#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தில்லைஸ்தானம்

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தில்லைஸ்தானம்
236.#அருள்மிகு_நெய்யாடியப்பர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் : கிருதபுரீஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
புராண பெயர் : திருநெய்த்தானம்
ஊர் : தில்லைஸ்தானம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார்.
இவருக்கு ஏன் நெய்யாடியப்பர் என்ற திருநாமம்?
சிவபெருமான் அபிஷேகப் பிரியரல்லவா? காம தேனு ஒரு முறை, இந்த அபிஷேகப் பிரியருக்கு அபிஷேகம் செய்து வழிபடப் பிரியம் கொண்டது. காமதேனுவாயிற்றே, எதைக் கொண்டு அபிஷேகம் செய்யும்… தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் அபிஷேகித்தது. இவர் பசு நெய்யில் ஆடிய அப்பர்; அதனால் நெய்யாடியப்பர்.
இறையனாரை எங்கே காணலாம்? என்னவாக அவர் இருப்பார் என்ற கேள்வி வந்தது. அப்பர் பெருமானே, அதற்கு ஒரு முறை விடை சொன்னார். எப்போது தெரியுமா? அவரை நீற்றறையில் இட்டார்களே, அப்போது பாடினார்.
‘விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக
வாங்கிக் கடையமுன் நிற்குமே’
பாலுக்குள் நெய் இருக்கிறது; எல்லோருக்கும் தெரியும். நெய் வேண்டுமானால், பால்தான் அதற்கான ஆதாரம். ஆனால், பாலை எடுத்து வெறுமே பார்த்தால், நெய் கண்ணுக்குத் தெரியுமா? இல்லை குடித்துப் பார்த்தால் நெய் கிடைக்குமா? பாலைக் காய்ச்ச வேண்டும்; அதனை பிறைகுற்றித் தயிராகவோ மோராகவோ செய்ய வேண்டும்; பின்னர் கடைய வேண்டும்; கடைந்தால்… வெண்ணெய் தானாகவே திரண்டு வரும். அதுபோல, மனமென்னும் இந்தப் பாற்கடலை பக்குவமாகக் காய்ச்சி, பதப்படுத்தி, தயிராக உரமேற்றிக் கடைந்தால், கடவுள் எனும் வெண்ணெய் முன்னால் வந்து நிற்குமாம். கடைவதற்கு மத்து வேண் டுமே, கடைகயிறு வேண்டுமே… ஆமாம், வேண்டும்தான். கடவுளுக்கும் ஜீவனுக்கும் உறவுக் கோல் நட்டால், மத்து கிடைத்து விடும்; உணர்வையே கயிறாக்கினால், வேகமாகக் கடைந்து விடலாம். பாலுக்குள் நெய்யாக விளங்கும் இறைவனை விளங்க வைக்கவே, காமதேனு பாலையும் நெய்யையும் அபிஷேகம் செய்தது
கோயில் சிறப்புகள்:
•திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று.திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம்
•சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்
•ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார்.
•கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார்.
•அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் வாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காடசி தருகிறாள். அம்பாள் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்ட உருவமாகும்.
•இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
•அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.
•கல்வெட்டுக்களில் இத்தலம் “இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்” என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
•இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.
•இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார்.
•மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்
•அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,”ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’ என பாடுகிறார்.
•காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு.
•தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
•பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
•திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
•சிறப்பு மிக்க ஏழூரில், சிறப்பு மிக்க ஏழு முனிவர்கள் பூசித்துள்ளனர்.
திருப்பழனம் – குற்சர்
திருச்சோற்றுத்துறை – ஆங்கீரசர்
திருவேதிகுடி – அத்திரி
திருக்கண்டியூர் – காசியபர்
திருப்பூந்துருத்தி – கௌதமர்
திருநெய்த்தானம் – பிருகு
திருவையாறு – வசிட்டர்
•முதலாம் ராஜராஜ சோழரின் பட்டத்தரசி உலோக மாதேவியாரே (ஒலோக மாதேவியார் – லோக என்பது இவ்வாறானது) இதற்குக் காரணம். அவர்தான், ஏழூர்ப் பெரு விழா மரபைத் தொடங்கி வைத்தார். சோழ மன்னர்கள் காலத்திலும் (குறிப்பாக ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன்) பல்லவ, நாயக்க மன்னர்கள் காலத்திலும், சமுதாய நல்லிணக்கத்துக்காகவும், ஆன்மிகம் தழைத்தோங்கவும் இவ்வாறான விழாக் கள் தொடங்கப்பட்டுள்ளன.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்:
காலை 10 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்,
தில்லைஸ்தானம் – 613 203.
திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 4362-260 553.
அமைவிடம்:
திருவையாறிலிருந்து(2 கி.மீ) திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் தில்லைஸ்தானம்(திருநெய்த்தானம்) உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #தில்லைஸ்தானம் #neyyadiyappar #நெய்யாடியப்பர் #கிருதபுரீஸ்வரர் #இளமங்கையம்மை #திருநெய்த்தானம் #thillaisthanam #thanjavur #neyyadiappar #Kruthapureeswarar #Ilamangaiammai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 11 =