்து நேரில் பார்க்கும் போது மொத்தம் நூற்றியெட்டு அந்தணர்கள் இருந்தார்களாம். இத்தல பெருமாளே நூற்றியெட்டாவது அந்தணராக எழுந்தருளி அருள்புரிந்தார் என்றும் இதனால் இத்தல பெருமாள் எங்களில் ஒருவர் என்றும் சிறப்பித்து கூறுகிறார்கள் இவ்வூர் மக்கள்.
நடைதிறப்பு :
காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
கோவில் முகவரி :
அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91 4639 272 233
அமைவிடம் :
இந்த தென்திருப்பேரை திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் திருக்கோளூரில் இருந்து சுமார் 3 kmதூரத்திலும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =