#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தமபாளையம்

June 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தமபாளையம்
136.#அருள்மிகு_தென்_காளாத்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : திருக்காளாத்தீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : ஞானாம்பிகை
தல விருட்சம் : செண்பகம்
ஊர் : உத்தமபாளையம்
மாவட்டம் : தேனி
ஸ்தல வரலாறு :
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே லிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்’ என்றும், தலம் “தென்காளஹஸ்தி’ என்றும் பெயர் பெற்றது.
காளாத்திநாதர் இங்கு எழுந்தருளியபின்பு, அம்பிகைக்கு சன்னதி அமைக்க பக்தர்கள் விரும்பினார். இதற்காக பல சிலைகள் அமைத்தும், சிலை சரியாக அமையவில்லை. இதனால் அம்பிகை இல்லாத தலமாகவே இக்கோயில் திகழ்ந்தது. ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், “அம்பிகை முல்லைப்பெரியாற்றில் வருவாள்!’ என்றார். அதன்படி, ஒருசமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, ஒரு கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. மகிழ்ந்த பக்தர்கள் அம்பிகையை இங்கே பிரதிஷ்டை செய்தனர். காளாத்தியில் அருளும் அம்பிகையின் பெயரால், “ஞானாம்பிகை’ என பெயர் சூட்டினர். இந்த அம்பிகையின் முகத்தில் ஆற்றில் அடித்துவரப்பட்டபோது ஏற்பட்ட தழும்புகள் இருப்பதை தற்போதும் காணலாம். இந்த அம்பிகை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவளாக அருளுகிறாள். கோயிலும் இவளது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்பகுதியில், “ஞானாம்பிகை கோயில்’ என்றால்தான் தெரியும். காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை இருவருக்குமிடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் இருக்கிறார். கோயில்களில் ஒரு சன்னதியில் நின்று ஒரு சுவாமியையே தரிசிக்க முடியும். ஆனால் இங்கு ஒரே சமயத்தில் அம்பிகை, முருகப்பெருமான் இருவரையும் தரிசிக்கலாம். அம்பாள் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால், இவ்விருவரின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இத்தகைய தரிசனம் கிடைப்பது அபூர்வம். தாய், மகன்களின் ஒற்றுமைக்கான பிரார்த்தனை தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. மகனைப்பிரிந்துள்ள தாயார், இங்கு வேண்டிக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்வர் என்கிறார்கள்.
கோயில் சிறப்புகள் :
•பஞ்சபூத தலங்களில் காளஹஸ்தி, வாயு தலமாக இருக்கிறது. இதேபோல இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இவருக்கு, “வாயுலிங்கேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. வாயுவை தொடமுடியாது என்பதால் இவரை “தீண்டாத்திருமேனியன்’ என்றும் அழைக்கிறார்கள்.
•வேடுவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கு சன்னதி இருக்கிறது. கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார் இவர்.
•ஆற்றில் வந்த அம்பாள், இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றாள். எனவே, இவ்வூரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். சிவன், அம்பிகை திருக்கல்யாணம் நடக்கும்போது, இவ்வூரிலிருந்து பக்தர்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர். இதையே சிவன், அம்பிகைக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.
•முல்லைப்பெரியாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து, வடக்கு திசை நோக்கி ஓடுகிறது. இதன் கரையில் கோயில் கொண்டுள்ள காலபைரவர், மிக விசேஷமான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். இதைப்போலவே இங்கும் பெரியாறு நதி, உத்தரவாகினியாக வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனால் இக்கோயிலில் உள்ள பைரவரும், சிறப்பான மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.
•கோயில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்களையே தரிசித்திருப்பீர்கள். ஆனால் இக்கோயிலில் “அஷ்ட மாதர்களை’ (எட்டு அம்பிகையர்) தரிசிக்கலாம்.
•ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள். இவர்களது தரிசனம் விசேஷம்.
•மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இங்கு இடது கையில் வீணையைப் பிடித்தபடி காட்சி தருகிறாள். வலது கையில் அட்சர மாலை வைத்திருக்கிறாள். இத்தகைய அமைப்பில் சரஸ்வதியைக் காண்பது அரிது.
•இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
•சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் காட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.
திருவிழா:
சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ராதரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்,
தென்காளஹஸ்தி,
உத்தமபாளையம் -625533,
தேனி மாவட்டம்.
போன்:
+91- 4554 – 265 419, 93629 93967.
அமைவிடம்:
தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உத்தமபாளையம் எனும் ஊரில் இக்கோயில் அமைந்திருக்கிறது. உத்தமபாளையத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #famoustemples #காளாத்தீஸ்வரர் #சோமாஸ்கந்தர் #ஞானாம்பிகை #உத்தமபாளையம் #kalathiswarar #southkalakasthi #uthamapalayam #sivantemple #SriAandalVastu #DrAndalPChockalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =