#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னை
94. அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கமடேஸ்வரர்
அம்மன் : ஸ்ரீ காளிகாம்பாள்
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : கடல் நீர்
புராண பெயர் : பரதபுரி, சுவர்ணபுரி
ஊர் : சென்னை
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு :
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் இத்திருக்கோயில். ஆரம்பத்தில் அமைந்திருந்தது. ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது. புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம் மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். 1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.
தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார். சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது. இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.
கோயில் சிறப்புகள் :
•காளி அம்பாள் எப்போதும் கையில் தமருகம் சூலம் கட்கம் கபாலம் கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன் ஆணவத்தை அடக்கும் அங்குசம் ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம் சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை சோமன் சூரியன் அக்னி என்ற மூன்று கண்கள் நவரத்ன மணிமகுடத்துடன் வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள்.
•காளிகாம்பாள் மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
•காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்த மேருவாக அமைந்துள்ளது.
•காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். சிவபெருமான் கமடேஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார். இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் நவக்கிரகங்கள் வள்ளி தெய்வானையுடன் முருகர் ஸ்ரீவீரபகாமங்கர் அவர் சீடர் சித்தையா. கமடேஸ்வரர் துர்கா சண்டிமகேஸ்வரர் பைரவர் பிரம்மா சூரிய சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர் கொடி மரம் வடகதிர்காம முருகன் சித்தி புத்தி விநாயகர் காயத்ரி துர்கா யாகசாலை நடராசர் மகாமேரு வீரபத்திர மகா காளியம்மன் நாகேந்திரர் விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார்.
•இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல் குண வாயில் என்றும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் குட வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும் அகோர வீரபத்திரசாமியும் மாகாளியும் வடகதிர்காம முருகனும் உள்ளனர்.
•மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
•இந்திரன், குபேரன், வருணன், விராட புருஷன் விஸ்வகர்மா, வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட தலம்.
•கி.பி 1639-ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. பரதபுரி, ஸ்வர்ணபுரி என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்புராதன ஆலயம். விஸ்வ கர்மாக்கள் கோட்டையிலே வழிபட்டதால் கோட்டையம்மன். முற்காலத்தில் கடல் ஓரத்தில் இருந்திருக்கலாம் ஆங்கிலேயர் காலத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாறியிருக்க வேண்டும். செம்படவர்களும் மற்றவர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் இவ்வன்னைக்கு சென்னியம்மன் என்ற திருநாமமும் உண்டு. சென்னம்மன் குப்பமே, சென்னை ஆயிற்று.
•வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. ஸ்ரீ சக்ர நாயகியாம் அன்னைக்கு ஸ்ரீ சக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. இந்த சக்ரராஜ விமானம் எனப்படும் இத்தேர் கிண்ணித்தேர் என்று அழைக்கப்படுகின்றது.
•மூன்று கால்களுடன் பிருங்கி முனிவர் எழுந்தருளியுள்ளார். ஐயனை மட்டுமே வலம் வருவேன் அம்மையையும் சேர்த்து வலம் வர மாட்டேன் என்று அறியாமையால் தவறு செய்த பிருங்கி முனிவர் அன்னையின் சாபத்தினால் இவ்வாறு ஆனார். பின் அம்மை கேதார கௌரி விரதம் மேற்கொள்ளவும் இடப்பாகம் பெறவும் காரணமாய் இருந்தவர் பிருங்கி முனிவர். இன்றும் ஆருத்ரா தரிசனம் திருவுலா முடிந்து ஐயனும் அம்மையும் திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.
•உள்ளம் உருகுதய்யா முருகா என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.
திருவிழா:
வைகாசியில் பிரம்மோத்சவம் தொடங்கி வைகாசி விசாகத்தன்று 10-வது நாள் வீதி உலாவுடன் முடியும். முதல் நாள் காளி காம்பாள் வீதி உலாவும் அடுத்து காமதேனு, பூதகி, சிம்மம், யானை, தேரோட்டம், குதிரை, கிண்ணித்தேர் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாஹனத்தில் காளி காம்பாள் வீதியுலா நடைபெறும். ஆண்டு முழுவதும் விழாக் கோலம் இருந்து கொண்டேயிருக்கும்
திறக்கும் நேரம்:
காலை சந்தி பூஜை 6 மணி முதல் 7 மணி வரை,
உச்சிக்காலம் பகல் 12 மணி வரை
சாயரட்சைமாலை 5.30 மணி முதல் 6 மணி வரை,
அர்த்த ஜாமம் இரவு 9 மணிக்கு என பூஜைகள் நடைபெறுகிறது
முகவரி:
ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
தம்பு செட்டித்தெரு,
பிராட்வே,
சென்னை…600001.
போன்:
044 25229624