#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

January 27, 2023 0 Comments

3. #திருப்பெருந்துறை அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்
மூலவர் : ஆத்மநாதர்
அம்பாள் : யோகாம்பாள்
தல விருட்சம் : குருந்த மரம்
தீர்த்தம் : அக்னிதீர்த்தம்
புராண பெயர் : திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்,சிவபுரம்
ஊர் : ஆவுடையார்கோயில்
மாவட்டம் : புதுக்கோட்டை
மாணிக்க வாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர். அரசன் உத்தரவுப்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வந்தார். அப்போது சிவ மந்திரங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் திசையில் சென்று பார்த்தால் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதை கண்டார். மாணிக்கவாசகர் தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி வேண்டினார்.
குருவும் ஒப்புக்கொண்டார்.
உபதேசம் கேட்டு சிவநிட்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார். உள்ளம் உருகிப் பாடினார். குதிரை வாங்கக் கொண்டு வந்த பணத்தில் கோயில் ஒன்றை கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.
பின்பு மன்னன் குதிரை வராத செய்தி கேட்டு மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார். சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) சிவபெருமானே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறியது. இதை கண்டு கோபம் கொண்டு மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது.
கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்கினார். அந்த பிரம்படி அனைவரின் முதுகிலும் விழுந்தது, எனவே வந்தது இறைவன் என்று தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு மிக்க திருவிளையாடற்புராண கதை நிகழக் காரணமான தலம் ஆவுடையார் கோவில் ஆகும்.
உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்கு சாதனமாகப் பிறவி கடலிருந்து கரையேறுவதற்குத் துணையாக – பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது. இன்று மக்களால் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.
அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்கு குதிரை வாங்க சென்றபோது அவரை குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய பெருமை பெற்ற தலம்.
மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி.
அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி.
இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.
ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்ல செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கி கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.
திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைபத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
வாதவூரரை மணிவாசகராய் மாற்றிய இத்திருப்பெருந்துறைக்கு பதினெட்டுத் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவைகளாவன – 1. திருப்பெருந்துறை, 2. குருந்தவனம், 3. சதுர்வேதபுரம், 4. சிவபுரம், 5. ஞானபுரம், 6. திரிமூர்த்திபுரம், 7. தென்கயிலை, 8. தேசுவனம், 9. பராசத்திபுரம், 10. பவித்திரமாணிக்கம், 11. யோகபீடம், 12. ஆளுடையார் கோயில், 13. உபதேசத்தலம், 14. அனாதிமூர்த்தத்தலம், 15. ஆதிகயிலாயம், 16. சதுர்வேத மங்கலம், 17. தட்சிணகயிலாயம், 18. யோகவனம் என்பனவாம்.
இத்தலத்தில் ஆத்மநாத சுவாமிக்கும் பதினெட்டு திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவை – 1. ஆத்மநாதர், 2. பரமசுவாமி, 3. திருமூர்த்திதேசிகர், 4. சதுர்வேதபுரீசர், 5. சிவயோகவனத்தீசர், 6. குந்தகவனேசர், 7. சிவக்ஷேத்ரநாதர், 8. சன்னவனேசர், 9. சன்னவநாதர், 10. மாயபுரநாயகர், 11. விப்பிரதேசிகர், 12. சப்தநாதர், 13. பிரகத்தீசர், 14. திருதசதேசிகர், 15. அசுவநாதர், 16. சிவபுரநாயகர், 17. மகாதேவர், 18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாக காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தை சிவமாக்கும் சித்தினை செய்தருளுகின்றார்.
ஆவுடையார்க்கு பின்புற சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும் அதற்கு மேல் சூரிய சந்திர அக்னி என்ற மூன்று தீபங்களும் சுடர்விடுகின்றன-சுவாமி திருமுன்பு அமுத மண்டபத்தில் உள்ள படைகல்லில் புழுங்கல் அரிசி அன்னத்தை ஆவி புலப்பட பரப்பி அதைச் சூழத் தேங்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவற்றை வைத்து நிவேதனம் செய்து தீபாராதனைகள் முறைப்படி செய்யப்படும்.
ஆத்மநாத சுவாமியின் கருவறைக்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் யோகாம்பிகை கோயில் உள்ளது. இக் கோயிலின் உள்ளே யோகபீடமும் அதன்மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிகை அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. கோயிலின் தெற்குப்புறத்தில் உள்ள கருங்கல் பலகணி வழியாக தரிசனம் செய்யவேண்டும். இக்கோயிலை வலம்வர பிரகார அமைப்பு இருக்கிறது.
இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களை குறிக்கும் வகையில் ஆறு வாயில்கள் – ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனகசபை, 2) நடனசபை, 3) தேவசபை, 4) சத்சபை, 5) சித்சபை, 6) ஆநந்த சபை என்றழைக்கப்படுகின்றன.
கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. “சத்’ அம்சமாக கோயில் மகா மண்டபமும், “சித்’ அம்சமாக அர்த்தமண்டபமும், “ஆனந்த’ மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.
ஒரு முறை இறைவனே இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு பெருந்துறையில் வாழந்து வரும் முந்நூறு அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும் வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அதுகேட்டு மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலையொன்றை ஏற்படுத்தித் தந்தனர்.
அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும் அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார். ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும் முறையாகக் கற்பித்தார்.
குழந்தைகளோடு குழந்தையாய் கலந்து ஓடியாடியும், கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார்.
இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களை பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் – தத்தமது பெற்றோர்களிடம் முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர்; பயனில்லை.
அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில் இறைவன் தோன்றி, “கிழவராக வந்து உங்களுக்கு வேதசாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்கு சமைத்து சூட்டோடு நிவேதித்து வர செய்யுங்கள்” என்றருளிமறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியை சொல்ல; வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர்.
அன்று முதல் சுவாமிக்கு கீழே சொல்வதுபோல் நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது.
இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யாகணபதி எழுந்தருளியுள்ளார்.
காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில் – 614 618, புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்றால் அங்கிருந்து ஆவுடையார்கோயிலுக்கு பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உண்டு.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருச்சியிலிருந்து -100 கி.மீ.
புதுக்கோட்டையிலிருந்து – 48 கி.மீ.
அறந்தாங்கியிலிருந்து – 14 கி.மீ.
தஞ்சையிலிருந்து – 102 கி.மீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =