#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம்
234.#அருள்மிகு_நாவாய்_முகுந்தன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் : கமல தடாகம்
புராண பெயர் : திருநாவாய்
ஊர் : திருநாவாய்
மாவட்டம் : மலப்புரம்
மாநிலம் : கேரளா
ஸ்தல வரலாறு:
முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து வருத்தமடைந்த கஜேந்திரன், தனது நிலையை திருமாலிடம் கூறினான்.
உடனே திருமால், திருமகளை அழைத்து, இனிமேல் தாமரை மலர்களைப் பறிக்க வேண்டாம் என்று தெரிவித்தார், மேலும் கஜேந்திரனுக்காக விட்டுக் கொடுக்கவும் பணித்தார். திருமால் கூறியபடி திருமகள் தாமரை மலர்களைப் பறிக்காமல் இருந்தார். நிறைய மலர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த கஜேந்திரன் அவற்றால் தினமும் திருமாலை பூஜித்து வந்தான். பூஜை சமயத்தில், திருமகளை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச் செய்தார் திருமால். கஜேந்திரனின் பூஜையை ஏற்று திருமால் திருமகளுடன் சேர்ந்து, அவனுக்கு காட்சி கொடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
காடுகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த ஒன்பது முனிவர்களுக்கு, அவர்கள் சென்ற வழியில் இருந்த ஒரு இடம் பிடித்துப் போனது. அந்த இடத்தில் அவர்கள் இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில் எட்டு முனிவர்கள் ஒருவர் பின் ஒருவராக முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தமடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், “இறைவனே, இங்கு என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்களுருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர் களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது” என்றார்.
இறைவன் அவருடைய வருத்தத்தைப் போக்க, அவருக்கு எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். முனிவர் மகிழ்ச்சியோடு அவர்களனைவரையும் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். அதற்கு அவர்கள், இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்று விட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருந்து கொண்டு இருக்கிறோம் என்றனர். அதைக்கேட்ட ஒன்பதாவது முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமலிருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் ஒன்பதாவது முனிவரிடம், “முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து எப்போதும் போல் வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்” என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்த அம்முனிவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இறைவன் சொல்லியபடி பிறர் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வரச் சம்மதித்தார். இறைவனும் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே அங்கு கோவில் கொண்டார் என்று இத்தலம் அமைந்த வரலாறு சொல்லப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் நவ முகுந்தன் கோயில், 76-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
•இத்தலத்தில் 9 யோகிகள் தவம் மேற்கொண்டதால், நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்ட தலம், நாவாய் தலம் என்றும் திருநாவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
•இத்தலத்தை திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
•நவ யோகிகள் அமர்ந்து தவம் செய்த இத்தலத்தில் வேத விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நாவாய் முகுந்தன் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் உள்ளது.
•கேரள மாநிலத்தில், இத்தலத்தில் மட்டுமே திருமகளுக்கு தனி சந்நிதி உள்ளது.
•கோயில் சுற்றுப் பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பனுக்கு சந்நிதிகள் உள்ளன. ஆற்றுக்கு அக்கரையில் பிரம்மதேவருக்கும், சிவபெருமானுக்கும் தனி கோயில் உள்ளது. இதன் காரணமாக் இத்தலம் மும்மூர்த்தி தலம் என்று அழைக்கப்படுகிறது.
•திருமங்கையாழ்வார் இத்தலத்தை திருக்கோஷ்டியூர் மற்றும் திருநறையூரோடு ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுச் சுவர்களில் பழமையான ஓவியங்கள் காணப்படுகின்றன.
•துவாரபரயுகத்தில் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து திருநவயோகி தலத்திற்கு வந்து, தம் முன்னோருக்குப் (பித்ரு) பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் முன்னோர் களுக்கான பூஜை செய்தால் அளவிட முடியாத நற்பலன்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இக்கோவிலின் தலவிருட்சம் அடியில் முன்னோர்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவிலருகில் முன்னோர் பூஜை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, திருவோணம் உற்சவங்கள், மாமாங்கத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்,
திருநாவாய்- 676 301
மலப்புரம் மாவட்டம் ,
கேரளா மாநிலம்
போன்:
+91- 494 – 260 2157
அமைவிடம்:
கேரளா மாநிலம், மலப்புறம் மாவட்டத்திலிருக்கும் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குத் திரூர் நகரிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #மலப்புரம் #நாவாய்முகுந்தன் #naavimukunthan #malappuram #malappuramperumal #divyadesam #மலர்மங்கைநாச்சியார் #திருநாவாய் #Thirunavaya