#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு
#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு
மூலவர் : காமாட்சி
தல விருட்சம் : மாமரம்
புராண பெயர் : சூதவனம்
ஊர் : மாங்காடு
மாவட்டம் : காஞ்சிபுரம்
காமாட்சி என அழைத்த உடனே அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சியம்மன் முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகு காஞ்சிபுரத்திற்கு சென்று எழுந்து அருளினால் என்று காஞ்சி புராணம் கூறுகிறது.
ஸ்தல வரலாறு :
கயிலாய மலையின் பனிச்சிகரங்கள் சூழ்ந்த இடத்தில் பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். அளவிலா விளையாட்டுடையவனாகிய ஈசனுடன் விளையாட தேவி பார்வதி விழைந்தாள். ஈசனின் கண்களை தம் மலர்க்கரங்களால் பொத்தினாள். முக்கண்ணனின் இருகண்களாக இருப்பவர்கள் சந்திர, சூரியர்கள் அல்லவா? தேவி ஈசனின் கண்களைப் பொத்திய நேரம் ஒரு கணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்கு பல காலமாயிற்றே! சந்திர, சூரியரின் இயக்கம் நின்றது. பூவுலகம் செயலிழந்தது. இச்செயலினால் தேவி சிறிது காலம் தவம் செய்து மீண்டும் இறைவனோடு இருப்பதற்கு திருவுளங்கொண்டாள்.
தவம் செய்துதான் மீண்டும் தம் நாயகனைப்பெற வேண்டும் என்பதால் மாமரங்கள் சூழ்ந்த பதியை அடைந்தாள். ‘ஆமாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட தலம் மாங்காடு. அங்கு பஞ்சாக்னியின் நடுவே தேவி பார்வதி தவக்கோலம் கொண்டாள். சுற்றிலும் அக்னி குண்டங்கள். நடுவில் உள்ள குண்டத்தில் அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது. அதில் காமாக்ஷி ஈசனை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவளான தேவியாக தன் இடக்கால் கட்டை விரலை அக்னியில் ஊன்றி, வலக்காலை மடித்து இடக்காலின் மீது படிய வைத்த நிலையில் கடுந்தவம் புரிந்தாள். வலக் கரத்திலே ஜபமாலை தாங்கி சிரஸின் மீது வைத்திருந்தாள். இடக்கரம் சின் முத்திரையுடன் நாபிக்கமலத்தின் மீது படிந்திருந்தது. தியான நிலையில் இருவிழி மூடி மோனத்தவம் புரியும் மோகன வடிவாக காமாக்ஷி திகழ்ந்தாள். (இன்றும் இக்காட்சியைக் இத்தலத்தில் காணலாம்.)
தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன. சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார். இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார். திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார். அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் “தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.
வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார். வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பை புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது. தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார். நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.
வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். “உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார். ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள். சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையொட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையொட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் “மீண்டும் தவம் செய்வாய். காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்” என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார். இதனால் மனம் மகிழ்ந்து அம்பாள் காஞ்சிக்கு சென்றாள். தவம் செய்த கோலத்தால் மாங்காட்டில் அம்பாளின் பெயர் தவக்காமாட்சி என்றானது. மணலில் சிவனின் உருவத்தைச் செய்து திருமணம் செய்ய அம்பாள் வேண்டினாள். நல்ல பங்குனி உத்திர நாளில் திருமணம் நடந்தது.
கோயில் சிறப்புகள் :
• அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிஷேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
• இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்கரம், “அஷ்டகந்தம்’ என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்கரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிஷேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேஷமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.
• மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
• சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, “சீர் பெருமாள்’ என்றும் அழைக்கிறார்கள்.
• அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு “ஆதி காமாட்சி தலம்’ எனப்படுகிறது.
• அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.
• மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.
• மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.
• விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.
திருவிழாக்கள் :
• சித்திரைத் திருவிழா – 10 நாட்கள்,
• தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள்,
• தீபாவளி,
• பொங்கல் நவராத்திரி,
• மாசி மகம்,
• மகாசிவராத்திரி,
• ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேஷ நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி – 1.30 மணி,
மாலை 3 – இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.
முகவரி:
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,
மாங்காடு-602101,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2627 2053, 2649 5883.
அமைவிடம் :
கோயம்பேட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், தாம்பரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.