#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவலஞ்சுழி

April 21, 2023 0 Comments

மூலவர் : திருவலஞ்சுழிநாதர்
அம்மன் : பெரியநாயகி, பிருஹந்நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி, அரசலாறு,
ஜடாதீர்த்தம்
புராண பெயர் : திருவலஞ்சுழி
ஊர் : திருவலஞ்சுழி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு :
காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு, ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன் தோன்றி, மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக்கொண்டால், அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும் என்றருளினார்.
அதைக்கேட்ட மன்னன், கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட (ஹேரண்ட) முனிவரிடம் சென்று, அசரீரி சொன்ன செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர், நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்தப் பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும், பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஏரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது.
சுவேத விநாயகர்
திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர், சுவேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும்முன், விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். அதனால்தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளிவந்தது. அதனால் அவதிகளுக்கு ஆளான தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில், பொங்கி வந்த கடல் நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.
அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன், ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் அந்தக் கோயிலில் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். அத்துடன், ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். கடல் நுரையால் ஆனதால், மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல், அவர் மேல் மெல்ல தூவி விடுவார் அர்ச்சகர். அதனால், இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால், திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.
திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி, விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் கடந்து நீண்ட வழியே சென்று மூன்று நிலை கோபுரத்தை அடையலாம். அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சந்நிதிகள் போக, அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிராகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜ காளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். ராஜராஜ சோழன் இக்காளியை வழிபட்ட பிறகுதான், போருக்குப் புறப்பட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்; வெற்றிகள் பல பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால், அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
கோயில் சிறப்புகள் :
•இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் பெயர் பெற்றார்.
•ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
•சுவேத விநாயகர் பாற்கடல் நுரையினால் செய்யப்பட்டவர் என்பதால் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. வஸ்திரம், சந்தனம், புஷ்பம் ஆகியவைகளும் சாத்தப்படுவதில்லை. அபிஷேகத்திற்கு பதிலாக பச்சைக் கற்பூரம் மட்டுமே பொடி செய்து, திருமேனியில் கைபடாமல் தூவப்பட்டு வருகிறது.
•முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு. இங்குள்ள விநாயகர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார் என்பது மிகவும் விசேஷம்
•மஹாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவி எனப்படும் கமலா அம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவி எனப்படும் வாணியையும் திருவலஞ்சுழிநாதர் கோயிலில் வைத்து சுவேத விநாயகர் திருமணம் செய்து கொண்டார். எனவே திருமணம் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டு வர எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது நம்பிக்கை.
•இந்திரன் வழிபட்ட தலம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.
•ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
•இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.
•இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள் பிராகாரத்தில் உள்ள முருகப் பெருமான், ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில், இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.
•இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வ மரமும் உள்ளது.
•வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திரபாலர் கோயில் உள்ளது. ‘க்ஷேத்திர பாலர்’ என்றால் பைரவரையே குறிக்கும். க்ஷேத்திரபாலர் பூஜையைவிடச் சிறந்த பூஜை இல்லை என்கின்றன ஆகமங்கள். இத்தகைய க்ஷேத்திரபாலருக்குத் தனி ஆலயம் எடுத்து வழிபட்டாள் சோழ மாதேவி.
•ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திரபாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
•இங்கு அஷ்டபுஜ காளி திருவடிவம் சிறப்புமிக்கது. இவளை, ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. `பிடாரி ஏகவீரி’ என்றும் குறிக்கின்றன கல்வெட்டுகள்.
•ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.
திருவிழா:
மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,
திருவலஞ்சுழி – 612 302.
தஞ்சாவூர் மாவட்டம்
போன்:
+91 435 245 4421, 245 4026
அமைவிடம் :
கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =