கடிதம் – 28 – வேரும், வெந்நீரும்

December 13, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

கொடுப்பவனுக்கு என்றுமே கொண்டாட்டம்; கொடுக்காதவனுக்கு நித்தம் திண்டாட்டம் என்று சென்ற கடிதத்தில் கூறி இருந்தேன். அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் தனக்கும், தன் குடும்பத்திற்கு மட்டும் என வாழ்ந்தவர்களின் கதையை நீங்கள் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் நாம் நம்மை யாரோடும் ஒப்பிடாமல், ஒப்பிட்டு வீணாக போகாமல், தவறு எதுவும் செய்யாமல் நமக்கென்று ஓர் நல்ல வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

1923 – ம் வருடம் சிக்காகோவில் உள்ள Edgewater Beach Hotel – ல் உலகின் ஒன்பது மிக முக்கியமான, அதி முக்கியமான, மிகப் பெரிய செல்வந்தர்கள் சந்தித்து பேசி கொண்டார்கள் – தங்களை மேலும் பலப்படுத்தி கொள்வதற்காகவும், வளப்படுத்தி கொள்வதற்காகவும். அவர்களிடம் அந்த கால கட்டத்தில் இருந்த பணத்தை ஒட்டுமொத்தமாக கூட்டினால் அது அமெரிக்காவின் அரசு கருவூலத்தில் இருந்த பணத்தை விட அதிகம் என்றால் அவர்களுடைய பண வலிமையை புரிந்து கொள்ளுங்களேன். அத்தகைய பலம்வாய்ந்த ஒன்பது பேரின் பெயர் மற்றும் அவர்களுடைய தொழில் கீழ்கண்டவாறு:

Arthur Cutten – மிகப் பெரிய கோதுமை யூக வர்த்தகர்
Albert Fall – ஜனாதிபதி ஹார்டிங் அமைச்சரவையில் அமைச்சர்
Leon Fraser – தலைவர், புகழ்பெற்ற வங்கி
Howard Hobson – தலைவர், மிகப் பெரிய எரிவாயு நிறுவனம் (Associated Gas & Electric Systems)
Ivar Kreuger – தலைவர், போட்டியாளரே இல்லாத ஏகபோக உரிமை கொண்ட நிறுவனம் (The “Match King”)
Jesse Livermore – மிகப் பெரிய பங்கு சந்தை வர்த்தகர்
Charles Schwab – தலைவர், மிகப் பெரிய சுதந்திரமான தனியார் எஃகு தொழிற்சாலை (Bethlehem Steel)
Richard Whitney – தலைவர், நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
Samuel Insull – தலைவர், மிகப் பெரிய சேவை நிறுவனம் (Edison General Electric)
சரியாக 27 வருடம் கழித்து இவர்கள் வாழ்க்கையை உற்று பார்த்தால்:-

Arthur Cutten – மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு இறந்து போனார்
Albert Fall – பத்து பைசாவிற்கு வழி இல்லாமல் போய், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் – வீட்டில் இறந்து போவதற்கு வசதியாக
Leon Fraser – தற்கொலை செய்து கொண்டார்
Howard Hobson – பைத்தியமாகி விட்டார்
Ivar Kreuger – தற்கொலை செய்து கொண்டார்
Jesse Livermore – தற்கொலை செய்து கொண்டார்
Charles Schwab – மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி மிகவும் கஷ்டப்பட்டு இறந்து போனார்
Richard Whitney – கடும் சிறைத் தண்டனைக்கு உள்ளாகி வெளியில் வந்தார் – மரணத்தை ஏற்பதற்காக
Samuel Insull – மூன்று முறை சிறை தண்டனையிலிருந்து தப்பி கடுமையான மார்படைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.
தாங்கள் வளரும் போது தங்கள் அடிவேருக்கு வெந்நீரை ஊற்றி தங்களை வளர்த்த இந்த மாமேதைகளை, அவர்கள் முறையான வழியில் சம்பாதிக்காததாலும், கொடுக்க மறுத்து பிடுங்கி வாழ்ந்ததாலும் கூட்டி, கழித்து பார்த்து மொத்தத்தில் பூஜ்யமாக்கிவிட்டான் இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கியவன்.

அல்லாவா, ஆண்டாளா, இயேசுவா, புத்தரா என்பது விஷயமல்ல மொத்தத்தில் நம்மை படைத்த கடவுள் வலிமையானவர் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

பரிகார ஜோதிடர்கள், திருட்டு வாஸ்து நிபுணர்கள், போலி பெயர் மாற்றுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் (தனியார் மற்றும் அரசு துறை), திருடுபவர்கள், வட்டிக்கு விடுபவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரித்து வாழ்பவர்கள், பிறரை ஏமாற்றி வாழ்பவர்கள் யாரேனும் இருந்தால் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு பணம் வரலாம், பணம் கொட்டலாம், அதிகாரம் இருக்கலாம், பலம் இருக்கலாம் இன்று. ஆனால் உருத்தெரியாமல் போய் விடுவீர்கள் ஒரு நாள். காரணம் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் கடவுளுக்கு கண்கள் உண்டு. நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற நினைப்பு உங்களிடம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் இன்றோடு. அடியோடு, அடிமடி மண்ணோடு புதைந்து போய்விடுவீர்கள் ஜாக்கிரதை.

குற்றம் புரிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்தால் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா என்றால் சரியாகி விடும் கண்டிப்பாக பண கணக்கு. ஆனால் செய்த குற்றத்திற்கு தண்டனை குறைப்பு என்றுமே கிடையாது நமக்கு மேல் உள்ள நீதிமன்றத்தில். காரணம் அங்கு நமக்காக வாதிட யாருமே இருக்க மாட்டார்கள். நீதிபதியே நமக்கு எதிராக வாதிட்டு தண்டனையை பெற்று தர தயாராக இருக்கும் போது, தண்டனை குறைப்பு எப்படி சாத்தியமாகும்??

1923 – ல் உலகையே ஆட்டி படைத்தவர்கள், ஆட்டி படைக்க முற்பட்டவர்கள் அதற்கு அடுத்த 30 வருடங்களுக்குள் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போனதை நினைவில் நிறுத்தி, அடுத்தவர்கள் பணமும், பொருளும், உழைப்பின்றி ஊதியமும் நமக்கு என்றும் வேண்டாம் என முடிவெடுப்போம். இதற்கு நேர்மாறாக இருப்பின் நம் அடித்தளத்திற்கு, அடிவேருக்கு வெந்நீரை நாமே ஊற்றி நம்மை நாமே அடியோடு சாய்ப்போம்.

நேர்மையாக இருப்போம் பிறரிடம்

நிறைய கொடுப்போம் அனைவருக்கும்

நிறைய கூட வேண்டாம், மிகச் சிறிய அளவிற்கு எதையும் எதிர்பாராமல், சந்தோஷமாக, முழு அன்புடன் கொடுத்தால் / செய்தால் கூட அதற்கு கடவுள் நூறு மடங்கு உடனடியாக திருப்பி கொடுப்பார் என்பதை நான் உணர்ந்து கொண்ட முதல் சம்பவம் பற்றி அடுத்த கடிதத்தில் பார்ப்போமா!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =