#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பழமுதிர்ச்சோலை

May 9, 2023 0 Comments

மூலவர் : தம்பதியருடன் முருகன்
தல விருட்சம் : நாவல்
தீர்த்தம் : நூபுர கங்கை
ஊர் : சோலைமலை, பழமுதிர்சோலை
மாவட்டம் : மதுரை
ஸ்தல வரலாறு :
தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற தமிழ் புகழ் பாடும் அவ்வைக்கு “தான்” என்னும் எண்ணம் சிறிது மேலோங்கியது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது. அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்… எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், “சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா…” என்று கேட்டுக் கொண்டார். “சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், என்ன பாட்டி… பழம் சுடுகிறதா? என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, “குழந்தாய்… நீ யாரப்பா?” என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுய உருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
கோயில் சிறப்புகள் :
•ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது பழமுதிர்சோலை. இது ‘அழகர் கோயில்’என்றும் வழங்கப்பெறுகிறது. முருகப்பெருமானின் தலமாகவும் திருமாலின் தலமாகவும் இது விளங்குகின்றது. திருமாலுக்கு உரியதாய் விளங்கும் அழகர் என்னும் திருப்பெயர் முருகனுக்கும் பொருந்துவதாகும்.
•சைவ, வைணவ பாரம்பரியங்கள் ஒன்றிணைந்து விளங்கும் திருத்தலம், கீழே சுந்தர திருத்தோளுடன் திகழும் பரமஸ்வாமி என்னும் கள்ளழகர் ஆலயம். நூற்றியெட்டு திருத்தலங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலைமலை. மேலே சிவன்மகன் சண்முகன் தன் தேவிமார் இருவரோடு அமர்ந்த சோலைமலை.
•பெருமாள் அழகிய தோற்றம் கொண்டவர். முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள் தருகிறது. அழகுடைய சுந்தரராஜப் பெருமாள் கோயில் (நின்ற கோலம்) கொண்டிருக்கும் மலை அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. மூலவருக்கு ‘கள்ளழகர்’, ‘மலையலங்காரன்’ ஆகிய பெயர்களும் உண்டு.
•சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.
•ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார்.
•முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோவில் சோலைமலை (பழமுதிர்சோலை) மட்டுமே.
•பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர் கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
திருவிழா:
இந்தக் கோவிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை(பழமுதிர்ச்சோலை),
அழகர்கோவில்- 625301.
மதுரை மாவட்டம்.
போன்:
+91- 452-247 0228
அமைவிடம்
மதுரை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அழகர்கோவில். இங்கு மலையின் அடிவாரத்தில் கள்ளழகருக்கு ஆலயம் உள்ளது. அதன் மேல் பகுதியில்தான் சோலைமலை முருகன் கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. அதே போல் அழகர்கோவிலின் அடிவாரத்தில் இருந்து சோலைமலை செல்லவும் சிறப்பு பஸ்கள் ஆலயத்திற்கு உள்ளேயே இயக்கப்படுகின்றன. தவிர அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்தும் கோவிலுக்குச் செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =