#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 4, 2023 0 Comments

மூலவர் : சௌந்தரேஸ்வரர் , முருகன்
உற்சவர் : வேலவன்
அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி , வள்ளி , தெய்வயானை
தல விருட்சம் : வன்னி மரம் , எட்டி மரம்
தீர்த்தம் : சரவணப்பொய்கை தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : காஞ்சிரங்குடி , எட்டிப்பிடி , எட்டிக்குடி
ஊர் : எட்டுக்குடி
பாடியவர்கள் : அருணகிரிநாதர்
ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார்.
ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்கு பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டு கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாக கூறினாள். கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்’ என்று வழி சென்னார் வால்மிகி. எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று ‘கேதார கவுரி’ விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை நிறுத்தினார்
ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்த திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம்.
நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும். அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி. அப்போது அந்த பக்கமாக வந்த அந்நாட்டு அரசன் சிற்பி தயாரித்துக் கொண்டிருக்கும் முருகனின் சிலையில் உயிர் ஓட்டம் இருப்பதை உணர்ந்து அதிசயித்தார். இந்த சிற்பி இப்படி ஒரு உயிர் ஓட்டம் உள்ள சிலையை வேறு எங்கும் இது மாதிரி சிலையை உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி விட்டார்.
இனி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்ற முடிவு செய்த சிற்பி, அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். சோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, “ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.
இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார். இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். அரசர் வந்த சமயம் அந்த சிற்பி, மயில் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார். மன்னரை கண்டதும் கற்சிலை மயில் பறக்க ஆரம்பித்தது. இதை கண்ட அரசர், தன் அருகில் இருந்த காவலர்களிடம் “மயிலை எட்டிப்பிடியுங்கள்“ என்றார். ஆனால் அந்த கற்சிலை மயில் காவலர்களுக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டியது. இதனால் சினம் அடைந்த காவலர்கள் கோபமாக அந்த கற்சிலை மயிலை பிடிக்க முயற்சித்ததால் அந்த கற்சிலை மயிலில் கால் சிறியதாக உடைந்தது. பிறகு தாமாகவே அந்த கற்சிலைமயில் முருகன் சிலை அருகே வந்து அமர்ந்தது.
இந்த முருகன் சிலை தான் எட்டுக்குடி சௌந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது. (இதையடுத்து, மூன்றாவதாகச் செய்த விக்கிரகம் குடிகொண்டிருப்பது, எண்கண் திருத்தலத்தில் என்பர். முதலாவது விக்கிரகம், சிக்கல் திருத்தலத்தில் உள்ளது)
• ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
• இது சிவத்தலம் சுப்ரமணியசுவாமியே பிரதான இறைவனாக இருக்கிறார்.
• சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம்.
• கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் திருமுருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாக தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாக காணப்படுகிறார். அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீரசௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுத கடவுள்தான் இங்கு மூலவர்.
• இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிராகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்குத் துணையாக சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன.
• எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். இங்கு மட்டும் மயில் வலப்புறமாகத் தலைப்பகுதி தோனறி நிற்கின்றது. தேவேந்திரனாகிய மயில் ஊா்ந்து, சூரசம்ஹாரத்துக்கு முன்னே முருகன் கோலம் கொண்டமையே இதற்குக் காரணம் என்பா். தேவேந்திரனையே மயிலாக ஊா்ந்த முருகப் பெருமான் சூரபதுமனை அழிக்க முற்பட்ட செய்தி கந்தபுராணத்தால் விளங்கும்.
• இத்தலத்தில் முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக இருப்பதால் போர் கோலத்தில் காட்சி தருகிறார்.
• எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு.
• தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் என்பர்.
• வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார். கோயிலுக்குள் வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..
• சூரபதுமனை அழிப்பதற்காகத் தோன்றியவர் என்பதால், அம்பறாத் தூணியில் இருந்து அம்பினை எடுக்கும் தோரணையில், வீர சௌந்தர்யத்துடன் காட்சி தருகிறார், ஸ்ரீசுப்ரமணியர்.
சித்ரா பவுர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பவுர்ணமிக்கு முதல் தேரோட்டம் நடத்தப்படும். இவ்விழாவில் குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழா நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு.
சிறப்பு பூஜை: இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும். எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்தால் பலன் வேறு மாதிரியாக அமையும்.
கோயில் நடை திறப்பு
காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில்
எட்டுக்குடி – 610212
நாகப்பட்டினம் மாவட்டம்
தொலைபேசி எண்
04366 – 245426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 10 =