#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருந்துதேவன்குடி

August 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருந்துதேவன்குடி
205.#அருள்மிகு_கற்கடேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : கற்கடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : அபூர்வநாயகி,
அருமருந்துநாயகி, அருமருந்தம்மை
தல விருட்சம் : நங்கை மரம்,
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
புராண பெயர் : கற்கடேஸ்வரம், நண்டாங்கோயில்
ஊர் : திருந்துதேவன்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜைகளையும் பரிகாசிக்கும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர் அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான். தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன் தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தாமரை பயிரிட்டு தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்துவிட்டான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன் நண்டை கொல்ல முயன்றான். நண்டு சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன் லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள் லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும் என்று அறிவுறுத்தி காட்சி தந்தார்.
ஒரு காலத்தில் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்து இருந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன் நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினார்கள். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வியந்த மன்னன் அவர்களிடம் தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும் அதனுள் ஐக்கியமானார்கள். மருத்துவர்களாக வந்தது சிவ பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பிய போது ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால் அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.
கோயில் சிறப்புகள்:
•சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 42 வது தேவாரத்தலம் திருந்துதேவன்குடி.
•இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
•அம்பாள் அருமருந்தம்மை அபூர்வநாயகி அருமருந்துநாயகி. பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றார்கள்.
•இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
• பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மற்றும் சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர்.
•நவக்கிரக சன்னதி கிடையாது.
•சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம் திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. நண்டான் கோயில் என்று தற்போது அழைக்கிறார்கள்.
•அனைத்து சிவ ஆலயங்களிலும் சந்திரனுக்கு இருக்கும் தனி சன்னதியில் நின்ற நிலையில் இருப்பார். இக்கோவிலில் அமர்ந்த நிலையில் யோகத்தில் இருக்கிறார்.
•கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும் இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.
•சந்திரன் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளான்.
•திருஞானசம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார்.
•இத்தல இறைவன் அரசன் ஒருவனுக்கு இருந்த கொடிய வியாதியை, கிழவர்போல வந்து தீர்த்தருளிய தலம்.
•காறாம்பசுவின் பால் பதின்கலம் அபிஷேகம் செய்தால் இலிங்கத்தின் முடிமீது ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் போன்ற தரிசனம் இன்றும் காணலாம்.
•கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
திருவிழா:
சிவராத்திரி, திருக்கார்த்திகை
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்,
திருந்துதேவன்குடி – 612 105.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 435 – 2000 240, 99940 15871
அமைவிடம்:
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #திருந்துதேவன்குடி #கற்கடேஸ்வரர் #சோமாஸ்கந்தர் #நண்டாங்கோயில் #கற்கடேஸ்வரம் #karkadeswarar #thirundhudevankudi #nandangoyil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =