#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வாழைப்பந்தல்

August 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வாழைப்பந்தல்
204.#அருள்மிகு_பச்சையம்மன்_திருக்கோயில்_வரலாறு
மூலவர் : பச்சையம்மன்
உற்சவர் : பச்சையம்மன்
ஊர் : வாழைப்பந்தல்
மாவட்டம் : திருவண்ணாமலை
ஸ்தல வரலாறு:
காஞ்சிபுரத்தில் ஒரு ஊசியின் மேல் நின்று நெடுந்தவம் புரிந்து காமாட்சியாக காட்சி தந்த பார்வதி தேவி காஞ்சியில் தவத்தை முடித்த பிறகு அம்பிகை சப்தரிஷிகள் மற்றும் சப்த கன்னிகைகள் உடன் சேர்ந்த பரிவாரங்களுடன் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டாள். பாதி வழியில் வாழைப்பந்தல் என்ற ஊரில் பரிவாரங்கள் முகாமிட்டனர். அவ்விடத்திலே அம்பிகை சிவ பூஜை செய்ய ஆயத்தமானார். கதலி வனம், அதாவது வாழைத்தோட்டம் அருகே வாழைப்பந்தல் அமைத்து தான் நித்தம் பூஜை செய்யும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தியானத்தில் அமர்ந்தாள். அம்பிகையை வேவு பார்த்துக்கொண்டிருந்த அசுரர்களில் சிலர் அங்கே வந்து சிவலிங்கத்தை கவர்ந்து சென்றனர். இதை அறிந்த அம்பிகை கவலையுற்றாள். தன் சகோதரரான மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். மகாவிஷ்ணு மணலில் லிங்கம் பிடித்து பிரதிஷ்டை செய்து அம்பிகையின் தவத்தை தொடர ஆலோசனை அளித்தார்.
அவ்வாறே அங்கு மணலில் லிங்கம் பிடித்து சிவ பூஜை செய்ய எண்ணினார் அம்பிகை. லிங்கம் பிடிக்க நீர் வேண்டுமே, அதனால் தன்பிள்ளைகளான விநாயகன், முருகனை அழைத்து நீர் கொண்டு வரச்சொன்னார். அருகில் உள்ள மலையின் மீது ஒரு முனிவர் கமண்டலத்தில் நீருடன் தியானம் செய்வதை அறிந்த விநாயகர் மூஞ்சுறு உதவியுடன் அக்கமண்டலத்தை கவிழ்த்துவிட அது கமண்டல நாக நதியாக அம்பிகை பூஜை செய்யும் இடம் நோக்கி பெருகிப் பாய்ந்து வந்தது. முருகன் தன்னுடைய வேலினை மலை மீது ஏவிவிட அதில் இருந்து சேயாறு பெருக்கெடுத்தது, அதுவே இன்றைய செய்யார் என்று மருவி உள்ளது.
மகன்கள் நீர் கொண்டு வர வெகு நேரமானதால் அம்பிகை தன் கையில் உள்ள பிரம்பினால் தட்டி தட்டி நீரூற்று உருவக்கினாள். அதன் பெயர் பிரம்பகா நதி ஆகும். அந்த மூன்று நதி நீரினைக்கொண்டு அம்பிகை மணல் லிங்கம் பிடித்து பூஜை செய்து தவம் மேற்கொண்டாள். மூன்று நதிகள் சேரும் இடம் தான் முக்கூட்டு என்றழைக்கப்பட்டது. அதுவே முனுகப்பட்டு என்று மருவி உள்ளது. இங்கே எழுந்தருளி உள்ள சிவன், முக்கூட்டு சிவன் என்றழைக்கப்படுகிறார்.
சிவனில் சரி பாதி அம்பிகை பெற்றுவிட்டால் அசுரகுலத்திற்கு பெரும் ஆபத்து என்று எண்ணி அம்பிகையின் தவத்தை கலைக்க முற்பட்டனர் அசுரர்கள். சிவன் வாழ்முனியாகவும் மகாவிஷ்ணு செம்முனியாகவும் எழுந்தருளி அம்பிகையின் தவத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் அங்கே காவல் புரிந்தனர். அம்பிகையும் தனது தவம் நிறைவேறியதும் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டு சென்றாள்.
கோயில் சிறப்புகள்:
•திருமுல்லைவாயல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை போன்று தமிழ்நாட்டின் பல பகுதியில் பச்சையம்மன் கோயில் இருந்தாலும் வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயிலே முதன்மையானதாக கருதப்படுகிறது.
•இங்கு தான் சிவபெருமான் லிங்க உருவில் இல்லாமல் மனித வடிவில் காட்சி அளிக்கிறார். சிவனும் மகாவிஷ்ணுவும் துவார பாலகர்களாக வீற்றுள்ளார்கள். வாழைப்பந்தல் அமைத்து பார்வதி தேவி பச்சையம்மனாக சிறப்பு பெற்ற இடம் தான் முக்கூட்டு எனும் முனுகப்பட்டு.
•அம்பிகை, லிங்கம் வடிக்க தண்ணீர் தேடி தவித்து, சினம் கொண்டதால் சிவந்த மேனியுடையவளாய் மாறினாள். பின் தனது முயற்சியாலும் பிள்ளைகளின் முயற்சியாலும் தண்ணீர் கிடைத்ததும் உள்ளம் குளிர்ந்தாள் அம்பிகை. சாந்தமாக தவம் செய்ய தொடங்கிய அம்பிகை பச்சை திருமேனியாக காட்சியளித்தாள். இதனால் தான் அம்பிகை பச்சையம்மன் என்று அழைக்கப்பட்டாள்.
•இந்த தலத்தில், ஈசன் மண்ணால் ஆனா லிங்கம் ஆதலால் மன்னாதீஸ்வரர் என்றும் மன்னார்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
•பொதுவாக அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பானதாக இருக்கும். ஆனால், இங்கு ஈசனே பிரதானமானவராய் உள்ளதால் ஆடி மாத சோமவாரம் இங்கு விசேஷமான நாட்களாக கருதப்படுகிறது.
•தங்கள் குலதெய்வம் என்னவென்றே தெரியாத பலரும் பச்சையம்மனை குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர்.
•கருவறையில் இரண்டு பச்சையம்மனை தரிசிக்க முடியும் . ஒருவர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் , மற்றொருவர் சுதை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
•சப்த ரிஷிகளும் இங்கு வீர தோற்றத்துடன் அம்பிகையின் காவலர்களாக வீற்றுள்ளனர். இந்திரன் தேவலோகத்தில் இருந்து யானை குதிரை ஆகியவற்றை அன்னையின் காவலுக்காக வரிசைப்படுத்தி நிறுத்தினான்.
திருவிழா:
தமிழ் மாதப்பிறப்பு, திங்கள் (சோமவார) வழிபாடு, பவுர்ணமி, ஆடி மாதம் முழுவதும் நேர்த்திக்கடன் வழிபாடு
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பச்சையம்மன் கோயில்,
வாழைப்பந்தல்
திருவண்ணாமலை
போன்:
+91 4175 251 685
அமைவிடம்:
திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
#templesofsouthindia #templesoftamilnadu #templeshistory #templesofhindus #temple #ஸ்தலம் #தலவரலாறு #ஆலயம்அறிவோம் #கோயில்கள் #ஆன்மீகம் #கோவில்வரலாறு #templepost #templesecrets #FamousTemples #DrAndalPChockalingam #SABP #pachaiamman #tiruvannamalaitemple #Tiruvannamalai #valaipanthal #AmmanTemple #பச்சைஅம்மன் #வாழைபந்தல் #திருவண்ணாமலை #காஞ்சிகாமட்சி #அர்த்தநாரிஷ்வரர் #அண்ணாமலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =