#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம்
202.#அருள்மிகு_உலகளந்த_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்
தாயார் : கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் : கவுரி தீர்த்தம்
புராண பெயர் : திருக்கார்வானம்
ஊர் : திருக்கார்வானம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு:
மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை மகாபலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாள உலகைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தி, அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி, சத்திய விரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் என்னும் உலகளந்த பெருமாள் கோயில்.
திருமாலின் பல்வேறு அவதார மகிமைகளைக் கேள்விப்பட்ட பார்வதி தேவிக்கு திருமாலை கள்வன் வேடத்தில் காண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் ஆசையை சிவபெருமானிடம் கூறியபோது, சிவபெருமான் “உன் பாடு உன் அண்ணன் பாடு” என்று கூறியுள்ளார். பார்வதி தேவியும் தனது சகோதரனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சந்நிதிக்கு வடக்கே வந்தால், பார்வதி தேவிக்கு கள்வனாக காட்சியளிப்பதாக திருமால் கூறினார். பார்வதி தேவியும் அவ்வண்ணம் வர அவர் விரும்பியபடி கள்வனாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
திருக்கார்வானம் – சூல் கொண்ட மேகங்கள் சூழ்ந்த அழகிய வானம். அந்த மேகங்கள் மழை பொழிவிக்குமா அல்லது காற்றடித்து கலைந்து சென்று விடுமோ…. பெருமழையாய் பூமியை நீரால் நிறைக்குமோ அல்லது சிறு தூறலிட்டு ஏமாற்றிச் சென்று விடுமோ…. பக்தி என்ற பருவம் முதிர்ந்தால் திருமாலின் அருள் எனும் பெருமழையை நம்மால் துய்க்க முடியும். அது குறைந்தால் அந்த அளவுக்கேற்ப இறைவனின் அருளும் மாறுபடும். ஆனால் இயற்கையின் அடிப்படையில் மழைக்கு இருக்கும் கூடுதல், குறைச்சல் நியதி, பெருமாள் அருளுக்கும் பொருந்துமா என்ன? பெருமாள் தன் அருளை அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாமல் தந்து அருள்பாலிக்கிறார். நமது முன்வினைப் பயன், இந்தப் பிறவியில் நம் பக்தி ஈடுபாடு என்ற அளவீடே அவரவருக்குத் தகுதியாக்கி அந்த அருளை கூடுதலாகவோ, குறைவாகவோ பெற முடிகிறது.
கார்வானத்து வண்ணத்தை மேனியாகக் கொண்டவன். பொதுவாக மழை பொழிந்த பின்னர் கார்வானம் தன் வண்ணத்தை துறந்து விடும். ஆனால் கார்முகில் வண்ணன் அனைவருக்கும் அருள் மழை பொழிந்த பின்னரும் தன் நிறத்தை இழப்பதில்லை. அது போல நாம் அவன்மீது கொண்ட நம் எண்ணத்தை இழக்காமல் இருந்தால், இரு வினைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும்.
தாலேலோ வென்றாய்ச்சி
தாலாட்டித் தன் முலைப் பாலாலே
யெவ்வாறு பசியாற்றினள் முன் – மாலே பூங்கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும் பார்வான முண்டாய் நீ பண்டு.
தன் குழந்தையின் பசியறிந்து முலைப்பாலால் அதன் பசியாற்றி, அது நிம்மதியாகத் தூங்க தாலாட்டுப் பாடும் ஒரு தாய் போல, கார்வானத்தாலும் தன் பக்தர்களின் தேவையறிந்து உதவக் கூடியவன் என்கிறார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்.
கார்மேகங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் ஆட்சி புரிபவன் நீ. கடலும், மலையும் சூழ்ந்த இந்தப் பாரும் உள்ளதே. இப்படி முற்றிலுமாக இயற்கையின் பரிமாணத்தோடு விளங்கும் எந்தையே… உன் கருணை மேகம்போல், கடல் போல், மலைபோல் பரந்தது, விரிந்தது, உயர்ந்தது என்று நெகிழ்ந்து பாடுகிறார்.
கோயில் சிறப்புகள்:
•108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்கார்வானம் கார்வானப் பெருமாள் கோயில், 53-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
•உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு திவ்ய தேசம் இதுவாகும்.
•இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
•சயனம் கொண்டு இந்தப் பெருமாள் உலகைப் பரிபாலிக்கவில்லை. நின்ற கோலத்திலேயே நெடுந்துயர்களை களைகிறார். உலகளந்தான் ஓங்கி உயர்ந்தபோது பிரபஞ்சமே அவன் பார்வை ஒளி பெற்று உய்வு பெற்றது போல, இந்த கார்வானத்தான் தன் நேர்கொண்ட பார்வையால் உலகோரை கவனித்து, அவர் தேவையின் அவசரம் உணர்ந்து விரைந்தோடி வரும் தோரணையில் நின்றிருக்கிறான்.
•கடல் நீரை ஆவியால் ஈர்த்து மேகத்தை சூல் கொள்ள வைத்து பிறகு மழையாகப் பொழிய வைக்கும் சூரியன் போல, தம் உணர்வுகளை பக்தி ஆவியாக்கி ஞான சூல் கொண்டு கார்வானத்தின் அருள் மழை பொழிய வைத்தால் அந்தக் கருணை நம்மை மட்டுமன்றி உலகோர் அனைவரையும் போய்ச் சேரும் என்று கூறப்படுகிறது.
•பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும்.இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.
•கார்வானத்துள்ளாய் கள்வா என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.
•உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். நீரகத்தாய், காரகத்தாய் என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார்.
•திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் திருஊரகத்துடன் வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
•காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 திவ்ய தேசங்களில் (தொண்டை நாட்டு தலங்கள்) இத்தலம் கச்சி ஊரகம் எனப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபுரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள், இந்த ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. அதாவது, 108 திவ்யதேசங்களில் நான்கை, இந்த ஒரே கோயிலுக்குள் தரிசித்து விடலாம். இந்த திவ்ய தேசப் பெருமாள்கள் தொண்டை மண்டலத்தின் எப்பகுதியில் இருந்து இங்கு வந்தனர் என்பதைக் கண்டறிய முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த இத்தல பெருமாள்கள், ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.நீரகத்தில் ஜெகதீசப்பெருமாளும், நிலமங்கைவல்லியும் அருள்பாலிக்கின்றனர். காரகத்தில் கருணாகரப் பெருமாளும், பத்மாமணி நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர். கார்வானத்தில் கமலவல்லி நாச்சியாரோடு கார்வானப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
•மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்புஷ்கல விமானம் எனப்படும்.
•பார்வதி தேவி இத்தல இறைவனின் தரிசனம் பெற்றுள்ளார்.
•சாதாரண மனிதனாக இருந்த மகாபலி, உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாகக் காண முடியாமல் பதைபதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி, மிக எளிமையாக ஆதிசேஷன் மீது காட்சியளித்தார். இந்த இடமே பேரகம் எனப்படுகிறது. இங்கு பாம்பு வடிவில் பெருமாள் வீற்றிருக்கிறார். உரகத்தான் என்பது அவரது திருநாமம். உரகம் என்றால் பாம்பு. அப்பெயரே மருவி நாளடைவில் ஊரகத்தான் என்றாகி விட்டது.
•உலகளந்த பெருமாளுக்கு எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. சங்கு சக்கரம் ஏந்திய நிலையில், நான்கு கரங்களுடன் இவர் அருள்பாலிக்கிறார். இரு கைகள் பெருமாளை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாக விளங்குகிறது.
•திருவோணத்தை ஒட்டி இந்த கோயிலில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 4மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 5மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்), மாலை 6 மணிக்கு பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
முகவரி:
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,
திருக்கார்வானம், – 631 502.
காஞ்சிபுரம் மாவட்டம்
போன்:
+91-94435 97107, 9894388279, 9443903450.
அமைவிடம்:
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருக்கார்வானம் #கார்வானப்பெருமாள் #கள்வர்பெருமாள் #கமலவல்லிநாச்சியார் #ThiruKaarvaanarPerumal #thirukarvanam