#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சேங்கனூர்
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சேங்கனூர்
201.#அருள்மிகு_சத்தியகிரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : சத்தியகிரீஸ்வரர்
அம்மன் : சகிதேவியம்மை
தல விருட்சம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி
புராண பெயர் : சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர்
ஊர் : சேங்கனூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும் மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பட்டது.
விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது.விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,””என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,”என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி “சண்டிகேஸ்வரர்’ ஆக்கினார்.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 41 வது தேவாரத்தலம் சேங்கனூர்.
•இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சகிதேவியம்மை
•கோச்செங்கட்சோழன் கட்டிய இந்த மாடக்கோயில் கோயில் கட்டு மலையின் மேல் உள்ளது.
•கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலை மேல் ஒரு பிராகாரமும் சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலம் ஆகையால் கோவில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
•கோவிலின் மேலே ஒரு பிரகாரம் மற்றும் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
•கந்தபுராணம் வழிநடைப்படலம் பகுதியில் இதுதலம் பற்றிய வரலாறு உள்ளது.
•சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும் முருகன் வழிபட்டதால் சேய் – முருகன் நல் ஊர் – சேய்ஞலூர் என்ற பெயர் பெற்றது.
•வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. கோவிலின் எதிரே இவருக்கு கோயில் உள்ளது.
•முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது.
•அனைத்து சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.
•சிவபெருமான் சண்டிகேஸ்வரருக்கு உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். சண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார்.
•சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இவர் இத்தலத்தில் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். சிவன் காட்சி கொடுத்ததால் சண்டேஸ்வரரே பிறை சடை குண்டலம் கங்கையுடன் காட்சி தருகிறார்.
•சிவன் நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருக்கிறது. சண்டிகேஸ்வரரின் வரலாற்றை தேவாரம் பாடல் பெற்ற சிவ தலம் 40 யிலும் அறிந்து கொள்ளலாம்.
•பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சீடனாகவும் மகன் குருவாகவும் இருக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.
•சிபிச்சக்கரவர்த்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
•சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார்.
•சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று.
•நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் சிபிச்சக்கரவரத்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.
•அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார்.
•சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7 வது பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
•திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.
திருவிழா:
தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சண்டேஸ்வர நாயனார் அவதார தினம் கொண்டாடப்படுகிறது
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
சேங்கனூர் – 612 504,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435-2457 459, 93459 82373
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (16 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் உள்ளது
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #சேங்கனூர் #சத்தியகிரீஸ்வரர் #சகிதேவியம்மை #satyagireeswarar #senganur