#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தென்காசி

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தென்காசி
83.#அருள்மிகு_காசிவிஸ்வநாதர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : விஸ்வநாதர்
அம்மன் : உலகம்மன்
தல விருட்சம் : செண்பகமரம்
தீர்த்தம் : காசி தீர்த்தம்
ஊர் : தென்காசி
மாவட்டம் : தென்காசி
ஸ்தல வரலாறு :
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிக்குச் சென்று காசி விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார்.
விந்தன்கோட்டையில் இருந்து வான்வழியே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் காசியம்பதிக்குப் பறந்து சென்று சிவனாரைத் தரிசிப்பார். பின்னர் சூரியோதயத்துக்கு முன்னரே தன்னுடைய கோட்டைக்கு வந்து ஆட்சி செய்யத் தொடங்கிவிடுவார். இப்படியாகத்தான் மன்னர், காசி விஸ்வநாதரை தரிசிப்பது இருந்து வந்தது. ஒருநாள், மன்னரின் மனைவிக்கும் காசிக்குச் செல்லவேண்டும் விஸ்வநாதரைத் தரிசிக்கவேண்டும் எனும் விருப்பம் மேலிட, தன் எண்ணத்தை மன்னரிடம் தெரிவித்தார். அதன்படி, மகாராணியையும் அழைத்துச் சென்றார் மன்னர். இருவரும் விஸ்வநாத சுவாமியைத் தரிசித்தனர். இந்தமுறை காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றையும் எடுத்து வந்தார் மன்னர். வழியில் அடர்ந்த நந்தவனச் சோலையில் தங்கினர். மீண்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால், காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தை நகர்த்தவோ அசைக்கவோ முடியவில்லை. மன்னர் பதைபதைத்துப் போனார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றார். கண்ணீர் விட்டு கதறினார்.
அப்போது, அசரீரி கேட்டது. ‘இந்த லிங்கம் இங்கேயே இருக்கட்டும்’ என அறிவிப்பு கேட்டது. அதன்படி, அந்த நந்தவனத்திலேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினார் மன்னர். அந்தத் தலம்… இன்றைக்கும் போற்றப்படுகிறது. சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
சிவகாசியில் கோயில் எழுப்பிய மன்னனுக்கு ‘இப்படியொரு லிங்கத்துடன் இங்கே நாம், ஒரு கோயில் கட்டவேண்டும்’ என விரும்பினார். ’இதைவிட பிரமாண்டமாக கோயில் கட்டவேண்டும். அந்த சிவலிங்கத்துக்கு காசி விஸ்வநாதர் என்றே பெயர் சூட்டவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே இருந்தார். ஒருநாள்… மன்னரின் கனவில் சிவனார் தோன்றினார். ‘உன்னுடைய கோட்டையில் இருந்து கட்டெறும்புகள் வரிசையாக ஊர்ந்து செல்லும். அந்த எறும்புவரிசை நிற்கும் இடத்தில், சிவலிங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு கோயில் எழுப்பு’ என அருளினார். அதன்படி, எறும்புவரிசைக்குக் காத்திருந்தார் மன்னர். எறும்புகள் கோட்டைக்குள் வந்தன. எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது
அந்த இடத்தில் கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான். 1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
கோயில் சிறப்புகள் :
•இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்,
•இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
•கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
•பல கோயில்களில் லிங்கத் திருமேனியாக காசி விசுவநாதர், விசாலாட்சி அம்பாள் தனி சந்நிதிகளில் கோயில் கொண்டு, சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருவதைக்காணலாம். வழிபாடு சிறப்பு பெற்ற காசி திருத்தலத்துக்குச் சமமானத் தலங்களாக திருவெண்காடு , திருவிடைமருதூர் , மயிலாடுதுறை, திருவையாறு, சாய்க்காடு, ஸ்ரீ வாஞ்சியம் ஆகிய கோயில்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
•குற்றாலம் அருகில் உள்ள தென்காசி திருக்கோயில் தென்காசி பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் (1422-63) தோற்றுவிக்கப்பட்டதாகும். வடகாசியில் உள்ள கோயில் பழுதடைத்துவிட்டதால் தென்காசியில் ஒரு கோயில் எழுப்ப வேண்டுமென்று இறைவன் பாண்டியனின் கனவில் தோன்றி கேட்டுக் கொண்டதால் இந்தக் கோயிலைக் கட்டினேன் என்ற செய்தி அம்மன்னனுடைய கல்வெட்டில் காணப்படுவது சிறப்பாகும்.
•காசி எனும் புண்ணிய நகரத்துக்கு இணையான திருத்தலம் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். ஆனால் தென்காசியில், பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தலபுராணம்.
•மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
•சுவாமி கோவில், முருகன் கோவில், அம்மை உலகம்மன் கோவில் என்ற மூன்று பிரிவுளாக கோவில்களும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.
•கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் காசி விசுவநாத சுவாமி. இவர் சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்றாலும் சற்றே பிரம்மாண்ட தோற்றம் உடையவர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ அலங்காரம் செய்யப்படும்.
•கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில், ஆனந்த காட்சியளிக்கிறாள் உலகாம்பிகை.
•கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் அகத்தியரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சக்கர பீடமே பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது. இந்த பீடத்திற்கு நேர் எதிரில் லிங்க சொரூபத்தில் சிவனும் எழுந்தருளி உள்ளார்.
•கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்பார்கள். அப்படிப்பட்ட கோபுரங்களுக்காகவே தனிச் சிறப்பு பெற்ற தமிழகத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று உலகம்மை உடன் காசிவிஸ்வநாதர் உறையும் தென்காசி திருத்தலம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள அகன்ற வெளித்திடல் கோபுரத்தின் கம்பீரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
•ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
•கோயிலிற்கும் கோபுரத்திற்கும் இடையில் பரந்த வெளிப் பரப்பு பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கில் இருந்து கிழக்காக வீசுகிறது. கோயிலை நோக்கிச் செல்லும்போது, காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் ஓர் அனுபவம் ஏற்படுகிறது.
•இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது)
•இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.
•சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.
•திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.
•தென்காசி இறைவன், காசிவிசுவநாதர்; இறைவி, உலகம்மை; செண்பக மரமும், பலா மரமும் தல விருட்சங்கள் இத்தலம் கண்ணைக் கவரும் சிற்பங்களைக் கொண்டது இரட்டைச் சிற்பங்களான இரண்டு வீரபத்திரர்கள், இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழணங்குகள், மன்மதன் ரதிதேவி ஆகியவை தனியழகுச் சிற்பங்கள்.
திருவிழா:
மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,
ஐப்பசி திருக்கல்யாணமும்,
ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,
தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
தென்காசி – 627 811,
திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91-4633-222 373
அமைவிடம் :
தென்காசி. ஊரின் மையப்பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளதால் விஸ்வநாதரை தரிசிப்பது எளிது.
#தென்காசி #காசிவிஷ்வநாதர் #உலகம்மை #தென்காசிகோயில் #உலகம்மன் #சிவன்கோயில் #thenkasi #kasiviswanathartemple #Ulagammai #kutralam #templesoftamilnadu #temple #templehistory #templesoftamilnadu #தலவரலாறு #ஸ்தலவரலாறு #ஆலயம்அறிவோம் #காசி #kasi #tenkasitemple #NAMASIVAYA #ஆலயவரலாறு #sivantemple #devaratemple #thirupugaltemple #senpagavanam #செண்பகவனம் #மேற்குதொடர்ச்சிமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =