#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கிரிகுடி

March 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கிரிகுடி

56.#அருள்மிகு_லட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு

மூலவர் : லட்சுமி நரசிம்மர்

உற்சவர் : பிரகலாத வரதன்

தாயார் : கனகவல்லி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐவகை தீர்த்தங்கள்

ஊர் : சிங்கிரி குடி

மாவட்டம் : கடலூர்

ஸ்தல வரலாறு :

திருமாலின் பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்புப் பெற்ற அவதாரமாகக் கருதப்படுவது நரசிம்ம அவதாரம். மக்களின் அபயக் குரலுக்கு நொடிப்பொழுதில் செவி சாய்த்த அவதாரம் அது.

“தூணிலும் இருப்பார் நாராயணன், துரும்பிலும் இருப்பார் நாராயணன்” என்கிற பிரகலாதனின் வாதம் கேட்டுக் கோபமடைந்த அவனது தந்தை அரக்கர் குல வேந்தன் இரண்யன், “இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்?” என்று தனது கதையால் தூணை அடித்த மாத்திரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் நரசிம்மம்.

பகலிலோ இரவிலோ, வீட்டிற்கு உள்ளோ புறமோ, மனிதனோ மிருகமோ, ஆயுதமோ கைகளோ, நீரோ நெருப்போ எதுவாலும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று சிவபெருமானிடம் சாகாவரம் வாங்கியிருந்த அரக்கர் வேந்தன் இரண்யனின் அகந்தையை அழிக்க, மனிதனும் மிருகமும் அல்லாத நரசிம்மராக, பகலும் இரவுமல்லாத அந்தி வேளையில், வீட்டிற்கு உள்ளும் புறமுமில்லாத வாசற்படியில், மண்ணிலோ விண்ணிலோ அல்லாமல் தனது மடியில் கிடத்தித் தனது கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து, பக்தப் பிரகலாதனின் உயிரையும், வார்த்தையையும் காப்பாற்றிய நரசிம்மரின் அவதாரத்துக்கான தனிச்சிறப்பு, கூப்பிட்ட குரலுக்குச் செவி சாய்ப்பவர் என்பதுதான்.
சிம்ம கர்ஜனையுடன் ஆக்ரோஷ மூர்த்தியாக பயங்கர உருவத்துடன் தோற்றமளிக்கும் நரசிம்மரைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவரது ஆக்ரோஷமும், அடங்காச் சினமும் தாயாரின் ஸ்பரிசத்தில் அடங்கிப் போய், அருள்பாலிக்கும் அற்புதம்தான் அது. லெட்சுமியின் பிரியனாக மாலோலனாகத் தாயாரைத் தனது மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர், கேட்ட வரம் வழங்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குவதில் வியப்பென்ன இருக்கிறது.

சிங்கிரிகுடியோன் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்திருத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி என்ற சிங்கர்குடி தலத்தில் அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) இத்திருத்தலத்தில் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இன்னொரு தலம், ராஜஸ்தானில் உள்ளது.
ஹிரண்யனின் துன்புறுத்தலைக் கண்டு அஞ்சி நாட்டை விட்டு அகன்று காட்டில் ஒளிந்து வாழ்ந்த தவயோகிகள், தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் நரசிம்ம அவதாரமெடுத்து ஹிரண்யனை வதம் முடித்த பின்பு, பெருமாளிடம் அந்த கோலத்தைத் தங்களுக்கும் காட்டியருளுமாறு கோரினர். அவ்வாறே பெருமாளும் நரசிம்ம அவதாரக் கோலத்தைக் காட்டினார். இதேபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் நிகழ்ந்துள்ளன. இவையே அட்ட நரசிம்ம தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

இந்த எட்டு தலங்களில் நடுவில் அமைந்துள்ள பூவரசன் குப்பத்தைச் சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கிரிகுடி, சிந்தலவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல், ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு.
பிரகலாதன் வேண்டுகோளுக்கிணங்கி, 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது. இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோயிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

கோயில் சிறப்புகள் :

• நரசிம்மர் கோயில்களில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். சில கோயில்களில் யோக நிலையில் தனித்து காட்சி தருவார். கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

• ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். இத்தலம் மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

• உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

• ஆலயத்தின் வடக்கு வெளிச் சுற்றில் ஆண்டாள் நாச்சியாருக்கு தனிச்சன்னிதியும், தெற்குச் சுற்றில் கிழக்கு பார்த்தவாறு தல நாயகியான கனகவல்லித் தாயாரின் சன்னிதியும் உள்ளன.

• நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது. குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

• மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனே இங்கு சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம். எனவே மூலவரின் மேல் உள்ள விமானம் சந்திர விமானம் என்ப்படுகிறது.

• தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அஷ்ட நரசிம்ம தலங்களாக உள்ளன.

• சிங்கிரி கோயில், பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்ம தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை

• தெற்கு நோக்கிய சிறிய சன்னிதியில், சீதா, லட்சமணர், ஆஞ்சநேயர் சூழ இருக்கும் ராமபிரானின் ஐம்பொன் திருமேனியை தரிசிக்கலாம். இந்த சன்னிதியின் எதிரே வில்வமரம் ஒன்று தல விருட்சமாக இருப்பது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

திருவிழா:

• சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா நடக்கிறது. அதற்கு 9 நாள் முன்பாக கொடியேற்றி பிரமோற்ஸவம் தொடங்குகிறது.

• மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி,

• ஐப்பசியில் பவித்ர உற்சவம்,

• வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை,

• ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,
சிங்கிரிகுடி – 605 007
கடலூர் மாவட்டம்.

போன்:

+91- 413-261 8759

அமைவிடம்:

கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்திலுள்ள தவளைக்குப்பம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒன்றரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுச்சேரியிலிருந்தும் நேரடி பஸ் வசதி உள்ளது.

#சிங்கிரிகுடி #நரசிம்மர் #லெஷ்மிநரசிம்மர் #பெருமாள் #நாமோநாராயணா #templesofindia #templesofsouthindia #templesoftamilnadu #templesofperumal #ஸ்தலவரலாறு #தலவரலாறு #அஷ்டநரசிம்மர் #DrAndalPChockalingam #SriAandalVastu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =