#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்துறைப்பூண்டி

May 2, 2023 0 Comments

மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன் : பிரகன்நாயகி (பெரியநாயகி)
ஊர் : திருத்துறைப்பூண்டி
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு :
ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.
திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.
மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.
மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.
கோயில் சிறப்புகள் :
•இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும்.
•சிவ தரிசனத்தால் மகிழந்த பிரம்மதேவன் இந்த தலத்தில் சிவனுக்கு ஒன்றும் அம்பிகைக்கு ஒன்றுமாக தனித்தனிச் சந்நிதிகள் அமைத்தாராம். அதுமட்டுமா? அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் அமிர்த புஷ்கரணியை உண்டாக்கி, அதன் தீர்த்தத் தைக் கொண்டு தினமும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து ஆறுகால பூஜைகள் நடத்தி வழிபட்டராம். பின்னர், சித்திரை மாதம் சிவாச்சார்யர்களைக் கொண்டு சிறப்பு பூஜை செய்தபிறகு பிரம்மலோகம் சென்றடைந்ததாக தலபுராணம் சொல்கிறது.
•அதிஅற்புதமாக அமைந்திருக்கிறது ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் ஆலயம். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு பெரியநாயகி. மாங்கல்ய பலம் அருளும் மங்கல நாயகி இவள்.
•இக்கோயிலில் சிவகாமவல்லியுடன் அருளும் நடராஜர், சுந்தரத் தாண்டவர் என்று அழைக்கப்படு கிறார்.
•இந்தத் தலம் தவம் புரிவதற்கு ஏற்ற தலம் என்பதை அறிந்த அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்திரி, பரத்வாஜர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர் ஆகிய ஒன்பது முனிவர் கள் இங்கே தனித்தனியாக தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சாயுஜ்ய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி ஆனந்த தாண்டவம் ஆடினார். மேலும் அவர்களுக்கு பிறவாநிலையைத் தந்து முக்தி அளித்தார். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, சித்ரா பெளர்ணமியில் இங்கு வந்து நவதீர்த்தங்களில் நீராடி தம்மை தரிசிக்கும் அன்பர்களுக்கும் பிறவா வரம் அருள்வதற்காக, சந்திர சூடாமணித் தாண்டவராக இங்கு அருள்கிறாராம் நடராஜபெருமான்!
•தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார். தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.
•இங்கு தீர்த்த விடங்கர் என்னும் சக்திவாய்ந்த மரகத லிங்கம் அமைந்துள்ளது.
திருவிழா:
சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருத்துறைப்பூண்டி-614 713,
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 99442 23644, 78717 80044, 98652 79137
அமைவிடம் :
திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =