#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவெக்கா

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவெக்கா
85.#அருள்மிகு_சொன்ன_வண்ணம்செய்த_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
தாயார் : கோமளவல்லி தாயார்
தீர்த்தம் : பொய்கை புஷ்கரிணி
புராண பெயர் : திருவெக்கா
ஊர் : திருவெக்கா
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு :
காஞ்சிபுரத்தில் இருக்கும் திவ்யதேசங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பிரம்மாவின் யாகத்திலிருந்து எழுந்தருளியவர் அத்திவரதர். அந்த யாகம் தொடங்கப்பட்டபோது, ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்கப் பெருமாள் பல்வேறு தலங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். பிரம்மன் செய்த யாகத்தை அழிக்க, சரஸ்வதி தேவி வேகவதி என்னும் நதியாக மாறி பெருவெள்ளமாய்ப் பாய்ந்தாள். அவளைத் தடுத்து நிறுத்தப் பெருமாள், ஆற்றின் குறுக்கே அணையாகப் படுத்தார். வேகவதி என்னும் வெக்கா நதி பாய்ந்த திருத்தலம் ஆதலால் அது ‘திருவெக்கா’ என்றழைப்பட்டது. இங்கு இருக்கும் பெருமாளுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர். இந்தப் பெயர் பெருமாளுக்கு ஏற்பட்டதற்குப் பின் ஒரு சுவாரஸ்மான சம்பவம் ஒன்று உண்டு.
திருமழிசையாழ்வாரின் சீடன் கணிக்கண்ணன். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் சேர்த்து உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார் ஒரு மூதாட்டி. அவரின் சேவையைக்கண்டு மனம் மகிழ்ந்த ஆழ்வார், ‘தங்களுக்கு என்ன வேண்டும்’ என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியும், ‘தங்களுக்கு மேலும் தொண்டு செய்ய எனக்கு நல்ல உடல் பலம் வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அடுத்த கணம் அவரின் முதுமை நீங்கி இளமை திரும்பியது. இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட அந்த நாட்டின் மன்னன் கணிக்கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கணிக்கண்ணன் மீதும், ஆழ்வார் மீதும் பொறாமை கொண்டிருந்த சிலர், கணிக்கண்ணன் சொன்னால் ஆழ்வார் எதையும் செய்வார் என்று சொல்லி மன்னரின் பேராசையைத் தூண்டினார். அரண்மனை வந்த கணிக்கண்ணனிடம் மன்னன், ‘தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும் ‘ என்று கேட்டார்.
கணிக்கண்ணனோ, ” குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய உத்தரவின் வழியாகப் பெறமுடியாது” என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். ‘தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார்.’ இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், ‘வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்’ என்று சொல்லிக் கோயிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுமாறு ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள் என் சீடன் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன். பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை. நீயும் உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு என் பின்னாலேயே வா என்பது இதன் பொருள்.
சீடன் முன்னே செல்ல, ஆழ்வார் பின்னே செல்ல, அவர்களைத் தொடர்ந்து பெருமாளும் தன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு அவர்கள் மூவரும் ஊர் எல்லையைக் கடந்து ஓர் ஊரில் தங்கினர்.
நாராயணன் வெளியேறியதும், அவன் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். திருவும் இறையும் இல்லாத ஊரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினர். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.
மறுநாள் பூஜை செய்யவந்த அர்ச்சகர்கள் கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். இந்தத் தகவல் மன்னனுக்குப் போனது. மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். ஓடோடி வந்து ஆழ்வாரின் காலடியில் வீழ்ந்து பணிந்து தன் பிழை பொறுக்குமாறு வேண்டினான். ஆழ்வாரும் அவனை மன்னித்து “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்” என்று பாடினார்.
உடனே பெருமாள் மீண்டும் தன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொண்டு திருவெக்கா வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். ஓர்நாள் இரவில் பெருமாள் தங்கிய ஊர் ஓரிக்கை (ஓர் இருக்கை) என்றானது. மற்ற தலங்களில் எல்லாம் பெருமாள் இடமிருந்து வலமாகச் சயனித்திருக்க, திருவெக்காவிலோ வலமிருந்து இடமாகச் சயனித்திருப்பார். ஆழ்வாரின் சொல் கேட்டு எழுந்து நடந்து மீண்டும் வந்து படுத்ததால் இந்தப் பெருமாளுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று திருநாமம் ஏற்பட்டது.
கோயில் சிறப்புகள் :
•எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.
•பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று
•பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார்
•சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். வேகவதி ஆறே “வெக்கா’ என அழைக்கப்படுகிறது.
•இத்தல பெருமாள் மேற்கு பார்த்த கோலத்தில் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார்.
•இத்தல பெருமாளை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், கனிகண்ணன், பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.
•காஞ்சிபுரத்தில் மொத்தமாக 14 திவ்யதேசங்கள் மிக அருகருகே அமைந்துள்ளன. இருப்பினும் பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரும், இத்தலத்தில் அவதரித்தவருமான பொய்கை ஆழ்வார் இத்தலத்தை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில் (திருவெக்கா), காஞ்சிபுரம் -631 502.
காஞ்சிபுரம் மாவட்டம்
போன்:
+91-44 -37209752
அமைவிடம் :
காஞ்சிபுரம் நகரில் ஆடிசன் பேட்டையிலிருந்து வரதராஜ பெருமாள் கோயில் செல்லும் வழியில் உள்ளது.
#சொன்னவண்ணம்செய்தபெருமாள் #யதோத்தகாரிபெருமாள் #templesinindia #திருவெக்கா #ஆலயம்அறிவோம் #திருக்கோயில்வரலாறு #ஸ்தலவரலாறு #பெருமாள்கோயில்கள் #திவ்யதேசம் #திருமழிசைஆழ்வார் #பொய்கையாழ்வார் #கனிகண்ணன் #sonnavannamseithaperumal #yathothakariperumal #thiruvekka #kanchipuram #templesofindia #templesofperumal #templesinsouthindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =