#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை

September 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை
218.#அருள்மிகு_சொர்ணமலை_கதிரேசன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : கதிர்வேல் எனும் திருக்கைவேல்
ஊர் : கோவில்பட்டி
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு:
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமான் பிரதிஷ்டை ஆகியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகப்பெருமான் குடவரையில் இருப்பதால், அவருக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் அங்கிருக்கும் வேலுக்கே நடைபெறுகின்றன.
அதேபோல தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள கோவில்பட்டி எனும் தலத்தில் உள்ள ‘சொர்ணமலை’ எனும் திருத்தலத்திலும் மலைக்குன்றின் மீது வேல் வைத்து வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. காலப்போக்கில் இங்கெல்லாம் முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்துள்ளது.
கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்யச் சென்ற முருகன் அடியவர் ஒருவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. ஆகவே கதிர்காமம் முருகனை நினைத்து, தானும் ஒரு வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கையில் இருந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்ப நினைத்த அடியவருக்கு, கதிர்காமம் முருகப்பெருமானை பிரிவதை நினைத்து கவலையில் ஆழ்ந்தார். அவரது மனக்கவலையை போக்க எண்ணிய முருகப்பெருமான், அவர் வைத்திருந்த வேலுக்குள் தன்னை செலுத்தினார். பின்னர் அசரீரியாக, “அன்பனே! உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊருக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று, அங்குள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் கவலை மட்டுமின்றி, என்னை வழிபடும் பிற அடியவர்களின் கவலையையும் நான் அகற்றுவேன்” என்று கூறி அருளினார். கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேலுடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான் இங்கு மூலவராக உள்ளது சிறப்பு.
கோயில் சிறப்புகள்:
•வேலினை ஆதித் தமிழன் வடிவமைத்ததே ஞானத்தின் உருவமாகத்தான் என்பதை, அந்த வேலை நாம் கூர்ந்து கவனித்தாலே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு மனிதனுடைய அறிவு என்பது வேலின் அடிப்பகுதியைப் போல ஆழ்ந்து இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்திருக்கும் அறிவானது, மேற்பகுதியைப் போல நன்றாக அகன்றும் இருக்க வேண்டும். அதோடு அந்த அறிவானது, வேலின் முனைப்பகுதி போல கூர்மையாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைந்த காரணத்தால்தான், வேலை ஞானத்தின் பிறப்பிடமாக முன்னோர்கள் அமைத்தார்கள்.
•ஆலயக் கருவறையில் முருகப்பெருமானின் சிலை வடிவுக்கு பதிலாக, வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான், கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்து உள்ளது.
•இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.
•கந்தசஷ்டியில் இத்தலம் வந்து சத்ரு சம்கார வேல் பதிகம், வேல்மாறல் ஆறு முறை பாராயணம் செய்து மூலவர் கதிர்வேலை வழிபாடு செய்கிறார்கள்
•இத்தலத்தில் வழிபடுவது, இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது.
•கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கோவிலில் உள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, குழந்தை வரம் பெறுகிறார்கள்.
•மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு யாரும் செல்வதில்லை. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள்.
திருவிழா:
திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. திருக்கார்த்திகை நன்னாளில் இந்த சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்’ ஏற்றுகிறார்கள். இங்கு சூரசம்காரம் கந்த சஷ்டியில் வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோயில்,
கோயில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம்.
மாவட்டம்.
அமைவிடம்:
விருதுநகர் அருகில் உள்ள கோவில்பட்டியில் சொர்ணமலை அமைந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் இருக்கிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனாய பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த திருக்கோவில் இதுவாகும்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #சொர்ணமலை #கதிர்வேல் #திருக்கைவேல் #முருகன்கோயில் #கோவில்பட்டி #sornamalai #Kathiresan #sornamalaikathiresan #thirukaivel #vel #வேல்வழிபாடு #வேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =