#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கபிஸ்தலம்

May 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கபிஸ்தலம்
124.#அருள்மிகு_கஜேந்திர_வரதன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
உற்சவர் : செண்பகவல்லி
தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்
தல விருட்சம் : மகிழம்பூ
புராண பெயர் : திருக்கவித்தலம்
ஊர் : கபிஸ்தலம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு :
இந்திராஜும்னன் என்ற அரசர், சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். பல மணி நேரம் திருமாலுக்கு பூஜை செய்தவண்ணம் இருப்பார். அப்படி ஒருநாள் பூஜை செய்த சமயத்தில் அவரை சந்திக்க துர்வாச முனிவர் வந்திருந்தார். முனிவர் வந்திருப்பதை உணராமல், அரசர் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். வெகு நேரமாகியும் தனது பக்திக் குடிலைவிட்டு அரசர் வெளியே வராமல் இருப்பதால், மிகுந்த கோபத்தில் இருந்த முனிவர், “மிகுந்த கர்வம் கொண்டவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதையில் உள்ளவனாகவும் நீ இருப்பதால், மதம் பிடித்த யானையாகப் போவாய்” என்று மன்னனை சபித்தார். முனிவரின் குரல் கேட்ட மன்னர், அதிர்ச்சியில் உறைந்து போனார். தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், சாப விமோசனமும் அருளும்படி முனிவரை வேண்டினார். மன்னர் மீது இரக்கம் கொண்ட முனிவர், “திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு சமயம், முதலை உன் காலைப் பிடிக்கும் போது, ஆதிமூலமே என்று திருமாலை அழைத்தால், அவர் உன்னைக் காப்பாற்றி, மோட்சமும், சாப விமோசனமும் அளிப்பார்” என்று அருளினார்.
கூஹு என்ற அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். குளத்தில் நீராட வருபவர்களின் காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருசமயம் அகத்திய முனிவர், குளத்தில் நீராட இறங்கிய போது, அவரது காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை முதலையாக மாறும்படி சபித்தார். தன் தவறை உணர்ந்த அரக்கன், முனிவரிடம் சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினான். முனிவரும் அரக்கன் மீது இரக்கம் கொண்டு, “கஜேந்திரன் என்ற யானை இக்குளத்துக்கு வரும்போது, நீ அதன் காலைப் பிடிக்கும் சமயத்தில் திருமால் வந்து அதைக் காப்பாற்றுவார். அவரது சக்ராயுதம் உன் மீது பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.
ஒருநாள் கஜேந்திரன், கபிஸ்தலத்தின் கோயில் முன்பு உள்ள கபில தீர்த்தத்தில் நீர் அருந்த இறங்கியது. உடனே முதலை, யானையின் காலைக் கவ்வியது. “ஆதிமூலமே” என்று யானை தனக்கு உதவுமாறு திருமாலை அழைத்ததும், திருமால் திருமகளுடன் காட்சியளித்து, சக்ராயுதத்தால் முதலையை (அரக்கன்) அழித்து, யானைக்கு (கஜேந்திரன்) மோட்சம் அருளினார்.
இவ்வாறு யானைக்கு திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும். ஆஞ்சநேயருக்கு திருமால் அருள்பாலித்த தலம் என்பதால் இத்தலத்துக்கு கபிஸ்தலம் (கபி – தலம்) என்ற பெயர் கிட்டியது.
விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்த ராகுவுக்கு அமுதத்தை பருக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும், விஷமும் சேர்ந்தே வந்தன. மோகினி அவதாரம் எடுத்த திருமால், அமுதம் கொடுப்பதற்காக தேவர்களை ஒரு வரிசையில் அமரச் சொன்னார். சூரிய சந்திரர்களுடன் ராகு அமர்ந்து அமுதம் உண்டுவிட்டதை உணர்ந்த திருமால், ராகுவின் தலையைக் கொய்துவிட்டார். அமுதம் உண்டதால், தலை துண்டிக்கப்பட்ட பின்பும் உயிர் இருந்தது. தலைப்பாகம் ராகு என்றும் உடற்பாகம் கேது என்றும் பெயர் பெற்றன.
ராகுவும் கேதுவும், தங்களை மீண்டும் இணைக்குமாறு பிரம்மதேவரிடம் வேண்டினர். ஆனால் அவர் சூரிய சந்திரர்களுடன் இணைந்து நவக்கிரகங்களாக மாறி எதிர்திசையில் சுழல்வதற்கு ஆலோசனை கூறினார். அப்போது திருமால் தோன்றி, அவர்கள் இருவரும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் கடக ராசியில் கேது தங்கி ரிக், யஜூர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும், மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரகனாகவும் விளங்க அருள்புரிந்தார். அதன்படி அவர்களும் கல்வியில் சிறந்து, நவக்கிரகங்களுள் இணைந்தனர். தாங்கள் அழிவதற்கு காரணமாக இருந்த சூரிய, சந்திரர்களை விழுங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இடப்புறம் சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால் தான் சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெறுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன.
கோயில் சிறப்புகள் :
•இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
•மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும்.
•கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
•ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.
•இத்தலபெருமாளை ஆழ்வார், “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,’ என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது.
•திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று.
•108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் திருமால் முதலை, யானை ஆகிய இரண்டு விலங்கினங்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.
•பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் (திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்) இத்தலமும் ஒன்று. கும்பகோணம் – திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்தலம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
•இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் வானர இனத்தில் பிறந்த ஆஞ்சநேயருக்கு அனைத்து வல்லமைகளையும் அளித்து, அவருக்கு ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் அருளியுள்ளார்,
•அனுமனுக்கும் ஸ்ரீராமபிரானாக அருள் செய்த பெருமாள் கொடிய முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு பொய்கையில் நின்ற நிலையில் வானத்தை நோக்கி ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற அந்த யானை பிளிரி தன்னைச் சரண் அடைந்தபோது கருடன் மீதேறி பறந்து வந்து காத்து அருளினார். ஆதிமூலப் பெருமானாகிய ஸ்ரீநாராயணர் இத்தலத்தில் குரங்கான ஆஞ்சநேயருக்கும் யானைக்கும் கிடந்த கோல சேவையை அருளியிருக்கிறார்.
•கபியான குரங்கிற்கு கிடந்த கோல சேவை கிடைத்த படியால் இத்தலம் கபித்தலம் என்ற பெயர் பெற்றது. யானையான கஜேந்திரன் பக்தியுடன் தான் பறித்து வந்து பூஜை செய்த தாமரையை பொற்றாமரையாள் என்ற பெயருடன் பெருமாளின் ஏகபத்தினியாக ரமாமணி வல்லியாக தாயார் பெரிய பிராட்டியார் இவ்விடத்தில் சேவை தந்தருளுகின்றார். இக்கோவிலில் புஷ்கரணி கஜேந்திர புஷ்கரணி மற்றும் கபில தீர்த்தம் ஆகியவை ஆகும். இக்கோவிலின் விமானம் கதநாக்ருதி விமான அம்சத்துடன் விளங்குகிறது.
திருவிழா :
வைகாசி விசாகம் (தேர்த் திருவிழா), வைகாசி பிரம்மோற்சவம், ஆடி பௌர்ணமி (கஜேந்திர மோட்ச லீலை) தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்,
கபிஸ்தலம்- 614203
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 4374 – 223 434
அமைவிடம் :
கும்பகோணத்திலிருந்து (10 கி.மீ.) திருவையாறு செல்லும் வழியில் கபிஸ்தலம் உள்ளது பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
#kabisthalam #templesofindia #templesofsouthindia #templesoftamilnadu #templehistory #divyadesaperumal #108DivyaDesam #kajenthiravarathar #ஆலயம்அறிவோம் #ஸ்தலவரலாறு #திவ்யதேசம் #கபிஸ்தலம் #கஜேந்திரமோட்சம் #கஜேந்திரவரதர் #பெருமாள்கோயில்கள் #ஆலயவரலாறு #ஆதிமூலப்பெருமாள் #செண்பகவல்லி #திருக்கவித்தலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =