கடிதம் – 16 – வாழ்க்கை – கதையல்ல நிஜம்

November 14, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்…

வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே…

பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே….

– இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை…

* நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது…

* நல்ல உடல் நிலை – கல்வி கற்க போன இடத்தில் கற்க கூடாததை கற்று கொண்டு (புகை, மது) அதுவே பழக்கவழக்கங்களாக மாறி பின் உயிரே இல்லாமல் போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

* வெட்டி திமிர் பேச்சு, கோபம், வெறுப்பு, பொறாமை, தற்பெருமை, பிடிவாதம், கவலை என்பவை எல்லாம் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக ஆகிப் போனதால் சொந்தங்கள் இருந்தும் இல்லாத நிலை ஏற்பட்டது.

* வீட்டின் வருமான மூலாதாரமாக இருந்த என் வேலை போன நேரம், என் உடல்நிலை சரியில்லாமல் போன நேரம், என் தந்தை உடல்நிலை மேலும் சரியில்லாமல் போன நேரம், கடன் அட்டைகளால் (Credit Card) உருவான கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடன் வசூலிப்பவர்களினால் மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்ட நேரம், உறவுகள் இருந்தும் யாரும் அருகில் இல்லாமல் போன நேரம்

* ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்படி நூறு விஷயங்கள் ஒரே நேரத்தில் என்னை சந்தித்து சந்தோஷ பட்டுக்கொண்டு இருந்தது….

மேலும் சில விஷயங்கள் என்னை சந்தித்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து “எதை தின்னால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் இருந்த என்னிடம், ஒரு நாள் கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத என் அப்பா

– உனக்கு வேலை போய்விட்டது நீ செய்த தவறுக்காக. உன் உடல்நிலை, என் உடல்நிலை படு மோசமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடன் யாரும் இல்லை என்கின்ற கவலை உனக்கும் உண்டு எனக்கும் உண்டு இருந்தாலும் நீயும், நானும் உயிரோடு இருக்கின்றோம் இது எதற்கோ ஒரு நல்ல விஷயத்திற்காக என்று தைரியமாக இருப்போம். ஏதோ ஒரு நல்ல விஷயம் நமக்காக காத்திருக்கின்றது என்று கூறிவிட்டு எங்கள் வீட்டில் இருந்த திருநீறு மறையில் இருந்து அவர் திருநீறு வைத்துக் கொண்டவாறே எனக்கென்னவோ ஒருமுறை நீ திருச்செந்தூர் சென்று வந்தால் சரியாக இருக்கும் என மனதிற்கு படுகின்றது. போய் வா…. என்று கூறியவாறு வெளியே கிளம்பி சென்று விட்டார்…. என்னை பொறுத்தவரை என் அப்பா என்னிடம் அதுநாள் வரை இது செய், அது செய், இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்லியதே இல்லை. அதேபோல் அவர் திருநீறு இட்டு நான் பார்த்ததும் இல்லை. அப்படிப்பட்ட என் அப்பா முதல் முறையாக தனக்கு தானே திருநீறு இட்டு கொண்டு என்னை கோவிலுக்கு போக சொன்னது தான் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனை. (என் அப்பா பட்டப்படிப்பு படிக்க வில்லை என்றாலும் நிறைய புத்தகங்கள் படிப்பார். அவர் எப்போதுமே ஒரு வாக்கியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை இப்போதும் நினைவில் வைத்து இருக்கின்றேன். அந்த வாக்கியத்தை சொன்னது Hot breads Mahadevan. அந்த வாக்கியம்

“ஆபத்தான காலகட்டங்களில் அதிக சவால்கள் நிறைந்த துணிகரமான முடிவுகள் எடுப்பதே நல்லது”)

அவர் கோவிலுக்கு போகச் சொன்னதில் எந்த பெரிய சவாலும் இல்லாததாலும் திருச்செந்தூர் கோவிலை சாக்காக வைத்து திருநெல்வேலி சென்றால் அங்கு வசிக்கும் எனக்கு மிகவும் பிடித்த என் அம்மா பாட்டியிடம் வீட்டு செலவிற்கு பணமோ அல்லது நகையோ கடன் வாங்கி வந்து இரண்டு மூன்று மாதங்கள் சென்னையில் பிரச்சனை இல்லாமல் சமாளித்து வாழ்க்கை ஓட்டலாம் என்பதாலும் ஊர் போக முடிவெடுத்து வீட்டை விட்டு திருச்செந்தூர் கிளம்பினேன்.

வீட்டை விட்டு கிளம்பிய பிறகு திடீர் மன மாற்றம். நம்மிடம் தான் ரூ.650/- பணம் இருக்கின்றதே தண்ணி அடித்து ரொம்ப நாளாகி விட்டதே என்று நினைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, நன்றாக அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்வோம் என முடிவெடுத்து அப்படியே செய்து விட்டு மேடவாக்கத்தில் இருந்து தாம்பரம் சென்றேன் ஊருக்கு செல்ல Bus பிடிக்க. குடித்திருந்ததால் சிந்தனை சிதறி திடீரென்று ஒரு இனம்புரியா பயம் – “இருக்கின்ற பணம் கொண்டு திருச்செந்தூர் சென்றுவிட்டு பின் அங்கிருந்து திருநெல்வேலி பாட்டி வீட்டிற்க்கு போகமுடியாத அளவிற்கு பண தட்டுபாடு வந்துவிட்டால் என்ன செய்வது என்று” – பயம் வந்த உடன் தாமதிக்காமல் முடிவெடுத்தேன் நேராக பாட்டி வீட்டிற்க்கு சென்று முதலில் பணம் வாங்கி கொண்டு பின் சாமி கும்பிட்டுவிட்டு வரலாம் என்று. முடிவெடுத்த படி என் பாட்டி வீட்டிற்கு சென்றேன். என் பாட்டி வீட்டில் என் மேல் எப்போதும் எல்லோருக்கும் பயம் கலந்த அன்பு, மரியாதை உண்டு காரணம் நான் அந்த வீட்டில் முதல் படித்த பேரன் மற்றும் என் அப்பா நிறைய உதவிகள் என் பாட்டி குடும்பத்திற்கு செய்து இருக்கிறார்கள் என்பதால். என் பாட்டி வீட்டு வருமானம் அவருக்கு குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இருந்தது. வீட்டு செலவை சமாளிக்க என் பாட்டி வீட்டிலே Mess மாதிரி வைத்து நடத்தி வந்தார்கள். சுவை நன்றாக இருக்கும் என்பதால் எப்போதும் 4 – 5 பேர் சாப்பிட வந்து கொண்டே இருப்பார்கள்… நானும் பாட்டி வீட்டை சென்றடைந்த உடன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன்… கூடவே வெளி ஆட்கள் 3 பேரும் அமர்ந்து இருந்தார்கள் சாப்பிட…. என் பாட்டி மெதுவாக கேட்டார். என்ன சொக்கு திடீரென்று வந்து இருக்கின்றாய் என்று நான் சொன்னேன்; அப்பா சித்தியின் chain – ஐ அடமானம் வைத்து ரூ.10000/- வாங்கி வர சொன்னார்கள் அல்லது chain – ஐ வாங்கி வர சொன்னார்கள் என்று (எதற்கு சித்தியின் chain என்பதற்கு பெரிய துணைக் கதை உண்டு. இவ்விடம் அதன் விளக்கம் வேண்டாம்) நான் கேட்ட உடனே அந்த chain – க்கு எந்தவித சம்பந்தம் இல்லாத என் அத்தை (அம்மாவின் முதல் சகோதரர் மனைவி) அய்யோ! வேண்டவே வேண்டாம்… நீங்கள் வித்து தின்னுருவீங்கள் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்ன உடன் பசியோடு சாப்பிட உட்கார்ந்தவன் சாப்பாடு தட்டை தட்டி விட்டு (இப்போதும் பெருத்த அழுகையோடு இந்த இடத்தில் இதை பதிவிடுகின்றேன்) நான் அப்பொழுது அழுத அழுகை எப்போதுமே என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

அந்த அழுகையின் இடையே நான் தெளிவாக என் பாட்டி – அத்தையிடம் சொன்ன விஷயங்கள்:

– சித்திக்கு செலவு செய்து திருமணம் செய்து வைத்து என் அப்பா (சித்தி – என் அம்மாவின் தங்கை சித்தப்பா என் அப்பாவின் தம்பி)

– சித்தப்பாவிற்கு Commercial Tax Department – ல் Govt வேலை வாங்கி தந்தது என் சொந்த பெரியப்பா

– என் சித்தப்பா தற்கொலை செய்து கொண்ட போது எல்லா செலவும் செய்தது என் அப்பா

– சித்திக்கு பெரிய போராட்டத்திற்கு பிறகு Pension – வாங்கி கொடுத்தது என் அப்பா

– அத்தை – ஊரே உங்களை பிடிக்கவில்லை என்றபோது என் அப்பா தான் இந்த பெண் 10 பேரோடு பிறந்தவர். வீட்டிற்க்கு அடக்கமாக இருப்பார் என்று எல்லோரையும் சம்மதிக்க வைத்து என் மாமாவிற்கு திருமணம் முடித்து கொடுத்தவர்

– அத்தை – உன் வீட்டுகாரரை சென்னை எங்கள் வீட்டில் தங்க வைத்து நாங்கள் தான் படிக்க வைத்தோம்.

– அத்தை – உன் வீட்டுகாரருக்கு வேலை கிடைத்தது என் அப்பாவின் முயற்சியால் தான்.

– அப்படியே நான் அந்த Chain – ஐ நான் விற்று தின்னால் உங்களுக்கென்ன? என்று கூறி விட்டு இனிமேல் உங்கள் வீட்டிற்க்கு நான் வர மாட்டேன்; என் அப்பாவையும் அம்மாவையும் வர விட மாட்டேன் என்று கூறிவிட்டு பசியோடு, அழுது கொண்டே திருசெந்தூர் செல்ல bus ஏறினேன்…

என் அத்தை சொன்ன வார்த்தையான Chain – ஐ விற்று தின்னு விடுவீர்கள் என்பதை நினைக்க நினைக்க அழுகை வந்து கொண்டே இருந்தது… Bus – ல் சுற்றிலும் இருப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் அழுதுகொண்டே வந்தேன். Bus – ஐ விட்டு இறங்கும் முன்பு முடிவெடுத்தேன் இதைவிட Life – ல் அவமானம், அசிங்கம், கஷ்டம் வராது என்பதாலும் நான் மறுபடியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதென்று….

அடுத்த கடிதத்தில் மேலும் விவரத்துடன் சந்திக்கின்றேன்… உங்களுக்கு தேவையான விபரங்களுடன்…
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =