#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சனூர்

August 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கஞ்சனூர்
பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம்.
194.#அருள்மிகு_அக்னீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அக்னீஸ்வரர்
அம்மன் : கற்பகாம்பாள்
தல விருட்சம் : பலா, புரசு
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
புராண பெயர் : கஞ்சனூர்
ஊர் : கஞ்சனூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை திருமங்கலக்குடி திருக்குரங்காடுதுறை திருவாவடுதுறை திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டார். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவ பக்தராக இருப்பதை அவ்வூர் மக்கள் விருப்பமில்லை. எனவே அவரை அவ்வூர் மக்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியில் அமர்ந்து சிவனின் மகிமையை உலகிற்கு காட்ட வேண்டும் இல்லையெனில் எந்த சிவன் கோவிலுக்கும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். ஊர் மக்கள் கட்டளையிட்டபடி பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மூன்று முறை கூறினார். அவருக்கு உடலில் எந்த விதமான தீக்காயங்களும் ஏற்படவில்லை. இதனைக் கண்ட ஊர் மக்கள் அவரின் மகிமையை அறிந்து அவரை சரணடைந்தார்கள். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. இவ்வூரின் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.
ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பது போல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வந்தர் அவரை தேடிச்சென்று வணங்கினார். ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 36 வது தேவாரத்தலம் திருக்கஞ்சனூர்.
•இறைவன் அக்னீஸ்வரர். இங்கு இறைவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
•கம்சன் வழிபட்டதால் இத்தலம் கஞ்சனூர் என்று மாறியது.
•இத்தலத்திற்கு பலாசவனம் பராசரபுரம் பிரமபுரி அக்கினிபுரம் கம்சபுரம் முத்திபுரி என்று வேறு பெயர்கள் உள்ளது.
•நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலை ரூபமாக இருக்கிறார்.
•இத்தல இறைவன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார்.
•பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார்.
•பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம்.
•பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது. சந்திரனின் சாபம் நீங்கியது. கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியது. கலிக்காமருக்கு திருமணம் நடந்தது. மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம்.
•சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக “ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு” என்று அருளிச்செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
•கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிரகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
•63 நாயன்மார்களுள் ஒருவரான மானகஞ்சார நாயனார் முக்தியடைந்த தலம்.
•இங்கு இருந்த ஒரு பிராமணர் ஒருநாள் புல்லுக்கட்டு எடுத்துவந்த பொழுது அது தவறி பசுவின் கன்றின் மீது விழுந்து கன்று இறந்துவிட்டது. அவருக்கு இதனால் பசு தோஷம் வந்ததென கூறினர். அவர் ஹரதத்தரிடம் அவரது தோஷத்தை நீக்க வேண்டினார். அவர் சிவ பஞ்சாட்சரம் கூறி உமது தோஷம் நீங்கிவிட்டது என்றார். ஆனால் ஊரார் ஒப்பவில்லை. ஹரதத்தர் அவரிடம் ஒரு கை புல்லை எடுத்து வரச்சொல்லி அதை கோவிலில் உள்ள கல் நந்தி முன்பு நீட்டச்சொல்ல, கல் நந்தியும் அந்த புல்லை சாப்பிட அனைவரும் வியந்தனர். கல்நந்தி புல் உண்டால், பஞ்சாட்சரம் பாவம் தீர்க்கும் என்று உணர்த்தினார். ஹரதத்தரின் இந்த வரலாறை விளக்கவே இவருக்கு இந்ததலத்தில் தனி சன்னிதி உண்டு.
திருவிழா:
மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி
திறக்கும் நேரம்:
காலை 7.30 முதல் மதியம் 12 வரை.
மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,
கஞ்சனூர், -609 804 (வழி) துகிலி,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91-435-247 3737
அமைவிடம்:
கும்பகோணம்- மயிலாடுதுறை ரோட்டில் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது கஞ்சனூர். கும்பகோணத்திலிருந்து அடிக்கடி பஸ் உள்ளது.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #அக்னீஸ்வரர்கோயில் #திருக்கஞ்சனூர் #agneeswarartemple #Kanjanur #கற்பகாம்பாள் #மானக்கஞ்சாறநாயனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =