#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோடியக்காடு

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோடியக்காடு

90.#அருள்மிகு_கோடிக்குழகர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மன் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் : குராமரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு
புராண பெயர் : திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
ஊர் : கோடியக்காடு
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு :
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் செல்லும்போது, அவரிடமிருந்து அமுதக் கலசத்தைக் கைப்பற்ற அசுரர்கள் முனைந்தனர். வாயுதேவன், முருகனை மனத்தால் வணங்கி அமுதக் கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக்கொண்டார். அமுதக் கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிராகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. ராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன்மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இறைவி மையார்தடங்கன்னி சந்நிதி, முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்புக்காக காடுகிழாள் என்ற அம்பிகையின் சந்நிதியும் முன்மண்டபத்தில் உள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அமிர்த தீர்த்தமும், கோடியக்கரை கடலும் உள்ளன. அமிர்த தீர்த்தம் ஆலயத்தினுள் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மற்றொரு ஆலய தீர்த்தம் இங்குள்ள கடல் ஆகும்.
கோயில் சிறப்புகள் :
•குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் ‘கோடிக்குழகர்’ என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது.
•இத்தலத்து மூலவர் ‘அமிர்தகடேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘மையார் தடங்கண்ணியம்மை’ என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள். ‘காடு கிழாள்’ என்னும் மற்றொரு அம்பாள் சன்னதியும் உள்ளது.
•குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.
•இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுதக் கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவற்றை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுதக் கலசத்துடன் உள்ள முருகப்பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு.
•திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது.
•இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
•சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்துக்கு வந்த சுந்தரர், கடலருகே கோவிலில் இறைவன் தனித்து இருப்பதைப் பார்தது உள்ளம் வருந்தி பாடினார்.
•கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்’ என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள்.
•துர்க்கா தேவியே இங்கு காடுகிழாளாக கோயில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால்தான் சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வருகை புரிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், காடுகளோடும் உடனாய் கோயில் கொண்டிருந்த திறத்தை தம் தேவாரப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
•அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்துக்கு வரும் வழியில் ராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் ராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.
• தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
•கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது.
•கல்கியின் காவியமான பொன்னியின் செல்வனை நன்கு அறிந்த வாசகர்கள் அந்த இடத்தை பூங்குழலி, குழகர் கோயில் மற்றும் கடலுக்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்துடன் தொடர்புபடுத்துவார்கள், அங்கிருந்து வந்தியத்தேவன் அவளால் படகில் இலங்கைக்கு தனது பயணத்தைத் தொடங்குவார். கல்கி தனது இதழில் நாவலைத் தொடராக வெளியிடும் காலத்திலும் கோயிலின் நிலை மாறவில்லை என்று குறிப்பிட்டார்.
•சோழ நாட்டின் தென்கோடியில் திகழும் கடற்துறை ஊரே, கோடியக்கரை என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களான திருமறைக்காடு எனப்பெறும் வேதாரண்யத்திற்கும், அகத்தியர் வழிபட்டு ஈசனின் மணக்கோலக் காட்சி கண்ட அகத்தியான் பள்ளிக்கும், தெற்காக வங்கக்கடலின் கரையில் காட்டுப் பகுதிக்குள் கோடிக் குழகர் கோயில் திகழ்கின்றது.
திருவிழா:
இவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்
கோடியக்கரை
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 614 821.
போன்:
+91 – 4369 272 470
அமைவிடம் :
வேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி வழியாக தெற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்துக்குச் செல்லலாம்.
#kodiyakadu #kulakarkovil #Vedharanyam #amirthakadeswarar #murugantemple #templesofsouthindia #ramarpatham #குழகர்கோயில் #வேதாரண்யம் #கோடியக்காடு #அமிர்தகடேஷ்வரர் #முருகன்கோயில் #பொன்னியின்செல்வன் #பூங்குழலி #அமிர்தகடசுப்பிரமணியர் #அகத்தியான்பள்ளி #சுந்தரர்தேவாரம் #தலவரலாறு #கடற்கரைகோயில் #திருப்புகழ்கோயில் #சிவன்கோயில் #sriandalvastu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =