கடிதம் – 10 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம்  10 காதல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்காள் வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் வாழ்ந்ததாலும் என் காதலியின் அக்கா கணவனான என் நண்பனிடம் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வந்தேன்…. இந்த சூழ்நிலையில் நண்பனின் அழைப்பு என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லப் போகிறது என்று எண்ணி அந்த அழைப்பை ஏற்று, நாங்கள் அனைவரும் அவள் இருந்த வீட்டிற்கு சென்றோம்…   அவளையும் பார்த்தோம்… அவளும் எல்லோரையும் பார்த்தாள்…. ஒரு காலத்தில் நான், என் நண்பர்கள், அவள், அவள் அக்கா எல்லோரும் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள் என்பதால் பார்த்த உடனே எல்லோரும் எல்லோருடனும் பேசிக் கொண்டோம் – அவளை தவிர…

நீண்ட பேச்சின் முடிவில் அவளின் அக்காவே, சொக்கு என் தங்கையை என் அம்மாவின் வீட்டில் விட்டுவிடு என்று கேட்டு கொண்டார்….   அந்த சந்தர்பத்தை சந்தோஷப்பட்டும், சந்தோஷப்படாமலும் ஏற்றுக் கொண்டு அவளை என் நண்பர்கள் புடை சூழ Yamaha bike – ல் வைத்து அவள் அம்மா வீட்டிற்கு கூட்டி சென்றேன்.

எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த ராமர் நீல வண்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள் அன்று எதேச்சையாக…

அவள் சுவாசித்த காற்று கூட என்னருகில் வராத வண்ணம் இடைவெளி விட்டு உட்கார்ந்து வந்தாள். என் நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் நிறைய பேச வேண்டும் என ஆசை…. இருந்தாலும்   ஒரு வார்த்தை கூட அவள் என்னிடம் பேசவில்லை…  நானும் பேசவில்லை அவளிடம்… நானோ குற்ற உணர்ச்சியில் பேச முயற்சிக்கவில்லை அவளுக்கோ என்னை திரும்ப பார்த்த சந்தோஷத்தில் பேச முடியவில்லை.

அவளை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த சந்தோஷத்தில், சந்தித்த திருப்தியில் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளை அவள் வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டுவிட்டு அவள் நினைவாக வீடு வந்து சேர்ந்தேன்… அவளை திரும்ப பார்த்தது முதல் அவள் நினைவாகவே இருந்தேன்… அவள் அவளுக்காக வாழ நினைக்காமல் இன்றும் எனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள் என்ற நினைப்புடன் நானும் சரி, என் வீட்டில் அடுத்த முறை திருமண பேச்சு எடுக்கும் போது முடிவாக பேசிக் கொள்ளாலம் என இருந்து விட்டேன்….

1999 Feb.12 – எனக்கு என் அத்தை திருநெல்வேலியில் இருந்து ஒரு பெண்ணின் புகைப்படம் அனுப்பிய நாள்….  அன்று இரவு முதன் முறையாக என் அப்பா என்னிடம் கேட்டதும், சொன்னதும் கீழே;

  • சொக்கு நான் இதுவரை உன்னிடம் எதுவும் கேட்டதில்லை… இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்…
  • இந்தப் பெண் வேண்டாம் என்று கூறினால் நான் இனிமேல் உனக்கு வேறு எந்தப் பெண்ணையும் பார்க்க மாட்டேன் என தீர்மானமாக சொல்லிவிட்டார் (ஏதோ சொல்லமுடியாத காரணத்திற்க்காக நான் கடந்த 2 வருடங்களாக திருமணத்தை தள்ளி போட்டு வந்ததினால் வந்த வேதனையின் வெளிப்பாடு)

நான் பார்க்கும் பெண்களை காரணம் இல்லாமல் நிராகரித்த கால கட்டத்தில் என் காதலை என் அப்பாவிடம் நேரிடையாக சொல்ல முடியாத சூழ்நிலையில், நான் ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுக்க ஆசைப்படுகின்றேன் அல்லது ஒரு வாய் பேசாத பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க ஆசைப்படுகின்றேன் அல்லது ஒரு திக்கு வாய் உள்ள பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க ஆசைப்படுகின்றேன். அதனால் அப்படிப்பட்ட குறையுள்ள  பெண்களை பாருங்கள் என்று தீர்மானமாக கூறி விட்டேன். இதை கேள்வி பட்ட என் தங்கை (பெரியப்பா மகள்) என் முடிவு தவறு என்று பெரிய அளவில் பிரச்சினை பண்ணி விட்டாள்… அதையும் மீறி அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்த போது எனக்கு ஏதோ ஒரு பெரிய குறை இருக்கிறது என்று என்னை குறையுள்ள பெண்கள் நிராகரித்த சம்பவங்களும் நடந்தன….

என் தந்தை திருமண பெண் பற்றி என்னிடம் தீர்மானமாக சொல்லிய அன்றிரவு

எனக்கு உயிர் கொடுத்து, உயிராய் பார்த்து கொள்ளும் தந்தையா?

அல்லது

என்னை அவளின் உயிரை விட மேலானவனாக கருதிய அப்பாவி ஏழை பெண் காதலியா?

–    யார் முக்கியம் என்று மிக தீவிரமாக யோசித்தேன்…

தற்கொலை பண்ணிக் கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். தற்கொலை பற்றி யோசித்த உடனே என் உயிர் நண்பன் ராம் 1996 – ம் வருடம் சொன்ன விஷயம் தான் உடனே Flash ஆனது….

தற்கொலை பண்ண வேண்டுமானால்….

கிணற்றில் குதித்து உயிரை விடலாம்

ஆற்றில் குதித்து உயிரை விடலாம்

கடலில் குதித்து உயிரை விடலாம்

Train முன் குதித்து உயிரை விடலாம்

Current – ல் கை வைத்து உயிரை விடலாம்

மருந்து குடித்து உயிரை விடலாம்  – இப்படி நூறு வழி இருக்கு மச்சான்….

செத்து போகவே நூறு வழி இருக்கும் போது உயிர் வாழ ஒரு வழி இருக்காதா? யோசி மச்சான் – என்று எனக்கு அவன் சொன்ன அறிவுரை தான் ஞாபகத்திற்கு வந்தது….

ஒரு கட்டத்தில் நன்கு யோசித்த பிறகு, எனக்கு என் வாழ்க்கையில் எல்லாமும் ஆன என் தந்தைக்கு எதிராக ஒரு முடிவு எடுக்காமல், என் தந்தை சொன்ன பெண்ணை அவர் திருப்திக்கு முதலில் பெண் பார்ப்போம் என்று முடிவு செய்து பெண் பார்க்க ஒப்புக்கொண்டேன்.

என் காதலி என்ன ஆனாள்?

அடுத்த கடிதத்தில் விரிவாக…..

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =