#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவனூர்

April 12, 2023 0 Comments

மூலவர் : சுப்பிரமணியர்
அம்மன் : வள்ளி, தெய்வானை
ஊர் : கோவனூர்
மாவட்டம் : சிவகங்கை
ஸ்தல வரலாறு :
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது.
முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரரை வழிபடுவதற்காகச் சென்றனர். செல்லும் வழியில், அப்போது காட்டுப் பகுதியாக இருந்த கோவனூரில் தங்கிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்வதற்காக எங்கேனும் நீர்நிலை இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தனர். எங்குமே தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு ஊற்றை தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. சித்த மருத்துவத்தில் இந்தப் பூநீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு..
அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார்.
இந்தக் கோயிலின் நித்ய பூஜை கைங்கர்யப் பணிகள் செவ்வனே நடைபெற்று வர நென்மேனி, கீழ்மேனி, வீரவலசை, கிழக்குளம் ஆகிய ஊர்களில் நிலங்களை தானமாகத் தந்துள்ளனர். அவற்றின் மூலம் வரும் வருமானத்தை கோயிலுக்கு அளித்து வந்தனர். இது போன்று வேறு பல தர்மங்களும் கோயிலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. ஆளரவம் அற்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் சாந்நித்தியமிக்க கோயிலாக சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. நாலாபுறமும் உயர்ந்த மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
கோயில் சிறப்புகள் :
• சித்தர்கள் அருவமாக வரும் திருத்தலம். கோவனூர்
• சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம்.
• மூலவரின் தோற்றம் திருச்செந்தூர் செந்திலாதிபனை போல மிக அழகாக இருக்கும்.
• முருகன் சன்னதி முன்பு மயில் மண்டபமும், கோபுர வாசலின் வட புறத்தில் இடும்பன் சன்னதியும், இடது பக்கம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னதியும், விநாயகர் சன்னதியும் தனித்தனியாக அமைந்துள்ளன.
• கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும், விஸ்தாரமான பிராகாரம் காணப்படுகிறது. கோயிலின் எதிரே பலிபீடம், மயில் வாகன மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொடி மரம் இருந்த இடம் தற்போது வெறுமையாக உள்ளது. பிரதான கோயிலில் மகா மண்டபம் அர்த்த மண்டபம், கருவறை என நேர்த்தியான கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது.
• கோவானூரில் சாத்தப்பன் என்ற சிறுவன் இருந்தான். இவனுக்கு சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம். ஒரு நாள் இவன் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, தாகம் மிகுந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினான். அந்த முனிவர்களும் இந்த சிறுவனுள் ஆழ்ந்து கிடந்த இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றார்கள். இந்த சிறுவன் பிற்காலத்தில் இக்கோயிலே கதி என கிடந்தான். பின் பல தலங்களுக்கு சென்று “சாத்தப்பஞானி’ என எல்லோராலும் போற்றப்பட்டார். இவர் தான் சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்தவர். சிவகங்கை மன்னர்களின் ராஜகுருவாகவும் இருந்தார்.
• அகஸ்தியர் இந்த இடத்தில் முருகப்பெருமானை நினைத்து பிரதிஸ்டை செய்துள்ளார். பின்னர் பாண்டிய மன்னர்கள் மூலவரை பிரதிஸ்டை செய்து கோயிலாக உருவாக்கியுள்ளனர். இப்படி தான் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.
• கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம். அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.
• சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வதை இன்றைக்கும் நாம் காணலாம்.
• கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.
• சித்தர்கள் சாகாவரம் பெற்ற ஊர் என்று சொல்லப்படுகின்றது
• கோவனூர் பொட்டலிலே குண்டுமணி அம்மன் சந்நிதியிலே சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப்பெண்ணே என்ற பாடல் இன்றும் இந்த பகுதியில் பாடப்படுகிறது.
திருவிழா:
முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோவனூர் முருகன் கோயில்,
பில்லூர் கிராமம்,
கோவனூர்,
சிவகங்கை மாவட்டம்.
அமைவிடம் :
சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் 7 கி.மீ தூரத்தில் பில்லூர் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு சிவகங்கையிலிருந்து திருப்புவனம், பூவந்தி செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். பில்லூரிலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. நடந்து சென்றால் கோவானூர் முருகன் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =