#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

அம்மன் : மாரியம்மன்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்… நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்!
நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான்.அக்குழந்தை அவள் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்து தோன்றியது. அத்தேவியே “மகா மாரியம்மன்” என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வமாக சமயபுரத்தில் அருள்பாலிக்கிறாள்.
மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப் பெற்று வந்ததென்றும் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது, இந்த சிலையை தந்தப் பல்லக்கில் கொண்டுவரப்பெற்றப்போது, பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கிவைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும் பின்னர் வந்து தூக்க முயலும்போது பல்லக்கை தூக்க இயலவில்லை எனவும் பிறகு விஜயரங்கசொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. இதைக் குறித்தே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் வழக்கில் உள்ளது.
அன்னை அருளாட்சி செய்யும் மாரியம்மன் கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. எனவே, இத்திருக்கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லாமல் போய்விட்டது. எனினும் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்று வழங்கப்படும் ஊரில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன் கோயில் கல்வெட்டில் “பனமங்கலம், துறையூர்” போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. எனவே சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் போசள மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்திருக்க வேண்டும். சமயபுரம் கோயிலில் கொடி கம்பத்தை அடுத்துள்ள மண்டபத்தின் தூண்களில் கீழ் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே 700 ஆண்டுகளுக்கு மேல் இக்கோயில் அமைந்துள்ளதென அறியலாம்.
சோழ மன்னன், தன் சகோதரியை கங்க தேசத்து மன்னனுக்கு மணம் முடித்துவைத்தான். அவர்களுக்குச் சீதனமாக கோட்டையையும் நகரம் ஒன்றையும் அளித்தான். அந்த நகரம் கண்ணனூர் என அழைக்கப்பட்டது. கால ஓட்டத்துக்குப் பிறகு, பாண்டிய மன்னர்கள் படையெடுத்தார்கள். அப்போது கோட்டையையும் அழித்தார்கள்; நகரத்தையும் அழித்தார்கள். நகரம் அழிந்து பொட்டல் காடாயிற்று. பிறகு பொட்டல் வெளியில் வேப்பமரங்கள் வளர்ந்தன. அது, வேம்புக்காடாயிற்று.
இந்தக் காலகட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி எனும் பெயரில் கோயில் கொண்டிருந்தாள் தேவி. கோரைப்பற்களும் செக்கச்சிவந்த கண்களுமாக திகழ்ந்தாள் என்பதால், அப்போதைய ஜீயர் சுவாமிகள், வைஷ்ணவி அம்மனை வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
அதன்படி வைஷ்ணவி திருச்சிலையை சுமந்துகொண்டு வடக்கு நோக்கி பயணித்தனர். வழியில் ஓரிடத்தில் இளைப்பாறினார்கள். பின்னர் கண்ணனூர் அரண்மனை இருந்த மேட்டுப் பகுதியை அடைந்தனர். அங்கே ஓலைக்கொட்டகையில் அம்மனை வைத்துச் சென்றனர். வைஷ்ணவியை அன்று முதல் கண்ணனூர் அம்மன் என்றே அழைத்து வணங்கி வந்தார்கள்.
வைஷ்ணவி என்றெல்லாம் அழைக்கப்பட்டவள், கண்ணனூர் அம்மன், கண்ணனூர் மாரியம்மன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவள் பின்னர் சமயபுரத்தாள் என்றும் சமயபுரம் மாரியம்மன் என்றும் அழைக்கப்படலானாள்.
கண்ணனூரில் அம்மனாக இருந்த சமயத்தில், தென்னகத்தின் மீது விஜயநகர மன்னர் படையெடுத்தார். தன் படை பரிவாரங்களுடன் கண்ணனூர் வேப்பங்காட்டில் தங்கினார். அங்கே இருந்த அம்மனைக் கண்டனர். அம்மனிடம் வேண்டிக்கொண்டனர். யுத்தத்தில் வெற்றி பெற்றால், உனக்கு கோயிலே கட்டுகிறேன் என வேண்டிக்கொண்டார் மன்னர். அதன்படியே கோயிலும் எழுப்பினார். அம்மனை பிரதிஷ்டை செய்ததுடன் பரிவார தெய்வங்களாக விநாயகப் பெருமானையும் கருப்பண்ணரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இன்றைக்கு இருக்கிற சமயபுரம் திருக்கோயில், கி.பி.1804ல் விஜயரங்க சொக்கநாத மன்னரால் கட்டப்பட்டது. அதேசமயம், சோழப் பேரரசு காலத்திலேயே இந்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும் விஜய நகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் இன்னும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்று தொடங்கி இன்றளவும் தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள் சமயபுரம் மாரியம்மன்.
• அன்னை இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.
• நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்.
• சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.
• சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.
• கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்
• இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.
• இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.
• உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்
• இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது.
• தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளிடம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2-ஆம் திருநாளிலிருந்து 8-ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9-ஆம் நாள் தெப்பத் திருவிழா.
• பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.
• விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.
• தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.
• இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர்.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை.
#பூஜை விவரம் :
ஆறு கால பூஜைகள்:-
உசாத் காலம் – காலை 6.00 மணி.
கால சாந்தி – காலை 8.00 மணி.
உச்சி காலம் – பிற்பகல் 12.00 மணி.
சாய ரட்சை – மாலை 6.00 மணி.
இரண்டாம் காலம் – இரவு 8.00 மணி.
அர்த்த ஜாமம் – இரவு 9.00 மணி.
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
சமயபுரம் – 621 112,
திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் :
0431 – 2670460.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =