#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 4, 2023 0 Comments

மூலவர் : நரசிம்மர்
தாயார். : அலர்மேல்மங்கை
தீர்த்தம். : நரசிம்ம தீர்த்தம்
ஊர் : கீழப்பாவூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மஅவதாரம் நிகழ்ந்தது. அச்சிறுவனின் தாத்தா காஸ்யபர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காஸ்யபரால் நரசிம்மரை தரிசனம் செய்ய முடியாமல் போயிற்று.
எனவே அவர் தன் பேரன் பிரகலாதனுக்காக திருமால் எடுத்த நரசிம்ம வடிவத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர். முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, திருமாலின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடருங்கள். என் நரசிம்ம வடிவ தரிசனத்தைக் காண்பீர்கள்!” என்பதே அந்த அசரீரி வாக்கு.
அந்த அசரீரி வாக்கின்படி புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தனர் அந்த ரிஷிகள். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு அருள மனம் குளிர்ந்தார் திருமால். அக்கணமே, ஸ்ரீ தேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்ம அவதார வடிவில் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “மகா பிரபு! தாங்கள் இந்த திருக்கோலத்திலேயே இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதார திருமேனியில் நிரந்தரமாக குடிகொண்டார்.
இரணிய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். சிறிய கருவறையில், கேரள பாணியில் உப்பிய கன்னங்களுடன் பல்லவர்கால படைப்பு சிற்பமாக கம்பீரமாக காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர், இரணியனை தன் இடது மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப்பிடிக்க, நான்கு கரங்கள் வயிற்றை கிழிக்க, இரண்டு கரங்கள் குடலை உருவ, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் பூரண அவதார புருஷராக 16 திருக்கரங்களுடன் அருள்புரிந்து வருகிறார்.
சிலிர்க்கும் பிடரியுடன் பிரகாசிக்கும் சிங்கமுகம், குகைபோல் இருண்ட வாய், தூக்கிய காதுகள், தடித்த புருவம், உருக்கிய பொன் போன்று ஒளிரும் கண்கள், நேர்கொண்ட பார்வை, அகன்ற நெற்றி, வீங்கிய கழுத்து, விசாலமான மார்பு, ஒட்டிய வயிறு, தலைக்குமேல் வெண்குடை என்று காட்சியளிக்கிறார்.சூரியனும், சந்திரனும் சாமரங்கள் வீச, சங்கு – சக்கரம் கொண்டவராகத் திகழ்கிறார். காஸ்யப முனிவர், காசி மன்னன், பிரகலாதன், பிரகலாதனின் தாய் ஆகியோர், அவர் காலடியில் அபயம் கேட்டு, தஞ்சமடைந்து நிற்கிறார்கள்.
கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. இத்தலத்தில் லட்சுமி நரசிம்மராக வீற்றிருந்து திருமால் அருள்புரிந்து வருகிறார். பொதுவாக நரசிம்ம அவதாரத்தின் பல வடிவங்களில், லட்சுமி நரசிம்மரும் ஒன்று. இதில், அவர் மகாலட்சுமியை தன் மடியில் அமர்த்தியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறார்.
கோயில் சிறப்புகள் :
கன்றுகுட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் அம்மா என்று கத்தினால், அந்த ஒலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய் பசு இறங்கிவந்து கன்று பக்கத்தில் வந்து நிற்பது போலவே நரசிம்மா! என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.
மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது, நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க எடுக்கப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காக எடுக்கப்பkovilvastu தன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும்.
நரசிம்மரின் அவதார காலம் வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. இதனால், காஸ்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிராத்தித்தனர். அவர்களுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக எழுந்தருளிய தலம், கீழப்பாவூர்.
மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார்.
இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. மூன்றாவதாக கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.
இத்தல பெருமாளுக்கு `முனைஎதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயர் உண்டு. `முனைஎதிர் மோகர்’ என்பதற்கு `போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.
மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது இவ்வாலயம். தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தை சார்ந்தது என்கிறார்கள்.
ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தை சார்ந்தது.
நரசிம்மரை, சிங்கப்பெருமாள் என்பார்கள். உலக நன்மைக்காக நேராக வைகுண்டத்திலிருந்து மண்ணில் தோன்றியுள்ள சிங்கப்பெருமாளின் அவதாரக் காலம் வெறும் இரண்டே நாழிகைதான்! படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் நிகழ்ந்தது இக்காலத்தில்தான். எதிர்பாராமல் நிகழ்ந்த நரசிம்ம அவதாரத் திருக்கோலத்தை திருமகள் தரிசிக்க இயலவில்லை என்பதால் இத்தலத்தில் தங்கி இங்குள்ள நரசிம்மரை அவள் எந்நேரமும் பூஜித்தும், தியானித்தும் வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வறட்சியான காலங்களில்கூட கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் பசுமையாகவும், செழுமையாகவும் இருக்கின்றன.
இங்கு அலர்மேல்மங்கை-பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம் உள்ளது. அதற்கு பின்பகுதியில் மேற்கு நோக்கிய தனி சந்நதியில், திரிபங்க நிலையில், விரும்பியதை அருளும் விசித்திர லட்சுமி நரசிம்மர் எழுந்தருள் புரிந்து வருகிறார். நரசிம்மர் சந்நதியின் முன்பு அவரின் உக்கிரம் தணிய தெப்பக்குளம் (நரசிம்மர் தீர்த்தம்) அமைந்திருப்பது, தென்னிந்தியாவில் வேறெங்கும் காண இயலாத சிறப்பு என்கிறார்கள். மகாலட்சுமியே இதில் தினமும் நீராடி நரசிம்மரை வணங்கி வருவதாக ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜை.
காலை 07.30 மணி முதல் பகல் 10.30 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி -627806.
+91-9442330643
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில், கீழப்பாவூர் கிராமத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
தென்காசி – திருநெல்வேலி சாலையில், திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 32 கிலோ மீட்டர் தொலைவிலும்,
தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்காக சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fourteen =