#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநெல்வாயில்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநெல்வாயில்
112.#அருள்மிகு_உச்சிநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
அம்மன் : கனகாம்பிகை
தல விருட்சம் : நெல்லி
தீர்த்தம் : கிருபா சமுத்திரம்
புராண பெயர் : திருநெல்வாயில்
ஊர் : சிவபுரி
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு :
சீர்காழியில் சிவபாத இருதயர்- பகவதி அம்மாள் ஆகியோரின் புதல்வராக பிறந்தவர் ஞானசம்பந்தர். தந்தையார் கோவிலுக்குச் செல்லும் போது, முரண்டு பிடித்து தானும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சிவபாத இருதயர், குழந்தை சம்பந்தனை கோவிலின் பிரம்மதீர்த்தக் கரையில் அமரச் செய்துவிட்டு, சிவ மந்திரத்தை உச்சரித்தபடி நீரில் இறங்கி மூழ்கினார். ஏற்கனவே பசியிலிருந்த குழந்தை தந்தையை காணாத பயத்தில், ‘அம்மை.. அப்பா..’ என்று அழைத்து அழுதது. இதை செவியுற்ற உமையவள், அந்தக் குழந்தைக்கு ஞானப் பால் ஊட்டினாள். மேலும் அம்மையும், அப்பனும் தரிசனமும் அளித்தனர். குளித்து முடித்து கரையேறி வந்த சிவபாத இருதயர், கடைவாயில் பாலொழுக நின்ற மகனைப் பார்த்து ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்.
குழந்தை சம்பந்தன் பாலருந்தியதைக் கூற ‘யார் பாலைக் கொடுத்தால் குடித்து விடுவதா?’ என்று கோபத்தில் அருகில் கிடந்த குச்சியை எடுத்து குழந்தையை அடிக்க முற்பட்டார். அப்போது அன்னையிடம் ஞானப்பால் பருகிய அந்த மூன்று வயது குழந்தை, சிவபார்வதி தரிசனம் தந்த இடத்தைக் சுட்டிக்காட்டியவாறு ‘தோடுடைய செவியன்…’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற தந்தை இறைவனின் அருள் தன் குழந்தைக்கு கிடைத்ததை எண்ணி பரவசமடைந்தார்.
அதன்பிறகு தந்தையின் உதவியுடனும், ஒரு கட்டத்தில் தந்தையின் துணையின்றியும் ஒவ்வொரு சிவாலயமாக சென்று வழிபடத் தொடங்கினார் திருஞானசம்பந்தர். இறைவனின் மீது மகன் பக்தி கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், திருமணம் செய்யாமல் இப்படியே இருந்து விடுவானோ என்ற அச்சமும் தந்தைக்கு இருந்தது. அதற்கேற்றாற்போல் திருஞானசம்பந்தரும், ‘இறைவனை பணிந்து பாடுவதற்கே என்பிறவி’ என்று கூறிவிட்டார். அவரை சம்மதிக்க வைக்கும் விதமாக, ‘இறைவனுக்காக குடும்பத்தார் சார்பில் நடத்தப்படும் மாபெரும் வேள்வியில் தம்பதி சமேதராக இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்று பொய்யுரைத்து மகனின் சம்மதத்தைப் பெற்றனர். திருநல்லூர் பெருமணம் எனப்படும் நல்லூரைச் சேர்ந்த நம்பாண்டார்நம்பி என்பவரின் மகளான தோத்திரபுரணி என்பவரை மணப்பெண்ணாக நிச்சயித்தனர். மேலும் அங்குள்ள சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் செய்வது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் திருஞானசம்பந்தர், திருவேட்களம் என்ற இடத்தில் சிவதரிசனம் செய்து கொண்டிருந்தார். எனவே அங்கிருந்தே திருமண நிகழ்ச்சிக்கு அனைவரும் புறப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
திருமணத்தை நடத்தி வைக்க திருநீலநக்க நாயனாரும், திருமணத்தைக் காண முருக நாயனார், பெருமபாண நாயனார் உள்ளிட்ட அடியார்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அனைவரும் சிதம்பரம் நடராசரையும், திருவேட்களம் பாசுபதேசுவரரையும் தரிசித்து விட்டு, திருநெல்வாயில் என்ற ஊரை அடைந்த போது உச்சிப்பொழுது (மதியம்) வந்து விட்டது. வெயில் தாக்கம் காரணமாக அனைவரும் சற்று இளைப்பாற முடிவு செய்தனர். அப்பொழுது அனைவருக்கும் பசி மேலிட, களைத்துப் போயினர். இதை உணர்ந்த இறைவன் கோவில் பணியாளர் உருவத்தில் தோன்றி, அனைவருக்கும் அமுது பரிமாறி பசி போக்கினார். பின்னர் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். உச்சிப் பொழுதில் அருள்புரிந்தவர் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் ‘உச்சிநாதர்’ என்று பெயர் பெற்றார்.
கோயில் சிறப்புகள் :
•மூலவர் உச்சிநாதேஸ்வரர் உச்சிநாதர், மத்யானேஸ்வரர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•அம்பாள் கனகாம்பிகை. கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம். சிவபெருமான் கிழக்கு பார்த்தும் அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.
•கிழக்கு நோக்கிய திருக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துக்கு முன்னால் கிருபா சமுத்திரம் என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே ஒரு பிரகாரத்தைக் கொண்ட ஆலயத்தின் உட்புறத்தில் இடதுபக்கமாக அதிகார நந்தி வீற்றிருக்கிறார். பெரும்பாலான ஆலயங்களில் பிரகார சுற்றில் பரிவார தெய்வங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் பிரகாரச் சுற்றுக்கும், கருவறைக்கும் இடைபட்ட இடத்தில் பரிவார தெய்வங்களின் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது அனைத்து மூர்த்தங்களையும் ஒருசேர சுற்றும் விதமாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
•ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள பெரிய மண்டபத்தில் சுவாமி – அம்பாள் சன்னிதிகளும் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் ஒருசேர இடம் பெற்றுள்ளன. இதே போன்ற அமைப்பை சிதம்பரம் அனந்தீஸ்வரர் ஆலயத்திலும் காண முடியும். இரண்டு ஆலய திருப்பணிகளும் நகரத்தார் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
•வசந்தமண்டபத்தில் பலிபீடமும், நந்தியம் பெருமானும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு நேரெதிரில் துவாரபாலகர்கள் காவல் புரிய, மூலவர் உச்சிநாதர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு இடது புறத்தில் அர்த்த மண்டபத்திலிருந்து தென்முகமாக ஆடிய கோலத்தில் அருள்புரிகிறார் நடராசபெருமான். பலிபீடத்தையும், நந்தியம் பெருமானையும் ஒட்டினார் போல, தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்
•சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று.
•இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
•சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.
•சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி”திருநெல்வாயில்’ என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது.
•இப்பகுதி மக்கள் இக்கோயிலை “கனகாம்பாள் கோயில்’ என்று அழைக்கின்றனர்.
•இக்கோயில் உள்ள அதே தெருவில் ‘திருக்கழிப்பாலை’ என்னும் மற்றொரு தேவாரத் தலமும் உள்ளது.
திருவிழா:
வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில்,
சிவபுரி-608 002,
அண்ணாமலை நகர் வழி,
கடலூர் மாவட்டம்.
அமைவிடம் :
சிவபுரி சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்காலத்தில் ‘சிவபுரி’ என்று அழைக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தெற்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் – பேராம்பட்டுச் சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். கோயில் வரை வண்டியில் செல்லலாம்.
#உச்சிநாதர் #மத்யானேஸ்வரர் #உச்சிநாதர்திருக்கோயில்வரலாறு
#கனகாம்பிகை #திருநெல்வாயில் #Sivapuri #thirunelvayil #utchinathar #mathyaneswarar #historyoftemples #annamalaiuniversity #Chidambaram #திருஞானசம்பந்தர் #திருமணம் #templehistory #templehistory #கடலூர் #templesofsouthindia #templesoftamilnadu #sivantemple #padalpetrasthalam #தலவரலாறு #பாடல்பெற்றதலங்கள் #சிதம்பரம் #அண்ணாமலைபல்கலைக்கழகம் #kovilvastu #SriAandalVastu #DrAndalPChockalingam